• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகப்பிரிவினை படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம்... 

சினிமா

'பாகப்பிரிவினை' படத்தை இந்தியில் எடுத்தபோது சுனில்தத் சொன்னாராம், "சிவாஜியின் பாத்திரத்தை திலீப்குமார் செய்கிறார். ஆனால் ராதாவின் 'சிங்கப்பூர் சிங்காரம்' பாத்திரத்தைச் செய்ய யாராலும் முடியாது" என்று. பாகப்பிரிவினையைத் தெலுங்கில் எடுத்தபோது இதையேதான் என்.டி.ஆரும் சொன்னார். ராதாபோல் செய்ய தெலுங்கில் ஆள் இல்லை என்று. அந்த ஏற்றமும் இறக்கமும் திடீரெனக் கீழே இறங்கிக் கெக்கலி கொட்டும் மாடுலேஷனும், அந்தக் குரலின் மாயவித்தைகளை முகத்திலும் காட்டத் தெரிந்த பாவனைகளும் யாரிடமும் கற்காத ராதாவின் சொந்தக் கண்டுபிடிப்புகள். ஒரே காட்சியில் மிகை நடிப்பு, யதார்த்த நடிப்பு, கீழ் நடிப்பு என்று எல்லா நடிப்பு வகைகளையும் காட்டிக்கொண்டே எல்லாவற்றையும் கலந்த ஒரு புதுவகை நடிப்பையும் மக்கள் ரசிக்கும்படி வெளிப்படுத்தியதால்தான் அவரை 'நடிகவேள்' என்றது தமிழ்நாடு. கவிதையை ஜனநாயகப்படுத்திய புதுக்கவிதை போல, ஓவியத்தில் பார்க்கும்போதெல்லாம் புதிய அனுபவம் தந்த நவீன ஓவியம்போல, நடிப்பில் பல மரபுகளை உடைத்த 'நவீன நடிப்பு' அவருடையது. அதனால்தான் எத்தனைமுறை பார்த்தாலும் ராதா நடிப்பு சலிப்பதேயில்லை. சினிமாவில் எல்லா நடிகர்களும் சுத்தத் தமிழ் பேசிய காலத்திலேயே ராதா மட்டும்தான் கொச்சைத் தமிழ் பேசுவார். அந்தக் கொச்சைத் தமிழ் மக்களைச் சுத்தமாக்கியதுதான் வரலாறு.

பிம்பங்களை உருவாக்கும் நாடகத்திலும் சினிமாவிலும் இருந்துகொண்டே எல்லா பிம்பங்களையும் உடைத்தவர் எம்.ஆர்.ராதா. அதில் முக்கியமாக தன்மேல் உருவான பிம்பத்தையும் அவரே உடைத்தார். அவர் வாழ்ந்த வீடு திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் இருந்தது. ராதா காலனி என்று மக்கள் அழைத்தனர். நாங்கள் அதை ஆசையோடு பார்த்த நாள்கள் உண்டு. அதை இப்போது இடித்து பெரிய அப்பார்ட்மென்ட் கட்டிவிட்டார்கள். அந்த வீட்டின் சாக்கடையை அவரே தள்ளுவாராம். "என்னண்ணே, நீங்க பெரிய ஆக்டர், நீங்கபோய் சாக்கடை தள்ளிகிட்டு’ என்று யாராவது கேட்டால், ’உன் வீட்டுச் சாக்கடையைத் தள்ளலையே, என் வீட்டுதைத்தானே தள்றேன். வேலையில என்னய்யா ஒஸ்தி மட்டம், எல்லாம் ஒண்ணுதான் போய்யா" என்று தன்மீது கட்டமைக்கப்பட்ட நடிகர் என்ற பிம்பத்தையும் அவரே உடைத்ததுதான் அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் சாரமாகத் தோன்றுகிறது.

