• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் 3 பெண் நோயாளிகளிடம் அத்துமீறிய மருத்துவர்

பிரித்தானியாவில் பெண் நோயாளிகளிடம் அத்துமீறிய விவகாரத்தில் மருத்துவர் ஒருவர் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார். ஹவன்ட், ஹாம்ப்ஷயர் பகுதியில் பொது மருத்துவராக செயல்பட்டு வந்த மோகன் பாபு என்பவர் பெண் நோயாளிகளை குறிவைத்து வந்துள்ளார். இதே மருத்துவமனையில் தான் இவரது மனைவியும் பணியாற்றி வந்துள்ளார்.
 
47 வயதான மோகன் பாபு ஒரு முறை கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடம் முகம் சுழிக்கும் வகையில் பேசியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், தற்போது 3 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார்.

மருத்துவர் மோகன் பாபு மீது 19 வயது இளம் பெண் உட்பட மூன்று நோயாளிகள் புகார் அளித்திருந்தனர். நீதிமன்றத்தில் அவர்கள் மருத்துவர் மோகன் பாபுவுக்கு எதிராக சாட்சியமும் அளித்துள்ளனர்.

மருத்துவத்துறைக்கே களங்கம் மோகன் பாபுவை போன்றவர்கள் என அவரிடம் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர் தெரிவிக்கையில், எனது வாழ்க்கையை சிதைத்தவர் அந்த மருத்துவர், அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தாம் மீண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சுமார் 20 ஆண்டுகள் மருத்துவராக பணியாற்றியுள்ளவர் மோகன் பாபு. இவரது மனைவியின் பரிந்துரையின் பேரிலேயே தொடர்புடைய மருத்துவமனையில் பொது மருத்துவராக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் நான்கு மாதங்களில் அவர் மீது முதல் புகார் பதிவாகியுள்ளது. மிக விரைவிலேயே அடுத்த புகாரும் பதிவாகியுள்ளது. 57 வயதான புற்றுநோய் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரிடமே மோகன் பாபு அருவருப்பாக நடந்து கொண்டுள்ளார்.

2020 பிப்ரவரி மாதம் தம்மிடம் சிகிச்சைக்கு வந்த 19 வயது இளம் பெண்ணை தமது அறையில் வைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். நீதிமன்ற தரவுகளின் அடிப்படையில் 2001ல் மருத்துவராக அங்கீகாரம் பெற்றுள்ள மோகன் பாபு 2006ல் பிரித்தானியாவில் வேலை தேடி வந்துள்ளார்.

தற்போது அவர் குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், பொது மருத்துவர்களுக்கான கவுன்சில் அவரை நீக்கியுள்ளது. மேலும், ஆயுள் முழுவதும் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் அவர் பெயர் பதியப்பட்டிருக்கும். 
 

Leave a Reply