• Welcome to TamilsGuide
செய்திகள் 1

1984ல் உதவிய உக்ரைனுக்கு கைமாறு செய்யும் வெல்ஷ் தொழிலாளர்கள்

கடந்த 2022 பிப்ரவரி 24 அன்று தொடங்கிய ரஷிய-உக்ரைன் போர், 2 ஆண்டுகளை கடந்து தீவிரமாக நடைபெற்று வருவதால், உக்ரைனில் அத்தியாவசிய தேவைகள் இல்லாமல் மக்கள் பரிதவிக்கின்றனர்.

நூற்றுக்கணக்கான உக்ரைன் சுரங்க தொழிலாளர்களும் ரஷியாவிற்கு எதிராக போரில் களம் இறங்கி உள்ளனர்.

1984ல் ஐரோப்பாவின் வேல்ஸ் (Wales) பகுதியில் நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்ததில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உக்ரைன், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளிலிருந்து சுரங்க தொழிலாளர்களும் ஆதரவளித்தனர்.

நீண்ட நாள் நடைபெற்ற இந்த வேலை நிறுத்தத்தினால் வருவாய் இல்லாமல் தவித்த அந்த தொழிலாளர்களுக்கு உலகெங்கும் இருந்து பொருட்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது.

அப்போது சோவியத் யூனியன் (Soviet Union) என அழைக்கப்பட்ட ஒருங்கிணைந்த ரஷியாவில், உக்ரைன் பகுதியில் இருந்த சுரங்க தொழிலாளர்களில் ஏராளமானவர்கள், வெல்ஷ் (Welsh) சுரங்க தொழிலாளர்களுக்கு பலவித உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தனர்.

சுமார் 40 வருடங்கள் கடந்த பிறகும், தங்களுக்கு உக்ரைனியர்கள் செய்த உதவியை மறக்காத வெல்ஷ் பணியாளர்கள், தங்களின் ஊதியத்தை நன்கொடையாக வழங்கி, பல சரக்கு வாகனங்களில் மருந்து, மளிகை உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களை தெற்கு வேல்ஸ் பகுதியில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) நகருக்கு, சாலை வழியே கொண்டு சென்று வழங்கினர்.

இது குறித்து உக்ரைன் சுரங்க தொழிலாளர்கள், "சுரங்க தொழிலாளர்கள் அனைவரும் ஒரே இனம் என்பதை 1984ல் நாங்கள் மறக்கவில்லை. அதே போல் அவர்களும் எங்களை இப்போது மறக்கவில்லை. குண்டு வீச்சில் தாக்கப்படும் அபாயம் உள்ளதை அறிந்தும் அவர்கள் துணிந்து வந்து எங்களுக்கு உதவினர்" என பெருமிதத்துடன் கூறுகின்றனர்.
 

Leave a Reply