மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலதாமதம் செய்யும் உறுப்பினர்களின் பதவி பரிக்கப்படும்
இலங்கை
”மக்களால் தெரிவுசெய்யப்படும் இ.தொ.கா உள்ளூராட்சி மன்றம் உறுப்பினர்கள், மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்காமல் காலதாமதம் காட்டுவார்களானால் அவர்களின் உறுப்பினர் பதவி பரிக்கப்படும்” என பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
ஜீவன் தொண்டமான் தலைமையில் நேற்று(25) கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றம் தேர்தல் பிராசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது ”சம்பள பிரச்சினை தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு பேச்சு வார்த்தையினை ஆரம்பித்திருந்ததாகவும், அன்று 1700 ரூபாய் தருவதாக தாம் கூறியதாகவும், அதன் பயனாக பல்வேறு பேச்சுவார்த்தைகளை பெருந்தோட்ட நிறவனங்களுடன் நடாத்தி இறுதியாக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபாய் சம்பள உயர்வை தாம் பெற்றுக் கொடுத்ததாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தாம் அரசாங்கத்துடன் இருந்த காலப்பகுதியில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 2 இலட்சம் காணி உரிமைகளை வழங்குவதற்கு 4 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டினை மேட்கொண்டிருந்ததாகவும், எங்களுடைய மக்களுக்கு வீட்டுரிமையும், காணி உரிமையினையும் வழங்குவதே அவர்களுக்கான நிரந்தர தீர்வாகும் எனவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் கல்வி துறையை மேம்படுத்த இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 19 ஆசிரியர்களை வரவழைத்து மலையக ஆசிரியர்களுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடத்துறைகளில் விசேட பயிற்சிகளை வழங்கியதாகவும், மேலும் மலையகத்தில் உள்ள 26,000 முன்பள்ளி மாணவர்களுக்கு காலை சத்துணவு வழங்கியதாகவும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஊடாக தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு பல்வேறு நிபந்தனைகளை இ.தொ.கா விடுத்துள்ளது எனவும், மக்களால் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் வாரத்திற்கு ஒருமுறை மக்களைச் சந்தித்து கலந்துரையாடவேண்டும் எனவும், அவர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்க்க வேண்டும் எனவும், அதை மீறும் பட்சத்தில் குறித்த வேட்பாளரின் பதவி மூன்று நாட்களில் பறித்து புதிய உறுப்பினர் அந்த இடத்திற்கு நியமிக்கப்படுவர் எனவும் ஜீவன் தெரிவித்துள்ளார்.
இப்பிரசார கூட்டத்தில் இ.தொ.கா பிரதி தலைவர் அனுசியா சிவராஜா, வேட்பாளர்கள், காரியாலய உத்தியோகஸ்த்தர்கள், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






















