• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காலத்தால் அழியாத பாலச்சந்தரின் அவள் ஒரு தொடர்கதை

சினிமா

ஆண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளியான அந்த கால கட்டத்தில் ஒரு உழைக்கும் பெண்ணை மையமாக வைத்து உருவான படம்.

பெண் கதாபாத்திரத்தை மையமாக வைத்து 1974ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற படம் அவள் ஒரு தொடர்கதை. ஆண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து திரைப்படங்கள் வெளியான அந்த கால கட்டத்தில் ஒரு உழைக்கும் பெண்ணை மையமாக வைத்து உருவான படம்.

நடிகர்கள்

படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சுஜதா கவிதா என்ற பெயரில் நடித்திருந்தார். நடிகர் கமல்ஹாசன் விகடகவி கோபால் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் ஜெய்கணேஷ், ஸ்ரீபிரியா, படாபட் ஜெயலட்சுமி, விஜயகுமார், ஜெய்கணேஷ், லீலாவதி, எம்.ஜி.சோமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கதை

கவிதாவான சுஜாதாவை படத்தின் ஆரம்பத்தில் திமிர் பிடித்த பெண்ணாக இயக்குநர் பாலச்சந்தர் காட்டி இருந்தார். கண்டிப்பாக இருக்கும் கவிதாவை குடும்பத்தினருக்கு கூட பிடிக்காது. படத்தில் கவிதாவின் தந்தை சிறு வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறி விடுவார். எப்போதும் பொறுப்பு இல்லாமல் குடிபோதையில் இருக்கும் அண்ணன், விதவை தங்கை, கண் தெரியாத தம்பி, அண்ணனின் 3 குழந்தைகள், அண்ணி , தன் தாய் என மொத்த குடும்பத்தையும் தாங்கும் பெண்ணாக இருப்பார் கவிதா. கவிதாவின் தோழி எப்போதும் மாடனாக இருப்பாள். அவளுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இருக்காது. எதுவாக இருந்தாலும் படாபட் என கடந்து விடுவாள்.

இதற்கிடையில் கவிதாவின் காதலன் திருமணத்திற்கு ஆர்வம் காட்டினாலும் குடும்ப சூழலை எண்ணி கவிதா திருமணத்தை தள்ளி போடுவாள். குடும்பத்தில் அண்ணியின் உடல் நிலை மோசமாக மருந்து வாங்க கவிதாவிடம் பணம் கேட்பர் ஆனால் தரமுடியாது என்று சொல்லும் கவிதா தம்பியை அழைத்து லிப்ஸ்டிக் வாங்க சொல்லுவாள். இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அண்ணி உடலை விட லிப்ஸ்டிக் பெரிசா என அவளை கொச்சை படுத்தும் விதத்தில் கேள்வி கேட்பார்கள்.

அப்போது கவிதா இந்த கேள்வி வரும் நாளை தான் எதிர்பார்த்து காத்திருந்தேன் என பேங்க் பாஸ்புக்கை எடுத்து காட்டுவாள். அதில் தம்பி, தங்கை, அண்ணன் குழந்தைகளுக்காக பணம் சேர்த்து வைத்திருப்பார். அதோடு தனது ராஜினாமா கடிதத்தை காட்டி என் அண்ணன் என்றைக்கு குடும்ப தலைவனாக பொறுப்பேற்று கொள்வானோ என்ற ஏக்கத்தில் உள்ளேன். அன்றைக்கு நான் ராஜினாமா கடிதத்தை கொடுத்து விடுவேன் என்பாள்.

இதற்கிடையில் கவிதாவின் காதலன் திருமணத்திற்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பிப்பார். உடனே அவசரம் என்றால் வேறு யாரையாவது திருமணம் செய்து கொள் என்று சொல்லி திரும்புவாள். அப்போது தன் அப்பா வருவதாக லெட்டர் வந்த போது இனி நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கனவில் இருப்பாள் கவிதா. ஆனால் அந்த அப்பா சாமியாராக வந்திருப்பதை கண்டு வெறுத்து வெளியே அனுப்பி விடுவாள். வழக்கம்போல் குடும்பத்தினர் அவளை சாடுவார்கள்.

இதற்கிடையில் கவிதாவை பார்க்க காதலன் வீட்டிற்கு வருவார். அப்படி வரும் போது கவிதாவின் விதவை தங்கைக்கும், கவிதாவின் காதலுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதை கண்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைத்து விடுவாள். இதற்கிடையில் அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த விகடகவிக்கும் கவிதாவும் மனம் விட்டு பேசுவர்.

கவிதாவின் மேனேஜர் அவரது தோழியுடன் மட்டும் இல்லாமல் அவரது அம்மாவுடனும் நெருங்கி பழகி இருப்பார். இதனால் தற்கொலைக்கு முயன்ற தோழியை அழைத்து வந்து தன் வீட்டில் வைத்திருப்பாள்.

இப்படி போகும் கதையில் கடைசியாக கவிதாவின் அண்ணன் திருந்தினாரா, கவிதாவிற்கு திருமணம் நடந்ததா என்பதே கதை

பாடல்கள்

அவள் ஒரு தொடர்கதை படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்தான். கவிஞர் கண்ணதாசன் அனைத்து பாடல்களை எழுதி இருந்தார். எம்.எஸ் விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.

தெய்வம் தந்த வீடு வாசல் இருக்கு, கடவுள் அமைத்த வைத்த மேடை, அடி என்னடி உலகம் பாடல்கள் காலம் கடந்து நிலைத்து விட்டது என்றே சொல்லலாம்.

பொதுவாக 70களில் வேலைக்கு செல்லும் பெண்களை சமூகம் எப்படி பார்க்கும், திருமணத்தை பற்றி நினைத்து பார்க்க கூட முடியாத பெண்ணின் ஆசைகள், கனவுகள், திருமண வயதில் இருக்கும் இளம் பெண்ணின் ஏக்கங்கள் எத்தனை வலியை தரும் என்பதை மிக நுணுக்கமாக திரை மொழியில் காட்டி இருந்தார்.

இயக்குநர் பாலச்சந்தரின் வெற்றி பட வரியில் அவள் ஒரு தொடர்கதைக்கு முக்கிய இடம் உள்ளது எனலாம்.

Leave a Reply