• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மன்னார்- நடுக்குடா பகுதியில் சுமார் 160 ஏக்கர் காணிகள் அபகரிப்பு

இலங்கை

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, நடுக்குடா பாவிலான்பாட்டன் குடியிருப்பு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான சுமார் 160 ஏக்கர் பனை மரங்களை கொண்ட காணிகள் சட்ட விரோதமான முறையில் இந்திய தனியார் கம்பெனி ஒன்றிற்கு கனிய மணல் அகழ்வுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக  பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து வரும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,குறித்த காணியில் உள்ள பல நூற்றுக்கணக்கான பனை மரங்கள் அழிக்கப்பட்டு கனிய மணல் அகழ்வு இடம் பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு  வருகின்றது.இதனால்  பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது குறித்த காணிக்கான சுற்று வேலி அமைக்கும் நடவடிக்கை   முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மேலும் குறித்த காணியின் உரிமையாளர்கள் அங்கு சென்ற நிலையில் பொலிஸார் கைது செய்வோம் என அச்சுரூத்துவதாகவும், அடாவடித்தனத்துடன் காணி அபகரிப்பு இடம் பெற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக காணிகளே  அத்துமீறி  பிடிக்கப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.இவ்விடயம் குறித்து தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் பொலிஸார் எவ்வித நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை.

இதனால் எமது சமூகமும் பாரிய அளவில் பாதிப்பை எதிர்நோக்கி வருகின்றனர்.பனை உற்பத்தியை நம்பி வாழ்ந்து வந்த நிலையில் தற்போது பனை மரங்கள் உள்ள காணி அபகரிக்கப்பட்டு பனை மரங்களும் வெட்டப்பட்டு வருகிறது.

தற்போது எமது வாழ்வாதாரத்திற்கான பனை மரங்களும் வெட்டப்பட்டுள்ளது.தனியார் நிறுவனம் ஒன்றிற்கு மணல் அகழ்வுக்காக குறித்த காணியை விற்பனை செய்துள்ள நிலையில் தற்போது எங்களை உள்ளே நுழைய விடாது காணிக்கு சுற்று வேலி அடைக்கப்பட்டு வருகின்றது.

எனவே உரிய உயர் அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு எமக்கு  எமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த காணியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Leave a Reply