• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது

இலங்கை

”உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாக” கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” நாடளாவிய ரீதியிலுள்ள சகல கல்வியியற் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம். இந்த நடவடிக்கைகளின் பின்னர் அதற்கான விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ளவுள்ளோம்.

உதவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மாத்திரம் உதவி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.

அதற்கமைய அந்தந்த மாவட்டங்களிலுள்ளவர்கள் மாத்திரமே இந்த சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள்.
குறிப்பாக நுவரெலியா, பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலும், மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டத்திலும் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.

பின்தங்கிய பாடசாலை பாடசாலைகள் அதிகம் காணப்படும் பிரதேசங்களுக்கு இவ்வாறு உதவி ஆசிரியர்கள் சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளோம். இவர்கள் உதவி ஆசிரியர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கான கொடுப்பனவும் வழங்கப்படும். எனினும் 5 வருடங்களுக்குள் அவர்கள் முதுகலை டிப்ளோமாவை நிறைவு செய்ய வேண்டும். டிப்ளோமாவை நிறைவு செய்ததன் பின்னரே அவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்” இவ்வாறு சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply