• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொங்கியெழுந்த ஈரான் - அடுத்தது என்ன?

இஸ்ரேல் மீது மிகப் பாரிய ஒரு தாக்குதலை நடத்தியிருக்கிறது ஈரான். ஏப்ரல் முதலாந் திகதி சிரியாவில் ஈரானியத் தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாகவே குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஈரான் அறிவித்தும் உள்ளது. அது மாத்திரமன்றி தங்கள் பதில் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. தாக்குதலின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் குறைவாக இருந்தாலும், குறித்த தாக்குதல் சொல்லும் சேதி மிக மிகப் பலமானது.

இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலைத் தொடுக்க ஈரான் முடிவு செய்தது ஓரளவு எதிர்பார்க்கப்பட்டதே என்றாலும் அந்தத் தாக்குதல் உலகத்தை ஒரு தடவை உலுக்கி எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் அணுவாயுதங்களைக் கொண்ட ஒரே நாடாக விளங்கும் இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை மேற்கொண்டதன் மூலம் பிராந்தியத்தில் ஈரானின் செல்வாக்கு வெகுவாக உயர்ந்துள்ள அதேவேளை மேற்குலகின் அளவுக்கு அதிகமான கண்டனத்தையும் அது சந்தித்துள்ளது. மறுபுறம், அடுத்தது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

பிராந்தியத்தில் உள்ள ஈரானின் இலக்குகளும், ஈரான் ஆதரவு இலக்குகளும் இஸ்ரேலினதும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகினதும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றமை இரகசியமான சேதி அல்ல. தவிர, ஈரான் நாட்டின் உள்ளேயே அதன் அணுசக்தித் துறையை இலக்கு வைத்து பல தாக்குதல்களை இஸ்ரேலும் அதன் உளவாளிகளும் கடந்த காலத்தில் நடத்தி இருக்கிறார்கள். இத்தகைய தாக்குதல்களுக்கான பதிலடிகளை கடந்த காலத்தில் தனது ஆதரவு பெற்ற இயக்கங்கள் மூலம் ஈரான் வழங்கியிருந்தது. இந்நிலையில் ஏப்ரல் 13ஆம் திகதி சனிக்கிழமை இரவு ஈரான் முதன்முதலாக நேரடித் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கடந்த வருடம் அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி பலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இஸ்ரேல் தொடர்ந்த போர் 6 மாதங்களையும் கடந்து தற்போதும் நீடித்து வருகின்றது. உலக நாடுகளின் பலத்த கண்டனங்களையும் பொருட்படுத்தாது தொடரும் இந்தப் போரில் இதுவரை 40,000க்கும் அதிகமான உயிர்கள் பலி கொள்ளப்பட்டு விட்டன. இந்த நாசகாரப் போரை உடனடியாக நிறுத்துமாறு ஈரான் உள்ளிட்ட நாடுகள் கேட்டுக்கொண்ட போதிலும் இஸ்ரேல் அதனை  உதாசீனம் செய்தவாறு தனது நடவடிக்கைகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகின் ஆசீர்வாதத்தோடு தொடர்ந்து வருகின்றது.

கடந்த 13ஆம் திகதி ஈரான் மேற்கொண்ட தாக்குதலின் போதும் மேற்குலகின் ஆதரவு வெளிப்பட்டுள்ளது. 300க்கும் மேற்பட்ட 'ட்ரோன்கள்', எறிகணைகள், கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகள் என ஈரான் மேற்கொண்ட தாக்குதலில் 99 வீதமானவை நிர்மூலம் செய்யப்பட்டு விட்டன என இஸ்ரேல் அறிவித்தாலும் ஓரிரு ஏவுகணைகள் இஸ்ரேலிய இலக்குகளைத் தாக்கவே செய்திருந்தன. தனது தாக்குதல் முறியடிக்கப்பட்டுவிடும் எனத் தெரிந்தேதான் ஈரான் தாக்குதலைத் தொடுத்திருந்தது. அது இஸ்ரேல் மீது போர் தொடுக்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, ஒரு எச்சரிக்கை நடவடிக்கையே.

முறியடிப்புத் தாக்குதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், யோர்தான், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளும் களமிறங்கி உதவின என்பது நிதர்சனமான உண்மை. அதேவேளை, இந்த முறியடிப்புத் தாக்குதலுக்காக மிகப் பாரிய செலவை இஸ்ரேல் சந்தித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்கென 1.06 பில்லியன் முதல் 1.33 பில்லியன் டொலர் செலவினம் ஏற்பட்டதாக இஸ்ரேலியப் படைத்துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று மணி நேரத் தாக்குதலை முறியடிக்க இவ்வளவு பெருந் தொகை செலவிடப்பட்டமை கணக்கில் கொள்ளப்பட வேண்டிய விடயமே. அதேவேளை, தாக்குதலுக்காக ஈரான் இந்தத் தொகையில் பத்தில் ஒரு விழுக்காட்டைக் கூடச் செலவழித்து இருக்காது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஈரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி உண்டு எனத் தெரிவித்துள்ள இஸ்ரேல், ஈரான் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவிக்குமாறு உலக நாடுகளைக் கோரியுள்ளது. இது தொடர்பில் 32 நாடுகளுக்குக் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதாக இஸ்ரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கற்ஸ் தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி ஈரானிய இஸ்லாமியப் புரட்சிகர இராணுவத்தை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனம் செய்யுமாறும் உலக நாடுகளை இஸ்ரேல் கோரியுள்ளது.