அவருக்கும் திருச்சிக்குமான உறவு ஆழமானது. அவர் வாழ்ந்ததும் மறைந்ததும் திருச்சியில்தான். “காந்தா” என்ற கரகரத்த குரலை முதன்முதலில் கேட்ட ஊர் திருச்சி. ராதாவைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற 'ரத்தக்கண்ணீர்' நாடகம் 1949-ம் ஆண்டு ஜனவரி 14-ம் நாள் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில் திருச்சியில்தான் அரங்கேறியது. 3000 முறை மேடை கண்ட அந்த நாடகத்தைத் திருவாரூர் கே.தங்கராசு எழுதினார். சாகித்ய அகாடமியின் செயலாளராக நேருவால் அமர்த்தப்பட்ட பிரபாகர் மாச்வே ஒரு மராத்தியர். அவர் ரத்தக்கண்ணீர் பார்த்துவிட்டு, சிறந்த உலக மேடை நாடகங்களில் ரத்தக்கண்ணீர் ஒன்று என்றும் எம்.ஆர்.ராதா இந்திய வரலாற்றில் உள்ள முக்கியப் பெயர்களில் ஒன்று என்றும் சொன்னார். ரத்தக்கண்ணீர் நாடகத்தை காங்கிரஸ்காரரான பி.ஏ.பெருமாள் முதலியார் சினிமாவாக எடுத்தார். ராதா முதலியாரிடம் சில நிபந்தனைகள் விதித்தார். சினிமாவுக்காக நாடகம் நடத்துவதை விட முடியாது. நாடகம் முடிந்துதான் ஷூட்டிங் வைக்கணும். நாடகத்தின் உச்சக் காட்சியான தன் மனைவியை நண்பன் பாலுவுக்கு மணமுடிப்பதை மாற்றக்கூடாது. அடுத்ததுதான் அவரின் தனித்துவம், கே.பி.சுந்தராம்பாள்தான் அந்தக் காலத்தில் நந்தனாராக நடிக்க ஒரு ல
ட்சம் சம்பளம் வாங்கியவர். அதைவிட அதிகமாக ரூ.25,000 தரவேண்டும் என்றார் ராதா. பெருமாள் முதலியார் எல்லாவற்றுக்கும் சம்மதித்தார்.

1954 தீபாவளிக்கு வந்த 'ரத்தக்கண்ணீர்' படம் சூப்பர் டூப்பர் ஹிட். மூட நம்பிக்கைகளை நகையாடிய படமது. சொல்ல வேண்டிய முறையில் சொன்னால் மக்கள் ஏற்பார்கள் என்பதன் சிறந்த உதாரணம் ரத்தக்கண்ணீர். இன்று தொலைக்காட்சிகளில் போட்டால்கூட 68 ஆண்டுகள் கழிந்தும் மக்கள் ரசித்து, ராதாவின் வசனங்களைப் பேசுகிறார்கள். அதுபோலவே ராதாவின் பெயரோடு ஒட்டி உறவாடும் 'நடிகவேள்' பட்டம் தரப்பட்டதும் திருச்சியில்தான். 'போர்வாள்' நாடகம் திருச்சி தேவர் ஹாலில் நடந்தபோது பெரியார் முன்னிலையில் பட்டுக்கோட்டை அழகிரிசாமி 'நடிகவேள்' என்ற பட்டத்தை எம்.ஆர்.ராதாவுக்கு வழங்கினார்.

எம்.ஆர்.ராதாவின் நாடகங்களில் பெரிய எதிர்ப்பைச் சந்தித்த நாடகம் 'ராமாயணம்.' அதில் ராதா ராமனாக நடித்தார். வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாடகமது. மேடையின் இரண்டு பக்கமும் தன் நாடக எழுத்துக்கு ஆதாரமான சமஸ்கிருத மொழிபெயர்ப்புப் புத்தகங்களை அடுக்கி வைத்தார். அரசு தடை விதித்தது. நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று 15-9-1954-ல் பெரியார் தலைமையில் சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் முதல் முறையாக மேடையேற்றினார். திருச்சி தேவர் ஹாலில் ராமாயணம் நடந்தபோது “உள்ளே வராதே” என்று அதிரடியாக போஸ்டரும் நோட்டீசும் வெளியிட்டார். “என் நாடகத்தால் மனம் புண்படும் என்று கருதுகிறவர்கள் எவராயிருந்தாலும் அவர் எம்மதத்தினராய் இருந்தாலும் அவர்கள் கண்டிப்பாய் வரவேண்டாம். அவர்கள் காசும் எனக்கு வேண்டாம்” என்றார் துணிச்சலோடு. இவருக்காகவே கொண்டுவரப்பட்டதுதான் நாடகத் தடைச் சட்டம்.

