• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே நாளில் கொட்டித்தீர்த்த மழை - ரூ 8,300 கோடி அளவுக்கு சேதம்

பேய் மழைக்கு ஐக்கிய அமீரகத்தின் துபாய் மாகாணம் மொத்தமாக மூழ்கிய நிலையில், சேதம் மட்டும் ரூ 8,300 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. துபாய் மாகாணத்தில் ஒராண்டுக்கான மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததை அடுத்து, சாலைகள், விமான நிலையம் என வெள்ளத்தில் மூழ்கியது. குடியிருப்புகள் வணிக வளாகங்கள், தொழில் கூடங்கள் அனைத்திலும் வெள்ளம் புகுந்துள்ளது.
  
இதுபோன்ற நெருக்கடியை எதிர்கொள்ள தயார் நிலையில் இல்லாத உள்கட்டமைப்பு மற்றும் பெருவெள்ளத்தை தடுக்க போதுமான திட்டமின்மையும் துபாய் மாகாணத்தை மிக மோசமான சூழலில் தள்ளியுள்ளது.

வெள்ளம் வடியத்தொடங்கியதை அடுத்து துபாய் மாகாணம் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. சுமார் 100 மணி நேரம் ஸ்தம்பித்துப் போன தொழில்களை மீட்டெடுக்க, பெரும் கோடீஸ்வரர்கள் அவசரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் சகஜ நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றே கூறப்படுகிறது. இதனிடையே காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கணிப்பில், சுமார் 1 பில்லியன் டொலர் மதிப்பிலான சேதம் ஏற்படிருக்கலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.

இந்திய பண மதிப்பில் ரூ 8,339 கோடி அளவுக்கு தொழில் பாதிப்பு, மிக மோசமாக சேதமடைந்துள்ள குடியிருப்புகள், நீரில் மூழ்கியுள்ள வாகனங்கள் மற்றும் வெள்ளம் புகுந்துள்ள கடைகள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனிடையே, ஐக்கிய அரபு அமீரக நிர்வாகம் தங்கள் சொந்த பணத்தை செலவிடவும் தயாராகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, இதுபோன்ற ஒரு சூழல் ஏற்படாமல் இருக்க அல்லது சேதத்தை குறைக்க போதுமான திட்டங்களை உருவாக்க ஐக்கிய அமீரக ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே, ஊழியர்கள் மீண்டும் பாதுகாப்பாக பணியாற்றும் நிலைக்கு திரும்பும் வரை வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. மேலும் மாகாணம் முழுவதும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்களில் 15 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே வீட்டுக் காப்பீட்டைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. பிரித்தானியாவில், சுமார் 75 சதவீத மக்கள் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு வகையான வீட்டுக் காப்பீட்டைக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Reply