• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்கு தரச்சொன்ன எம்.எஸ்.விஸ்வநாதன்.. இப்படி ஒரு நட்பா?

சினிமா

தமிழ் சினிமாவையே தனது இசை ராஜ்ஜியத்தால் கட்டிப் போட்டவர்கள் இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும். இருவரும் இசைத்துறையின் இரு கண்களாக விளங்கியவர்கள். இவர்கள் இருவரும் 1952-.ல் இருந்து ஒன்றாக இசையமைக்கத் தொடங்கி 1965-ல் ஆயிரத்தில் ஒருவன் படம் வரையில் பணிபுரிந்தனர். பின்னர்  தனித்தனியே இசையமைத்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் இவர்கள் இருவரும் 100-க்கும் மேற்பட்ட படங்களில் ஒன்றாக இசையமைத்துச் சாதனை புரிந்தனர். பின்னர் மீண்டும் 30 வருடங்களுக்குப் பிறகு எங்கிருந்தோ வந்தான் என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர்.

காலத்தால் அழியாத பல்வேறு காவியப் பாடல்களை உருவாக்கிய இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவின் ஒரு பொக்கிஷம் என்றே சொல்லலாம். இவர்கள் இருவரின் நட்புக்கு உதாரணமாக எம்.எஸ்.விஸ்வநாதன் ஓர் அற்புதமான சம்பவத்தை தான் நடித்த ஒரு படத்தின் மூலம் செய்து நெகிழ வைத்திருக்கிறார் எம்.எஸ்.வி.

எம்.எஸ்.விஸ்வநாதன் கண்ணதாசனின் ரசிகராக நடித்து புகழ்பெற்ற படம் தான் காதல் மன்னன். இயக்குநர் சரணுக்கு இது முதல் படம். நடிகர் விவேக் இந்தப் படத்தில் இணை இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். ஒருமுறை எம்.எஸ்.வி-யின் பேட்டி டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அப்போது அதனைப் பார்த்த விவேக், சரணிடம் இந்தப் படத்தில் நாம் எம்.எஸ்.வி-யை நடிக்க வைக்கலாம் என்று சரணிடம் கேட்டிருக்கிறார்.

சரணும் இவ்வளவு பெரிய லெஜென்ட் நமது படத்தில் இணைவது சந்தோஷம் தானே. ஆனால் அவர் ஒப்புக் கொள்வாரா என்று கேட்டிருக்கிறார். பின்னர் விவேக்கும், சரணும் எம்.எஸ்.வி.அவர்களை நேரில் சென்று சந்தித்து தங்களின் விருப்பத்தைத் தெரிவித்திருக்கின்றனர். எம்.எஸ்.வி முதலில் மறுத்துள்ளார். ஏனெனில் தான் சினிமாவிற்கு முதன்முதலில் நடிகராகத் தான் ஆசைப் பட்டு வந்தேன். ஆனால் என்னை முதல் படத்திலேயே வேண்டாம் என் நிராகரித்து விட்டார்கள். அதன்பின்தான் இசையைத் தேர்ந்தெடுத்து வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

பின்னர் விவேக்கும், சரணும் ஒரு ஐடியா செய்தனர். எம்.எஸ்.விக்கு அவரின் அம்மா என்றால் உயிர். எனவே அவர் மறைந்த அவரின் அம்மா எழுதுவதைப் போன்ற ஒரு கடிதத்தை எழுதி அவரின் அம்மா படத்திற்கு முன் வைத்து விட்டு வந்து விட்டனர். அதைப் படித்துப் பார்த்த எம்.எஸ்.வி. தனது தாயே கூறியதைப் போல் ஒப்புக் கொண்டு மறுநாள் காலை சரணிடம் போன் போட்டு கதையைக் கேட்டு நடிக்க ஒப்புக் கொண்டு ஒரு கண்டிஷன் போட்டுள்ளார்.

அது என்னவெனில், இந்தப் படத்திற்காக நீங்கள் எனக்கு அளிக்கும் சம்பளத்தில் பாதியை ராமமூர்த்திக்குக் கொடுத்து விடுங்கள் என்பது தான். இதனைக் கேட்ட சரணும், விவேக்கும் மெய்சிலிர்த்துப் போயினர். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தனது நண்பருக்காக எம்.எஸ்.வி செய்த இந்தச் செயலை எண்ணி அவர்கள் வியப்படைந்து போயிருக்கிறார்கள். எம்.எஸ்.வி.-ராமமூர்த்தி என்பவர்கள் வெறும் இசைக்கலைஞர்கள் மட்டுமல்ல. அவர்கள் உருவாக்கியது ஒரு பிராண்ட், இருவரில் யாரையும் தனித்தனியே ஒதுக்கி விட முடியாது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சி.
 

Leave a Reply