• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை

இலங்கை

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  மீன்பிடி சட்டத்தை மறுசீரமைக்கவுள்ளோம். 1996 ஆம் ஆண்டு நடைமுறையில் இருந்த மீன்பிடி சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன்போது காலத்துக்கேற்ற மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக கடுமையான சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, இராஜதந்திர மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு, மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான திட்டமொன்றை உருவாக்குவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். அதேநேரம், லொரென்சோ புதா – 4 என்ற கப்பலில் இருந்த மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்.

குறித்த கப்பல் தொடர்பாக கடற்றொழில் திணைக்களம், கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகிய தரப்புக்களும் கலந்துரையாடியுள்ளன. இதற்கான சட்ட நடவடிக்கைகள் சீஷெல்ஸ் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply