• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் - அரசாங்கம் மீது டிலான் குற்றச் சாட்டு

இலங்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்வைத்த கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை என நாடாளுமன்ற  உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன், விசாரணைகள் தொடர்பில் கத்தோலிக்க சபைக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் நம்பிக்கையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மூன்று நாள் சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை என்பதுடன், குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தொடர்பில் பாரிய சந்தேகம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், நீதியரசர் விஜித் மலல்கொட தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் ஒரு விதமாகவும், பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பிறிதொரு எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்பில் ஆளும் தரப்பினர் முறையற்ற கருத்துக்களை குறிப்பிடுவதாகவும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட கோட்டபய ராஜபக்ஷ உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதலின் உண்மையை பகிரங்கப்படுத்துவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதாகவும் கத்தோலிக்க சபைக்கு வாக்குறுதி வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதியை கோட்டபய ராஜபக்ஷவும், அவர் தலைமையிலான அரசாங்கமும் நிறைவேற்றவில்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply