• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் படத்தின் 100-வது நாள் விழா... சரோஜா தேவிக்கு பதிலாக கேடயம் வாங்கிய சாவித்ரி - என்ன காரணம்?

சினிமா

திரைத்துறையில், அனைவருடனும் நட்புடன் பழகும் குணம் கொண்டவராக அறியப்பட்ட சாவித்ரி, நடிகை சரோஜா தேவியுடன் நெருக்கம் காட்டவில்லை

தமிழ் சினிமாவில் நடிகையர் திலகம் சாவித்ரி – சரோஜா தேவி இடையே சுமுகமான உறவு இல்லை என்றாலும் ஒரு படத்தின் 100-வது நாள் விழாவில் சரோஜா தேவிக்கு பதிலான சாவித்ரி கேடயத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்றால் நடிகையர் திலகம் சாவித்ரி. எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், சிவாஜிக்கு ஜோடியாகவும், பாசமலர் படத்தில் அவரின் தங்கையாகவும் நடித்திருந்தார். இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்ட சாவித்ரி, ஜெமினி கணேசனை காதலித்து திருமணம் செய்துகொண்டது அனைவரும் அறிந்த ஒன்று.

அதேபோல் திரைத்துறையில், அனைவருடனும் நட்புடன் பழகும் குணம் கொண்டவராக அறியப்பட்ட சாவித்ரி, நடிகை சரோஜா தேவியுடன் நெருக்கம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. தான் பங்கேற்ற பல பேட்டிகளில் கூட சரோஜா தேவி சாவித்ரி குறித்து அதிகம் பேசியிருக்க மாட்டார் என்றும் தகவல்கள் உள்ளது. 1962-ம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் வெளியான பார்த்தால் பசி தீரும் என்ற படத்தில் சரோஜா தேவி சாவித்ரி இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

சிவாஜி கணேசன் – ஜெமினி கணேசன் இணைந்து நடித்த இந்த படத்திற்கு ஏ.சி.திரிலோகச்சந்தர் கதை எழுதியுள்ளார். ஏ.வி.எம் நிறுவனம் தயாரிக்க, எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பின்போது கூட, காட்சி முடிந்துவிட்டால் சரோஜா தேவி சாவித்ரி இருவரும் வெவ்வேறு திரையில் சென்றுவிடுவார்களாம். ஆனால் இவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பது யாரும் அறியாத ஒன்று.

அதே சமயம் 1966-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, எம்.ஆர்.ராதா நம்பியார் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பெற்றால் தான் பிள்ளையா. இந்த படத்தின் 100-வது நாள் விழாவில் அறிஞர் அண்ணா பங்கேற்றுள்ளார். ஆனால் அப்போது தான் திருமணம் ஆகியிருந்த காரணத்தினால் சரோஜா தேவி அந்த விழாவில் கலந்துகொள்ள முடியாத நிலை இருந்துள்ளது.

அப்போது சரோஜா தேவி – சாவித்ரி இருவருக்கும் நெருக்கமான ஒருவராக இருந்த ஆரூர் தாஸ், சரோஜாதேவி வாங்க வேண்டிய கேடயத்தை நீங்கள் தான் வாங்க வேண்டும் என்று சாவித்ரியிடம் சொல்ல, அவர் நடித்ததற்கு நான் ஏன் கேடயம் வாங்க வேண்டும் அவரையே வாங்க சொல்லுங்க என்று சொல்ல, அவருக்கு இப்போ தான் திருமணம் ஆகியுள்ளது. அவரால் விழாவுக்கு வர முடியாது. அதனால் நீங்கள் தான் வாங்க வேண்டும்.

அறிஞர் அண்ணா கலந்துகொள்ளும் இந்த விழாவில் கதாநாயகிக்கான கேடயத்தை யாரும் வாங்கவில்லை என்றால் நன்றாக இருக்காது அதனால் நீங்கள் வாங்குங்கள் என்று சொல்ல, ஆரூர் தாஸ் பேச்சை கேட்டு, சாவித்ரி சரோஜா தேவிக்கு பதிலாக அந்த கேடயத்தை வாங்கியுள்ளார்.
 

Leave a Reply