கட்டிய லுங்கியுடன் அதிகாலை 3 மணிக்கு விமானம் ஏறி தாய்லாந்துக்கு தப்பிய வங்கதேச முன்னாள் அதிபர்!
வங்கதேச முன்னாள் அதிபரும் அவாமி லீக் தலைவருமான முகமது அப்துல் ஹமீத் தாய்லாந்துக்கு விமானம் மூலம் தப்பிச் சென்ற சம்பவம் அந்நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
டாக்கா போஸ்ட்'டின் படி, ஹமீத் கடந்த வியாழக்கிழமை அதிகாலை 3:00 மணிக்கு தனது மனைவி, சகோதரர் மற்றும் மைத்துனருடன் தாய் ஏர்வேஸ் விமானத்தில் ஏறினார்.
ஒரு காலத்தில் சக்திவாய்ந்த அதிபராக இருந்தவர் தப்பிக்கும்போது வெறும் லுங்கி மட்டும் அணிந்திருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. அவர் தப்பிச் செல்வது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
2024 ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர்கள் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக ஹமீத் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பியது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
81 வயதான முகமது அப்துல் ஹமீது, 2013 முதல் 2023 வரை வங்கதேசத்தின் அதிபராக இருந்தார்.
ஹமீத் தப்பியது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தை விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. ஹமீதுக்கு நாட்டை விட்டு வெளியேற உதவியவர்களும், அவருடன் ஒத்துழைத்தவர்களும் பிடிபடாவிட்டால், தான் பதவி விலகுவதாக உள்துறை ஆலோசகர் முகமது ஜஹாங்கிர் ஆலம் சவுத்ரி தெரிவித்தார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் இடைக்கால அரசாங்கம் அவாமி லீக்கைத் தடை செய்த பிறகு ஹமீத் நாட்டை விட்டு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.























