• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலுக்காகவே விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது - லக்ஸ்மன் கிரியெல்ல

இலங்கை

எதிர்வரும் தேர்தல் வேலைத்திட்டத்திற்காக விசா கட்டண விவகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான லக்ஸ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து கருத்துரைத்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சுற்றுலாப்பயணிகள் மற்றும் வெளிநாட்டில் இருந்து நாட்டிற்கு வரும் ஒருவருக்கு அறவிடப்படும் விசா கட்டணத்தை அதிகரிக்க பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.

ஆனால் வீ.எப்.எஸ். என மேலதிகமாக 20, 21 டொலர் கட்டணமாகவும் அறவிடப்படுகிறது. இதற்கு பாராளுமன்றத்தில் அனுமதி பெறப்படவில்லை.

இந்த விடயத்தில் பாராளுமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்றால் அதனைத் தனியாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் விசா கட்டண அதிகரிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையுடன் சட்ட விரோதமான முறையில் இணைக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக நிலையியற் கட்டளையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த விடயத்தில் அமைச்சரவையில் தீர்மானித்து அனுமதிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதுவும் இதற்கு நாடாளுமன்றம் அனுமதிக்கத தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் தவறான விடயமாகும்” என லக்ஸ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply