• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் இல்லை - பிரதி சபாநாயகர்!

இலங்கை

நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியம் கிடையாது என பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் தேர்தல் ஒன்று இடம்பெறுகையில் பல விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே.

எமது நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அடுத்ததாக ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்பட வேண்டும்.

ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்ததில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவில்லையாயின் அதற்கும் சில காரணங்கள் உள்ளன.

இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதற்கு கடந்த காலங்களில் பல தலைவர்கள் முயற்சித்தனர்.

எனவே நிறைவேற்று அதிகார முடைய ஜனாதிபதி முறைமையை நிரந்தரமாக இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமாயின் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாமல் இருக்கலாம்.

அவ்வாறு இல்லையெனில் நிச்சயமாக தேர்தல் இடம்பெறும். எவ்வாறாயினும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தொடர்பில் நாம் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை” என அஜித் ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.
 

Leave a Reply