• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரே கதையம்சம் தான்..மகேந்திரன் முதல் அட்லி வரை நான்கு காலகட்டங்களில் எடுத்து நான்கும் ஹிட் ஆன அதிசயம்!

சினிமா

வழக்கமாக சினிமாக்களில் ஒரு படத்தின் தழுவலை ஒரு நாவலில் இருந்தோ, அல்லது வேற்றுமொழி திரைப்படத்தை அந்தந்த மொழிகளுக்குத் தகுந்தவாறோ திரைக்கதை அமைத்து திரைப்படங்கள் எடுப்பார்கள். ஆனால் ஒரே கதையம்சம் கொண்ட படைப்பை நான்கு காலகட்டங்களில் அதுவும் ஒரே மொழியில் நான்கு இயக்குநர்கள் எடுத்து அத்தனையும் வெற்றி கொடுத்த படங்கள் தான் இது. அந்த இயக்குநர்கள் மகேந்திரன், பாக்யராஜ், மணிரத்னம், அட்லி. இவர்கள் எடுத்த படங்கள் தான் அத்தனைக்கும் ஒரே கதைக்களம் தான். ஆனால் தங்களது மேக்கிங் ஸ்டைல்  மற்றும் திரைக்கதையால் வெற்றிப் படமாக மாற்றியுள்ளனர்.

நெஞ்சத்தைக் கிள்ளாதே..
கதாசிரியராகவும், வசனகார்த்தாவுமாக இருந்து மகேந்திரனின் அற்புத படைப்பு. 1980-ல் வெளியான இப்படத்தில் மோகன், சுகாசினி, பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சுகாசினிமேல் காதல் கொள்ளும் மோகன் பிறகு சந்தேகப்பட அதனால் கோபமுற்று காதல் முறிகிறது. பின்னர் பிரதாப் போத்தனுடன் சுகாசினிக்கு திருமணம் நடைபெற ஆரம்பத்தில் ஒட்டாமல் வாழும் சுகாசினி பின்பு அவரின் அன்பால் இருவரும் இணைவது போன்று கதை இருக்கும்.

அந்த ஏழு நாட்கள்
1981-ல் திரைக்கதை மன்னன் பாக்யராஜின் இயக்கத்தில் வெளிவந்த படம். பாக்யராஜும் அம்பிகாவும் காதலிக்க, ஒருகட்டத்தில் அவரின் அம்பிகாவின் குடும்ப வறுமையால் ஏற்கனவே திருமணமாகி மனைவியை இழந்த ராஜேஷ்-க்கு அம்பிகா மனைவியாகிறார். பின் பாக்யராஜுடனான காதல் தெரியவர அவர்களைச் சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்கும் ராஜேஷ் இறுதியில் பாக்யராஜுடன் சேர்த்து வைத்தாரா என்பது தான் கதை. விறுவிறு திருப்பங்களுடன் பாக்யராஜ் இந்தப் படத்தினை உருவாக்கி ஹிட் கொடுத்தார்.

மௌனராகம்
மணிரத்னம் இயக்கத்தில் 1986-ல் மோகன், கார்த்திக், ரேவதி நடிப்பில் உருவான படம். இந்தப் படம் பற்றி ஏறக்குறைய அனைவரும் அறிந்திருப்பர். கார்த்திக்கை விரும்பும் ரேவதி, பின்னர் அவர் இறந்தபின் பழைய நினைவுகளை மறக்க முடியாமல் மோகனுடன் திருமணம் ஏற்பட ஆரம்பத்தில் ஒட்டாமல் வாழ்ந்து பின்னர் இருவரும் புரிந்து கொண்டு சேர்வது போன்று படம் இருக்கும். இந்தப் படமும் மணிரத்னத்தின் அக்மார்க் பிராண்டாக ஹிட் அடித்தது.

ராஜாராணி
இயக்குநர் அட்லியின் முதல்படம். 2013-ல் வெளிவந்த இந்தப் படத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா நடித்திருந்தனர். கிட்டத்தட்ட மௌனராகம் கதைக் களத்தினைப் போன்றே இப்படம் உருவாகியிருந்தது. எனினும் அன்றைய டிரெண்டுக்கு ஏற்ற வகையில் படம் உருவாகியிருந்தால் படம்வெற்றி பெற்றது.

இந்த நான்கு படங்களும் ஒரே கதைக் களத்தைக் கொண்டு இயக்குநர்களின் வெவ்வேறு மேக்கிங் ஐடியாவால் சோடை போகாமல் ஹிட் வரிசையில் இணைந்தது.

Leave a Reply