• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர்கள் தாக்குதல் - கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் தவிப்பு

கிர்கிஸ்தான் நாட்டு தலைநகர் பிஷ்கெக்கில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் கிர்கிஸ்தான் மற்றும் எகிப்து மாணவர்களுக்கிடையே சில நாட்களுக்கு முன்பு மோதல் வெடித்தது. இதற்கிடையே வெளிநாட்டு மாணவர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதிக்குள் புகுந்த கும்பல், பாகிஸ்தான் மாணவர்கள் உள்பட வெளிநாட்டு மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.

இதையடுத்து கிர்கிஸ்தானில் உள்ள இந்திய மாணவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், வீட்டுக்குள்ளேயே இருக்கும்படியும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தால் கிர்கிஸ்தானில் இந்திய மாணவர்கள் தவித்து வருகிறார்கள். சிலர் பயத்தில் தாங்கள் தங்கியிருந்த விடுதியில் விளக்குகளை அணைத்துவிட்டு பதுங்கி இருந்துள்ளனர்.

மேலும் வெளியில் சென்றால் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் சாப்பிட செல்லாமல் இருந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ படிப்பின் இறுதியாண்டு படிக்கும் தெலுங்கானா மாணவி ஒருவர் கூறும்போது, `தாக்குதல்கள் அதிகரித்ததை அடுத்து, தலைநகரில் உள்ள தனியார் விடுதியில் இருந்து பல்கலைக்கழக விடுதிக்கு மாற்றப்பட்டோம்.

பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு இருந்தாலும், பிஷ்கெக்கில் நடக்கும் வெறுப்புணர்வு காரணமாக நாங்கள் அச்சத்தில் இருக்கிறோம். தொடர்ந்து தாக்குதல்கள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. இது மாணவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் வெளிநாட்டு மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று பாகிஸ்தான் ஊடகங்களை கிர்கிஸ்தான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கிர்கிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறும்போது, வெளிநாட்டு ஊடகங்கள், சமூக வலைப்பின்னல்கள், குறிப்பாக பாகிஸ்தானில் உள்ள சிலர் கிர்கிஸ்தானில் உள்ள நிலைமை குறித்து உண்மைக்கு புறம்பான,முற்றிலும் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
 

Leave a Reply