• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாலிவுட்டையே கலக்கிய கனவுக்கன்னி.. தஞ்சை மண் கொடுத்த தங்கத் தாரகை ஹேமமாலினி வாழ்க்கைப் பயணம்!

சினிமா

தமிழகத்தில் பிறந்து பாலிவுட்டையே தங்களது அபார நடிப்பாற்றலால் கலக்கி இந்தி சினிமாவின் அத்தனை சூப்பர் ஸ்டார்களுடனும் நடித்து புகழ்பெற்றவர்கள் இரு பெண்கள். ஒருவர் ஸ்ரீ தேவி. மற்றொருவர் ஹேம மாலினி.  ஸ்ரீ தேவியைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஆனால் ஸ்ரீதேவியைப் போன்றே தனது அபார நடிப்பாற்றலாலும், அழகாலும் இந்தி சினிமாவின் கனவுக் கன்னியாகத் திகழ்ந்தார் ஹேம மாலினி.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு பகுதியில் உள்ள அம்மன் குடி என்னும் சிற்றூரில் பிராமண குடும்பத்தில் பிறந்தவர்தான் ஹேம மாலினி. இவருடைய தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியமையால் அடிக்கடி மாறுதல் பெற்றுக் கொண்டே இருப்பார். இதனால் குடும்பம் டெல்லி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தனது பள்ளிப் படிப்பினை டெல்லியிலேயே முடித்த ஹேம மாலினி பரத நாட்டியத்தையும் முறையாகக் கற்றுக் கொண்டார்.

1963-ல் “இது சத்தியம்” என்ற திரைப்படத்தில் முதன்முதலாக ஹேமமாலினியின் சினிமா பயணம் தொடங்கியது. இதில் அற்புதமாக நடனமாடியிருந்த ஹேம மாலினியின் திறமையைப் பார்த்த அனந்தசாமி, அவருடைய “சப்னோ கா சௌதாகர்” என்ற இந்திப் படத்தில் ஹேமாவை அறிமுகம் செய்து வைத்தார். இப்படத்தின் கதாநாயகன் ராஜ்கபூர். ஆனால் முதல்படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியைத் தரவில்லை என்றாலும், ஹேமமாலினியின் அழகான தோற்றமும், நடிப்பும் ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது.

அதன்பின்னர், தேவ் ஆனந்துடன் “ஜானி மேரா நாம்” என்ற திரைப்படத்தில் நடித்தார்.இந்தப் படம் ஹேம மாலினியின் திரை வாழ்க்கைக்கு திருப்பு முனையைக் கொடுத்தது. இரண்டாவது படத்திலேயே ரசிகர்களின் “கனவுக் கன்னியாக” மாறினார். குறுகிய காலத்திலேயே பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமானார். அதன்பின் பின் ஹேமமாலினி, மீண்டும் தேவ் ஆனந்துடன் இணைந்து “தேரே மேரே சப்னே” என்ற திரைபடத்தில் நடித்தார். பின்னர், தர்மேந்திரா மற்றும் சஞ்சீவ் குமாருடன், ஹேமமாலினி இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த “சீதா ஔர் கீதா” என்ற திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது.

ஷோலே கொடுத்த வெற்றி

1970-80 களில் தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்த ஹேமமாலினியை இந்திய சினிமா உலகமே கவனித்தது 1975 ஆம் ஆண்டு வெளிவந்த “ஷோலே” திரைப்படம் மூலமாகத்தான். ஹேமமாலினி, தர்மேந்திரா, சஞ்சீவ்குமார், அமிதாப் பச்சன், அம்ஜத்கான், ஜெயபாதுரி என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்த இப்படம் மும்பையில் மட்டும் ஒரே திரையரங்கில் ஐந்தாண்டுகள் ஓடி சாதனைப் படைத்தது.

அதன்பின் மளமளவென பல படங்களில் நடித்துப் புகழ்பெற்ற ஹேம மாலினி தர்மேந்திராவுடன் காதல் வயப்பட்டு 1980-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு தர்மேந்திராவைப் பிரிந்து தனியே வாழ்கிறார் ஹேம மாலினி. படிப்படியாக பாலிவுட்டின் கனவுக் கன்னியாக பல ஆண்டுகள் திகழ்ந்தவர் பா.ஜ.க-வில் இணைந்து மாநிலங்களவை எம்.பி.ஆகவும், பின் 2014 மதுரா தொகுதியின் மக்களைவை உறுப்பினராகவும் பணியாற்றியாற்றினார்.

மேலும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியை தடை செய்யக் கோரி குரல் எழுப்பி சர்ச்சையில் சிக்கினார். தமிழில் கமலுடன் இணைந்து “ஹேராம்” மற்றும் “தசாவதாரம்” போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். மத்திய அரசால் பத்ம ஸ்ரீ விருது, மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினையும் பெற்றுள்ளார் ஹேம மாலினி.

தமிழச்சி கயல்விழி
 

Leave a Reply