'இழந்த காதல்' நாடகம்தான் ராதாவை அடையாளப்படுத்திய நாடகம். “எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைக் காணத்தவறாதீர்கள்” என்று விளம்பரம் செய்யப்பட்ட நாடகமிது. இந்த நாடகம் சேலத்தில் நடந்தபோதுதான் ராதாவின் ஆற்றலைக் கண்டு வியந்த அண்ணா, பெரியாரையும் அழைத்துவந்து நாடகம் பார்க்கவைத்தார். மேலை நாட்டு நடிகர் பால்முனிக்கு ராதாவை அண்ணா ஒப்பிட்டார். ராதாவின் ஒரு நாடகம் தாங்கள் நடத்தும் 100 மாநாடுகளுக்குச் சமம் என்றார் அண்ணா. இந்த நட்பால்தான் ராதாவின் 'திராவிட மறுமலர்ச்சி நாடக சபா' உருவானது. ஆனாலும் அண்ணா பெரியாரை அரசியலில் பிரிந்தபோது 'அண்ணாவின் அவசரம்' என்று புத்தகம் எழுதி அண்ணாவிடமே கொடுத்து, இதைப் படியுங்கள் என்றவர் ராதா.

'விமலா அல்லது விதவையின் கண்ணீர்' என்ற புது நாடகத்தில் பெண்கள் படும் வேதனைகளை ராதா வலிமையாகப் பேசினார். சமூக சீர்திருத்த நாடகம் என்று நாகப்பட்டினத்தில் விளம்பரம் செய்திருந்தார். ஊர் பெரியவர்கள் சிலர் நாடகம் நடத்தத் தடை கேட்டு நீதிமன்றம் சென்றனர். கணேசய்யர் நீதிபதியாக இருந்தார். இவர் சாஸ்திர அறிவு மிக்கவர். பார்க்காமல் தடை விதிக்க மறுத்த கணேசய்யர் ஒருநாள் நாடகம் பார்க்க வந்தார். ராதா தன் சக நடிகர்களிடம் எதையும் மாற்றாமல் அப்படியே நடியுங்கள், வருவது வரட்டும் என்றார். ஒரு காட்சிகூட விடாமல் எல்லாக் காட்சிகளையும் ரசித்த கணேசய்யர் மேடையில் சொன்னார், ”விதவைகள் படும் துன்பம் சாதாரணமானதல்ல. அவர்களுக்கு மறுமணம் செய்து வைக்க வேண்டும் என்னும் இந்த நாடகம் நாட்டுக்குத் தேவையான ஒன்று. விதவைகள் பூ வைக்கக்கூடாது, பொட்டு வைக்கக்கூடாது என்பதெல்லாம் அவளை உடன்கட்டை ஏற்றுவதற்கு சமமல்லவா. நாடகம் எல்லா ஊரிலும் நடக்கட்டும். ராதா நீண்டநாள் வாழ்ந்து தொண்டு செய்யட்டும்” என்றார்.

அநேகமாக நாடக மேடையில் சொல்லப்பட்ட தீர்ப்பாக இதுவே இருக்கும் என்று தொன்றுகிறது. எவர் வந்தாலும் உண்மையைச் சொல்வேன் என்ற நடிகவேள் ராதாவின் துணிச்சலும், விமர்சனத்தில் தன் சமூகத்தை உட்படுத்தினாலும் நியாயம் என்றால் ஏற்பேன் என்ற கணேசய்யரின் நீதிவழுவா நெறியும் இந்தக் காலத்திலும் தேவையாகவே படுகிறது.

