உலக பங்குச்சந்தைகளில் காத்திருக்கும் ரத்தக்களரி.. மீண்டும் 1987 நிலை?
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார்.
அதன்படி, இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். சீனாவின் இறக்குமதி பொருட்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி, வியட்நாமுக்கு 46 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
அதேபோன்று பல்வேறு நாடுகளுக்கும் வரிவிதிப்பையே டிரம்ப் அறிவித்தார். இதைத்தொடர்ந்து சர்வதேச பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்திந்தன. எலான் மஸ்க் உள்ளிட்ட உலகின் முதல் 500 பணக்காரர்கள் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக 208 பில்லியன் டாலர்களை இழந்தனர்.
இதற்கிடையே டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சீனா டிரம்ப் வரிவிதிப்புக்கு எதிர் வரிவிதிப்பு நடவடிக்கையாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத கூடுதல் வரி விதித்தது.
இந்நிலையில் டிரம்ப் தொடங்கியுள்ள இந்த வர்த்தக போரால் வாரத்தின் தொடங்க நாளான இன்று (திங்கள்கிழமை) சர்வதேச பங்குச்சந்தைகளில் கடுமையான தாக்கம் ஏற்படும் என பங்குச்சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
கடந்த 1987, அக்டோபர் 19 ஆம் தேதி உலகளவில் வாரத்தின் தொடக்கத்தில் பங்குச்சந்தைகள் சரிவால் உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது கருப்புத் திங்கள் (Black Monday) என குறிப்பிடப்படுகிறது. இந்நிலையில் சுமார் 37 வருடங்கள் கழித்து மீண்டும் இன்று Black Monday நிகழும் என பிரபல பங்குச் சந்தை வல்லுநர் ஜிம் கார்மர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, டொனால்ட் டிரம்ப் விதிகளின்படி செயல்படும் நாடுகளுக்கும் நிறுவனங்களுக்கும் பலன் அளிக்கவில்லை என்றால், 1987 சூழ்நிலை மிகவும் உறுதியானது. ஆனால் இந்த சரிவு நிச்சயம் பொருளாதர மந்தநிலைக்கு வழிவகுக்கும் என கூற முடியாது" என்று தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து எக்ஸ் தளத்தில் Black Monday என்ற ஹஸ்டேக் டிரண்ட் ஆகி வருகிறது.























