• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புரட்டி எடுத்த பிரபல நடிகர் -ரத்த காயத்துடன் எம்.எஸ்.வி : இசையில் சாதிக்க இதுதான் காரணமா?

சினிமா

இசையில் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், நடிப்பில் ஆர்வம் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், நடிப்பதற்காக தான் திரையுலகை நோக்கி வந்துள்ளார்.

இசை உலகில் மெல்லிசை மன்னராக திகழ்ந்த எம்.எஸ்.விஸ்வாதன் நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் தான் திரையுலகிற்கு வந்துள்ளார். ஆனால் அவரின் ஆர்வம் இசை உலகிற்கு திரும்ப முக்கிய காரணமாக இருந்தவர் நடிகர் டி.எஸ்.பாலையா என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

தமிழ் சினிமாவில் சுமார் 25 வருடங்களுக்கு மேலாக தனது இசையால் பலரையும் கட்டிப்போட்டவர் தான் எம்.எஸ்.விஸ்வநாதன். மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படும் இவர், பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு தனது இசையால் வெற்றியை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், கவியரசர் கண்ணதாசனுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இசையில் பல்வேறு சாதனைகள் படைத்திருந்தாலும், நடிப்பில் ஆர்வம் கொண்ட எம்.எஸ்.விஸ்வநாதன், நடிப்பதற்காக தான் திரையுலகை நோக்கி வந்துள்ளார். நாடக உலகம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், நடிகர் டி.எஸ்.பாலையாவின் நாடக குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தார். நாடக பாடல்களுக்கு மெட்டு போடுவது பின்னணி இசை வாசிப்பது என அங்கே வேலைகளை செய்துகொண்டிருந்தார்.

அதே சமயம் அவருக்குள் இருந்த நடிகன் அவ்வப்போது எட்டி பார்த்ததால், நாடகத்தின் இடைவேளைக்கு பிறகு ராஜா மற்றும் அனுமன் வேஷங்களை ஏற்க தொடங்கியுள்ளார். அப்படி ஒருநாள் ராமாயண நாடகம் நடந்துகொண்டிருந்தபோது, சீதையின் சுயம்வரம் காட்சி நடந்துகொண்டிருந்தது. இதில் சீதையை பெண் பார்க்க வந்த பல ராஜாக்களில் ஒருவராக எம்.எஸ்.வியும் நடித்துள்ளார்.

இந்த காட்சியில், ராமன் தான் வில்லை உடைக்க வேண்டும் என்பதால், மற்ற ராஜாக்கள் தங்கள் வில் உடையாமல் இருக்க வேண்டும் என்பாதற்காக ஒருமுறைக்கு இருமுறை பரிசோதனை செய்து அதன்பிறகு நடிக்க தொடங்கினர். அதேபோல் எம்.எஸ்.விஸ்வநாதனும் தனது வில்லை பரிசோதனை செய்து நடிக்க தொடங்கினார். ஆனால் அவர் தனது வில்லில் கை வைத்தவுடன் அது திடீரென உடைந்துவிட்டது.

எம்.எஸ்.வி வில் உடைந்ததை பார்த்த பார்வையாளர்கள், இந்த ராஜா தான் வில்லை உடைத்துள்ளார். சீதையை அவருக்கே கட்டி கொடுங்கள் என்று சொல்ல தொடங்கினர். இதனால் அரங்கத்தில் கூச்சல் அதிகரித்த நிலையில், தூரத்தில் இருந்து எம்.எஸ்.வியை டி.எஸ்.பாலையா பார்த்து முறைத்துக்கொண்டே இருந்துள்ளார். கூச்சல் அதிகமானதால் திரை மூடப்பட்ட நிலையில், கோபத்தின் உச்சத்தில் இருந்த டி.எஸ்.பாலையா எம்.எஸ்.விஸ்வநாதனை வெளுத்து வாங்கியுள்ளார்.

தனது வாழ்நாளில் இப்படி ஒரு அடியை வாங்கிடாத எம்.எஸ்.வி, ரத்த காயத்துடன் இருந்த நிலையில், இனிமேல் இங்கிருந்தால் சரியாக இருக்காது என்று நினைத்து அன்று இரவே நாடக குழுவில் இருந்து வெளியேறி சேலம் மாடர்ன் தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு பர்மா ராணி படம் ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தது. இந்த படத்திற்கு இசையமைத்த கே.வி.மகாதேவனிடம் கோரஸ் பாட வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால் அவரின் இசை திறமை தெரிந்த கே.வி.மகாதேவன் கோரஸ் பாட வாயப்பை மறுத்துள்ளார்.

அதன்பிறகு இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமணிடம் உதவியாளராக சேர்ந்த எம்.எஸ்.வி, அதன்பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக பல ஹிட் படங்களை கொடுத்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.
 

Leave a Reply