'தூக்கு மேடை' நாடகம் கலைஞர் கருணாநிதி எழுதியது. 'கலைஞர்' என்ற அடைமொழிதான் அவரது பெயரான கருணாநிதி என்பதைவிட அதிகமான தமிழர்களால் உச்சரிக்கப்படுகிறது. இந்தக் கலைஞர் பட்டம் அவரை வந்தடைந்ததே ஒரு சுவாரஸ்யமான கதை. புது நாடகம் ஒன்று போட எம்.ஆர்.ராதா விரும்பினார். திருவாரூரிலிருந்து வந்த இளைஞரான கருணாநிதி தஞ்சையிலேயே தங்கி 'தூக்கு மேடை' நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மகிழ்ந்துபோன ராதா, நாடகம் எழுதியவரை 'அறிஞர் கருணாநிதி' என்று போஸ்டர்களில் விளம்பரப்படுத்தினார். அண்ணாவுக்கான அடைமொழியைத் தனக்குப் பயன்படுத்தியதை கருணாநிதி ஏற்கவில்லை. “ஏன் உங்க கட்சியில ஒரு அறிஞர்தானா” என்று ஜாலியாகச் சிரித்த ராதா, நாடகத்தின் முதல் நாள் கருணாநிதியை ‘கலைஞர் கருணாநிதி’ என்று அழைத்தார். அன்றுமுதலே தான் கலைஞரானதாகவும் அதுவே தன்னோடு நிலைத்ததாகவும் கலைஞர் 13-9-1989 முரசொலியில் எழுதினார்.

நாடகத்தில் இல்லாத வசனங்களைப் பேசி அதிர்ச்சியூட்டுவது ராதாவின் வாடிக்கை. அதுவே பார்வையாளர்களை ஒரே நாடகத்தைப் பலமுறை பார்க்கவைத்தது. 'தூக்கு மேடை' நாடகத்தில் பாண்டியனாக நடித்த கலைஞரிடம் “உங்க அண்ணாவை தளபதி தளபதின்னு சொல்றீங்களே, அவரு எந்தப் போருக்குத் தளபதி” என்று திடீரெனக் கேட்டார் ராதா. கலைஞர் சுதாரித்துக்கொண்டு, “வீணை வாசிக்கப்படும்போது மட்டும் வீணையல்ல. உறையில் இருந்தாலும் வீணைதான். அதுபோலத்தான் போருக்கும் அவர்தான் தளபதி. அமைதிக்காலத்திலும் அவர்தான் தளபதி” என்று சொன்னதாக பின்னாள்களில் கலைஞர் எழுதினார்.

எதையும் எதிர்கொள்ளும் அச்சமே அறியாத மனம் ராதாவின் சொத்து. அந்த நாடகத்துக்குத் தலைமை பெரியார். பாதி நாடகம் முடிந்து இடைவேளை நேரத்தில் பெரியார் பேசுகிறார். பார்வையாளரில் ஒருவர் எழுந்து, "இவரு பேச்சைக் கேட்க நாங்க காசுகொடுக்கலை. நாடகத்தைப்போடு" எனக் கத்துகிறார். மேக்அப் ரூமிலிருந்த ராதாவுக்குச் செய்தி போகிறது. பாதி மேக்கப்போடு வந்த ராதா, கத்தியவரைப் பார்த்து, "நாடகம் முடிஞ்சிடுச்சு, நீங்கள் போகலாம். இனி இவர்தான் பேசுவார்" என்றாரே பார்க்கலாம், பெரியாரே அசந்துவிட்டார். இந்தமாதிரி பதிலை அவரே எதிர்பார்க்கவில்லை.

  - கவிஞர்  நந்தலாலா.

#காலத்தால் அழியா கலைஞன் நடிகர்கள் எம் ஆர் ராதா அவர்களின் 117 வது பிறந்தநாள் இன்று.

Chandran Veerasamy

Leave a Reply