• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கலை உலக கம்பன்...! 

சினிமா

திரு.கண்ணதாசன் அவர்கள்.
கல்வியிற் சிறந்தவன் கம்பன். திரைப்படக் கவிதையிற் சிறந்தவன் கண்ணதாசன். ஆர்மோனிய பெட்டிக்கு அழகு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை ஒரு கவிஞருக்கு உண்டென்றால் அது கண்ணதாசனுக்குத்தான் உண்டு. கவிஞர் வாலி ஒருமுறை சொன்னதை போல மதுரையில் இருந்த மாணிக்கத் தமிழை, கோடம்பாக்கத்திற்கு கூட்டி வந்த பெருமையும் அவருக்குத்தான் உண்டு. காகிதப் பூக்களுக்கு நடுவே காட்டு ரோஜாவாக பரிமளித்தவர். கதம்பங்களுக்கிடையே மல்லிகையாக மணம் பரப்பியவர்.
இலக்கிய புலவர்கள் இலக்கியங்களில் இயம்பாமல் விட்ட நுணுக்கமான கருத்துகளைக் கூட திரைப்பட பாடல்களில் தீட்டியவர் கண்ணதாசன். தத்துவப்பாடல், நகைச்சுவைப் பாடல், காதல் பாடல், பகுத்தறிவு பாடல், பக்திப்பாடல், சமுதாயச் சிந்தனையோடு புரட்சிக் கனல் தெறிக்கும் பாடல் என எல்லா வகையான பாடல்கள் எழுதுவதிலும் திறமை மிக்கவராக இருந்த ஒரே கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தான்.
எத்தனையோ பேர் இதுவரை திரைப்பாடல்கள் எழுதி இருந்தும் எல்லோரும் கண்ணதாசன் பெயரை மட்டும் நினைவு வைத்திருப்பதற்கு காரணம் என்ன?

ஏனைய கவிஞர்களெல்லாம் திரைப்பாடலோடு நின்றுவிட்டார்கள். கண்ணதாசன் ஒருவர்தான் திரைப்பாடலோடு கவிதை, கட்டுரை, புதினம், பத்திரிகை, அரசியல், ஆன்மிகம், மேடைச் சொற்பொழிவு என்று பல துறைகளிலும் காலூன்றி வியாபித்திருந்தார். இதனால் தான் கண்ணதாசன் பெயர் மேலோங்கி நிற்கிறது.
ஆனாலும் இலக்கியத்துறையில் இவர் காலூன்றி நின்றதைவிட திரைத்துறையில்தான் அழுத்தமாக காலூன்றி நிற்கிறார். கவிதையில் தன்னை வெளிப்படுத்துவதை காட்டிலும் திரைப்பாட்டில்தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்தி காட்டுகிறார்.
கடவுள் அவதாரத்தில் கண்ணன் அவதாரம் ஒன்றே முழுமை பெற்ற அவதாரம் என்று கூறுவதை போல கண்ணதாசன் முழுமையாக தன்னை வெளிப்படுத்தி விஸ்வரூபம் எடுத்து நிற்பது திரைப்பாட்டில் தான்.
இவரது பாடல்கள் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்தவர்களுக்கெல்லாம் நம்பிக்கை தருகின்ற பாடல்களாகும். நாளை என்னாகும், எதிர்காலம் எப்படி இருக்கும் என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கெல்லாம் ஆறுதல் தரும் வரிகள் அவர் பாடலில் எங்காவது ஓரிடத்தில் இருக்கும். ‘பாவ மன்னிப்பு’ என்ற படத்தில் “சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்” என்ற பாடலில் வரும்.
“காலம் ஒருநாள் மாறும் என்
கவலைகள் யாவும் தீரும்”
என்ற வரிதான் எனக்குள் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. சுமைதாங்கி படத்தில் இடம் பெற்ற,
“மயக்கமா கலக்கமா?
மனதிலே குழப்பமா”
என்ற பாடல்தான் காவியக் கவிஞர் வாலிக்கு நம்பிக்கையூட்டி, சென்னையிலே தங்கச் செய்து திரையுலகில் நுழைய வைத்தது. அமங்கலமான காட்சிக்குரிய பாடல்களை கூட மங்கலச் சொற்களில் எழுதுபவர் கண்ணதாசன். அறச்சொல் அவர் பாடலில் வராது.
எம்.ஜி.ஆர். படத்தில் நான் எழுதிய பாடலொன்றில் அறச்சொல் வந்துவிட்டது. உடனே எம்.ஜி.ஆர். ‘இதை போல் சொற்கள் பாடலில் வரக்கூடாது. கண்ணதாசன் இதில் கவனமாக இருப்பார். சோகப்பாடலில் கூட அறச்சொல் விழாமல் எழுதுவார். அப்படித்தான் நீயும் எழுதவேண்டும் என்று சொன்னார்.  அதன் பிறகு நான் எழுதிய பாடல்தான் “அன்புக்கு நானடிமை தமிழ் பண்புக்கு நானடிமை” என்ற பாடல்.
கண்ணதாசனுக்கு இணையாக மெட்டுக்கு பாட்டெழுத கூடியவர்கள் இந்திய திரையுலகில் யாருமில்லை என்று சொல்லத்தக்க வகையில் எழுதினார்.  ஒரு கவிஞன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு கண்ணதாசன் தான். 
“மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்
மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை”
என்று பாடினார் கண்ணதாசன்.
அது உண்மைதான். கண்ணதாசனை போன்ற கவிஞர்களுக்கு என்றும் மரணமில்லை. தென்றல் இருக்கும் வரை, தேன்தமிழ் இருக்கும் வரை கண்ணதாசன் பெயரும் மக்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும். வாழ்க கண்ணதாசன் புகழ்!

- கவிஞர் முத்துலிங்கம், திரைப்பட பாடலாசிரியர்.
 

 

Leave a Reply