இஸ்ரேலின் பதில் தாக்குதல் அறிவிப்புத் தொடர்பில் பதிலளித்துள்ள ஈரான், இஸ்ரேலியத் தரப்பில் இருந்து ஈரான் மீதோ, ஈரானிய இலக்குகள் மீதோ தாக்குதல் நடத்தப்பட்டால் பதிலடி தர தாம் முன்னரைப் போல 12 நாட்கள் காத்திருக்கப் போவதில்லை எனவும் நொடிக் கணக்கில் பதில் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அந்தத் தாக்குதலில் எதிர்பார்த்திராத ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் எனவும் எச்சரித்துள்ளது.

உண்மையிலேயே ஈரான் மீதான இஸ்ரேலின் பதில் தாக்குதல் நிகழுமா? அவ்வாறு நிகழ்ந்தால் அது எத்தகைய தாக்குதலாக அமையும். பதிலடியாக ஈரான் மேற்கொள்ளவுள்ள தாக்குதல் எவ்வாறு அமையும். அவ்வாறு பதில் தாக்குதல் நிகழ்ந்தால் இரு நாடுகளுக்கும் இடையில் நேரடிப் போர் மூளுமா? என்றவாறான கேள்விகள் பொது வெளியில் எழுப்பப்பட்டு வருகின்றன.

தற்போது பலஸ்தீன மண்ணில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் தாக்குதல்கள் குறிப்பிட்ட இலக்கை இன்னமும் எய்தவில்லை என்பது தெரிந்ததே. ஹமாஸ் இயக்கத்தை முற்றாக அழிப்பது, பணயக் கைதிகளாக உள்ள அனைவரையும் சிறை மீட்பது என்ற இலக்குகளுடேனேயே இஸ்ரேலியப் படைகள் களம் இறங்கின. ஆறு மாதங்கள் நிறைவடைந்த பின்னரும் இஸ்ரேல் தனது இலக்கில் இன்னமும் முழுமையாக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் ஈரானை வலிந்து போருக்கு அழைத்து, அதன் விளைவாக அமெரிக்கா போரில் இணையும் என்பதே இஸ்ரேலின் எதிர்பார்ப்பு. ஆனால், ஈரான் மிகுந்த நிதானத்துடன் தனது தாக்குதலை நடத்தி இஸ்ரேலின் எண்ணத்தில் மண்ணைத் தூவி உள்ளது. ஈரானின் நிதானமான நடவடிக்கை காரணமாக அமெரிக்கா தலைமையிலான மேற்குலகமும் ஈரான் மீதான கண்டனங்களுடன் தமது நடவடிக்கைகளை மட்டுப்படுத்திக் கொண்டுள்ளது.

ஆனால், யுத்த வெறி கொண்ட இஸ்ரேலிய அரசாங்கம் எதனையும் இலகுவில் விட்டு விடுவதில்லை. ஈரானுக்கு எதிராகப் பதிலடி உண்டு என்று அறிவித்த பின்னர் எதுவும் செய்யாமல் இருந்துவிட்டால் அது வெட்கக்கேடான விடயமாகவே பார்க்கப்படும். அது உள்நாட்டிலும் அரசாங்கத்துக்குச் சிக்கல்களை உருவாக்கலாம்.
 
ஏற்கனவே காஸாவில் போர் நடைபெறும் முறைமை தொடர்பில் அமெரிக்கா தொடர்ச்சியாக தனது அதிருப்தியை வெளியிட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது. தற்போது, ஈரானுக்கு எதிரான பதிலடி தொடர்பிலும் பொறுமை காக்குமாறு அமெரிக்கா இஸ்ரேலிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அமெரிக்காவின் ஆலோசனைகளைச் செவிமடுக்காமல் காஸாவில் அராஜகம் புரிவதைப் போல, ஈரான் விடயத்திலும் இஸ்ரேல் செயற்படுமானால் மத்திய கிழக்கில் மற்றொரு போரை யாராலும் தடுத்துவிட முடியாமல் போகும் என்பதே கசப்பான உண்மை.

சுவிசிலிருந்து சண் தவராஜா
 

Leave a Reply