• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுதந்திரக் கட்சியை அரசாங்கம் சுவீகரிக்க முயற்சி - தயாசிறி குற்றச்சாட்டு

இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை இந்த அரசாங்கம் சுவீகரிக்கவே முயற்சிக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திற்கு முன்பாக இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் சுதந்திரக் கட்சியை எடுத்துக்கொண்டு செல்லவே முயற்சிக்கின்றது.

நான் உட்பட துஷ்மந்த மித்ரபால, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகிய பலர் எதிர்க்கட்சியிலேயே இருக்கின்றோம்.

இந்தக் கட்சியை விட்டுச்சென்ற 9 பேர் இன்று அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி வகிக்கின்றனர்.
9 பேரின் விருப்பத்துக்கு இந்த கட்சியை நடத்த முடியாது.

நீதிமன்றத்தின் உத்தரவை நாம் மதிக்கின்றோம். ஆனால், அவர்கள் இன்று நாட்டினுடைய நிலைமையை பற்றிச் சிந்திக்க வேண்டும்.

கட்சி என்ற ரீதியில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் போது, அதனை ஏனைய உறுப்பினர்கள் குழப்புவார்களாக இருந்தால் அதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்.

இங்கு கூடியிருக்கின்ற ஒவ்வொரு உள்ளங்களும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினுடையவை. கட்சி அலுவலகத்தை மூடியதை அறிந்து ஓடோடி வந்துள்ளனர்.

இந்த தடை உத்தரவால் எங்களுக்கு மே தினத்தை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அநியாயம்.

தேவையற்ற குப்பைகளை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்கின்றனர். நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தற்போது நாங்களே பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டாவிருந்த மே தினத்தை நாசமாக்கியது யார்?

ஆகவே, எமது கட்சியை தொடர்ந்தும் ஆராக்கியத்துடன் கொண்டுச் செல்ல சிறந்த தீர்ப்பை வழங்குமாறு நாட்டிலுள்ள நீதிபதிகளிடம் மிகவும் அன்புடனும் கௌரவத்துடனும் கேட்டுக்கொள்கின்றேன்” என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply