• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதாரச் வீழ்ச்சியே நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக மாறியது - ஜனாதிபதி ரணில்

இலங்கை

நாட்டைப் பொறுப்பேற்ற பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே தனது முதல் பணியாக இருந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் 4 அல்லது 5 வருடங்களில் நாட்டின் பொருளாதாரத்திற்கு எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களை விரைவாக எடுக்க வேண்டியிருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லை அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தலைமையக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடு தற்போது பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருவதாகவும் வங்குரோத்து நிலையில் இருந்து முழுமையாக விடுபடுவது தொடர்பாக கடன் வழங்கிய நாடுகளுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பணிகளை சர்வதேச நாணய நிதியம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதாரச் வீழ்ச்சி, நாட்டின் ஒற்றுமைக்கு மற்றொரு அச்சுறுத்தலாக மாறியதாகவும் இந்நிலை நீடித்தால் நமது நாடு பொருளாதாரம் இல்லாத நாடாக அதாவது இன்னொரு லிபியாவாக மாறிவிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், பாதுகாப்பு விசேட ஏற்பாடுகள் சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தேசிய பாதுகாப்பு சபையை சட்டபூர்வமாக்குவதற்கும் ஆயுதப்படை குழுவை நியமிப்பதற்கும் தான் எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஓய்வுபெற்ற பாதுகாப்புப் படை வீரர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த புதிய வேலைத்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கான திட்டவட்டமான வேலைத் திட்டம் இல்லாத காரணத்தினால் சில சந்தர்ப்பங்களில் துரதிஷ்டவசமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிட்டதாகவும் இது தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு உரிய தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply