நான் வந்த பிறகுதான் அது நடந்ததா.. அதெல்லாம் தப்பு.. ஓபனாக பேசிய இளையராஜா..
சினிமா
"நான் திரைத்துறைக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் நான் ஒவ்வொரு ராகத்திலும் ரசித்தே இசையமைப்பேன். நான் இசையமைக்கும் பாடல் முதலில் எனக்கு பிடித்தால்தான் மற்றவர்களுக்கு பிடிக்கும். இப்படி ஒவ்வொன்றையும் ரசித்து ரசித்து செய்வதால்தான் என்னுடைய இசையை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது. வித்தியாசமாகவும் தெரிகிறது. நான் இசையமைத்த பல பாடல்கள் எனக்கே பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறது. இயக்குநரும், தயாரிப்பாளரும் கேட்கிறார்கள் என்பதற்கு மட்டும் ஒரு பாடலை கொடுத்தால் அது ரசிகர்களிடம் கண்டிப்பாக எடுபடாது என்பதுதான் உண்மை.
ரசனைதான் முக்கியம்: ஒரு பாடலுக்கு எதிர்பார்ப்பே இல்லை என்றால் அங்கு ரசனை மட்டும்தான் முக்கியமான ஒன்றாக இருக்கும். எல்லையே இல்லாத கற்பனைதான் பாடலுக்கு முக்கியம். எத்தனை ட்யூன்களை போட்டாலும் பாட்டுக்கு எது தேவையோ அதை மட்டும் கொடுப்பது எல்லாம் ஒரு யுக்திதான்.
திருக்குறள் ஏன் இரண்டு அடிகளில் ஏழு சீர்களில் இருக்கிறது. அதற்கும் குறைவாகவே அதில் இருக்கும் பொருளை தர முடியும். பல பாடல்களுக்கு நான் முதல் வரி எழுதியிருக்கிறேன். இசையமைக்கும்போது வரிகள் தானாகவே வந்துவிடுகின்றன. நான் 2000ஆம் வருடவாக்கில் வெண்பா எழுத முயற்சித்தேன். ஆனால் இலக்கணப்படி எழுதினால் நினைத்ததை என்னால் சொல்ல முடியவில்லை.
இலக்கணம் தேவையில்லை: நினைத்ததை சொல்ல வேண்டுமென்றால் இலக்கணம் தேவையில்லை. பிறகு கேப் விட்டு எழுதினேன். பாடலாசிரியர்கள், கவிஞர்களிடமெல்லாம் பேசினேன். அப்படியே அவை என்னை மெருகேற்றிவிட்டன. நான் வந்த பிறகுதான் பாடல் பாமர மக்களுக்கான மொழியில் வந்தது என்று சொல்வது தவறு. நான் வருவதற்கு முன்னரும் அப்படிப்பட்ட நிலைதான் இருந்தது. எனவே அப்படி சொல்லாதீர்கள். ஏகப்பட்ட பாடல்களை உதாரணமாக சொல்ல முடியும். அனைத்து நல்ல வார்த்தைகளும் நான் இசையமைக்கும் பாடல்களில் அதுவாகவே வந்து அமர்ந்துகொள்ளும். ரசனைதான் ஒரு பாடலுக்கு ரொம்ப முக்கியம்.
இசை தெரியும் என்று நம்பவில்லை: எந்த வேலை பார்த்தாலும் அது முழுமையாக தெரிந்தால்தான் அந்த வேலை முழுமையடையும். இப்போதுவரைக்கும் எனக்கு இசை தெரியும் என்று நான் நம்பவில்லை. அப்போ இசை தெரிந்தவர்களுக்காக நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு தேடவேண்டும். இசை தெரியாதவர் வாயில் என்ன வருகிறதோ அதை பாடுவார். இசை என்பது கணக்கு போட்டு வருவதில்லை. இசையை கட்டுக்குள் வைத்து வெளியிட்டால் அது யாருக்குள்ளும் கனெக்ட் ஆகாது. அழகோடு, இயல்போடு இருந்தால்தான் அது மக்களை சென்றடையும்"























