• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உழைப்பு உயர்வைக் கொடுக்கும். நல்ல நேரம் இருந்தால் உழைப்புக்கேற்ற பலனாக பெயரும் புகழும் பணமும் கிடைக்கும்.

உண்மையான திறமையிருந்தால்தான் உயர்ந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும். இது எல்லாமே பாலுவின் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.

தமிழில் பாட வருவதற்குள் சில தெலுங்கு படங்களுக்காகப் பாடியிருக்கிறார். தமிழில் முதலில் பாடிய பாடல் 'இயற்கையென்னும் இளைய கன்னி' என்ற டூயட்.

இது 'சாந்தி நிலையம்' படத்திற்காக மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் பாடியது. ஆனால் பாலுவை தமிழ்ப் பட உலக ரசிகர்களிடையே பிரபலமாக்கிய பாட்டு ஒன்று உண்டு.

அந்தப் பாடல் அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை எல்லாரையும் கவர்ந்த பாடல். ஒரே பாடலால் தமிழகம் முழுவதும் தெரிந்த பின்னணி பாடகர் எஸ். பி. பி. ஒருவராகத்தான் இருக்க முடியும். அவருக்கு புகழை வாங்கித் தந்த பாடல் 'ஆயிரம் நிலவே வா' என்று 'அடிமைப் பெண்'ணில் ஒலித்த பாடல்தான்.

'ஆயிரம் நிலவே வா' பாடலை எஸ்.பி.பி. பாடக் காரணமாயிருந்தவர் மக்கள் திலகம் தான். பாலு அந்தப் பாடலைப் பாட வேண்டிய நாளில், நல்ல காய்ச்சலில் படுத்திருந்தார் என்பதை முன்பே சொல்லியிருந்தார்.

பாலு இல்லாமல் கார் திரும்பி வந்ததும், விஷயத்தைப் புரிந்துகொண்ட மக்கள் திலகம், ரிக்கார்டிங்கை ரத்து செய்துவிட்டார்.

இந்த விவரம் பாலுவிற்குத் தெரியாது. தனக்கு பதிலாக வேறு யாரோ ஒருவர் அந்தப் பாட்டைப் பாடியிருப்பார் என்று தான் நினைத்திருந்தார்.

இரண்டு மாதத்திற்குப் பிறகு, மீண்டும் எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் கார் பாலுவை அழைக்க வந்தபோது, பாலுவிற்கு அதை நம்பவே முடியவில்லை.

தன்னைப்போல பிரபலமாகாத ஒரு பாடகனுக்காக எம். ஜி. ஆர். பிக்சர்ஸ் போன்ற ஒரு பெரிய நிறுவனம் இரண்டு மாதங்கள் காத்திருப்பார்கள் என்பதை பாலுவால் நம்ப முடியவில்லை.

பாடலைப் பாடிய பிறகு மக்கள் திலகத்தைச் சந்தித்து நன்றி சொன்னார். அப்பொழுது மக்கள் திலகம் பாலுவிடம் 'தம்பி என் படத்திலே பாட்டுப் பாடப் போறீங்கன்னு நீங்க எல்லார்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க. உங்க நண்பர்கள் இந்தப் படத்தில் உங்க பாடலை ஆவலோடு எதிர்பார்த்திருப்பாங்க, உங்களுக்கு பதிலாக வேறு ஒருவரைப் பாடவைத்து உங்களையும், உங்கள் நண்பர்களையும் ஏமாற்ற நான் விரும்பல. அதனால்தான் உங்களுக்காக இந்தப் பாட்டு காத்திருந்தது' என்று கூறி வழியனுப்பினார்.

Chandran Veerasamy

Leave a Reply