• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈழத்து திரைப்படத்துறையில் சாதனை படைக்கத்துடிக்கும் இளம் இயக்குநர் புஷ்பக 27 புகழ் எங்கள் காரைசிவநேசன் 

சினிமா

ஈழத்து திரைப்படத்துறையில் சாதனை படைக்கத்துடிக்கும் இளம் இயக்குநர் புஷ்பக 27 புகழ் எங்கள் காரைசிவநேசன் 

ஈழத்துத்திரைப்படத்துறையைப் பற்றி நாம் சீர்தூக்கிப்பார்த்தால் 28 தமிழ்த்திரைப்படங்கள் பற்றிய தகவல்களை மாத்திரமே பதிவாகப்பார்க்கக் கூடியதாக உள்ளது. தம்பிஐயா தேவதாஸ் அவர்களின் பணியினால் இலங்கைத்தமிழ் சினிமாவின் கதை நூலாகப்பதிவாகியிருக்கிறது. அதில் உள்ளவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 
1962ம் ஆண்டு 16 மிமீ ஆக தயாரிக்கப்பட்டு வெளியானது முதல் 1989  வரையான காலம் வரை 28 திரைப்படங்கள் மாத்திரமே இலங்கையில் முழு நீளத்திரைப்படங்களாகத் தயாரிக்கப்பட்டன. 
நாட்டில் போர் ஏற்பட்டதன் பின்னர் இந்தத் தமிழ்த்திரைத்துறை ஓர் உத்வேகம் பெற்றிருந்தது. நூற்றுக்கணக்கான குறும்படங்களும், பல முழு நீளத்திரைப்படங்களும் வன்னியிலிருந்து வெளிவந்திருந்தன. இதேவேளை புலம் பெயர்ந்து வாழும் திரைப்படத்துறை  ஈழத்துக்கலைஞர்கள் ஈடுபட்டு குறும் படங்களையும், முழு நீளத்திரைப்படங்களையும் தயாரித்து வெளியிட்டுள்ளனர். இவற்றினூடாக பல கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டனர். மக்கள் மத்தியில் புகழ் பெற்றுவிளங்குகிறார்கள்.
ஈழத்துத்திரைப்படங்களைப் பொறுத்தவரையில் தொழில் நுட்பம் என்பதே கேள்விக்குறியாக அமைந்தது. இன்று தொழில் நுட்பத்துறையில் மிக நேர்த்தியான தொழில் நுட்பக்கலைஞர்கள் வளர்ச்சி பெற்றிருக்கின்றார்கள். அவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றபொழுது எமது இளம் கலைஞர்களின் திறமைகள் வெளிக்கொணரப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
திரைப்படத்தொழில் நுட்பம் முழுமையாகக்கையாளப்பட்டு ஈழத்துத்திரைப்படங்கள் வெளிவரும் காலம் வெகு தொலைவில் இல்லை!
காரைநகரில் பிறந்து வளர்ந்த இன்றைய திரைத்துறைக்கலைஞராக விளங்கும் காரை சிவநேசன்,
2001ம் ஆண்டில்  அவருக்குப் 19 வயதாக  இருக்கும் பொழுது, இராணுவக்கட்டுப்பாட்டுப்பகுதியில் இயங்கிவந்த யாழ்ப்பாணம் சலனசித்திரம் அமைப்பின் மூலம் திரைப்படப்பயிற்சி நெறியினை தேவதாஸ் கனகசபை மூலம் பெற்றுக்கொண்டார். சிவநேசனின் திரைப்படத்துறை குருவாக இவரே விளங்குகின்றார்.
இந்தப் பயிற்சிக்கூடத்தில் பயில்கின்ற பொழுதே குறும்படத்துறையில் இயங்க ஆரம்பித்துவிட்டார். 
தேவதாஸ் கனகசபையின் வழிகாட்டல் இவரை  குறும்படங்களின் பணிகளை மேற்கொள்ள வைத்தது.
இந்தக் காலப்பகுதியில் இவரது முதலாவது குறும்படத்தயாரிப்பு வேலைகளை இவரின் நண்பர்கள் வினோதன், சாந்தன் ஆகியோருடன் சேர்ந்து ஆரம்பித்துக்கொண்டார். குறும்படக்காட்சிகள் பலவற்றை ஒளிப்பதிவு
செய்து ஒளித்தொகுப்பு செய்துகொண்டார்.
சிவநேசனின் ஆர்வமானதுறை ஒளித்தொகுப்புப்பணி.
யாழ்ப்பாணம் தொடர்பான  ஆவணப்படத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து தயாரித்திருந்தார்.
சிவநேசனின்  ஒளித்தொகுப்புத் துறைக்கு ஆதரவாக இருந்தவர் அவரது  மூத்த சகோதரன் சிவரூபன்.
அவர்தான் 2003ம் ஆண்டு  காலப்பகுதியில் சமாதானச்சுருள் செயல்திட்டத்தின்மூலம் திரைத்துறைக்கலைஞர்  ஞானதாஸ் மூலம் 4 குறும்படங்களுக்கான படத்தொகுப்பினை மேற்கொள்ள சந்தர்ப்பம் பெற்றுக்கொண்டார்.
‘அழுத்தம்’ ‘செருப்பு’ ‘மூக்குப்பேணி’ ‘போருக்குப்பின்’  போன்ற குறும்படங்களுக்கே சிவநேசன் ஒளித்தொகுப்புப்பணியாற்றினார். இந்தக் குறும்படங்கள் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற குறும்படப்போட்டிகளில் பங்குபற்றியிருந்தன.

நண்பர்களுடன் உரையாடும் வேளைகளில் கதைகள் கூறுவது, கேட்பது வழக்கமாக இருந்து வந்தது. இவ்வாறு இந்தக் கதைப்பரிமாற்றங்கள் நடைபெறுகின்றபொழுது ஏன் இந்தக்கதைகளுக்கு காட்சி வடிவம் கொடுக்கக் கூடாது என்ற சிந்தனையின் வெளிப்பாடு, சிவநேசனை திரப்படத்துறைக்குள் முற்று முழுதாக இழுத்துச் சென்றது. 
அனிமேசன் துறையில் நாட்டம் கொண்டார். இவரே இந்தத்துறை சார்ந்து தேடிக்கற்றுக்கொண்டார். ஓரளவு தேர்ச்சி கிடைத்தாலும் சிவநேசன் அதில் திருப்தி கொள்ளவில்லை. அனிமேசன் துறையில் முழுமைபெறவேண்டும் என முயற்சித்தார். 
இதற்கிடையில் இவரது பெற்றோர்கள் உற்றோர்கள் எல்லோரும் சிவநேசன் திரைப்படத்துறையில் ஈடுபட்டுச் சம்பாதிக்கப்போகின்றார். பணம் மாத்திரமல்ல புகழையும் என்று பச்சைகொடிகாட்டி ஊக்குவித்தார்களா?  இல்லவே இல்லை. அவர்களுக்குத்தெரியும் இலங்கையில் தமிழ்த்திரைப்படத்துறையில் ஈடுபட்டு எதுவும் செய்ய முடியாது என்று, வீண் நேர விரயம், பண விரயம் என்று எடுத்துக்கூறியிருந்தனர். 
சிவநேசன் அவற்றைக்கேட்டிருந்தால் இன்று இந்தக் கலையரங்கம் பகுதியில் மாண்பேற்றம் பெற்றிருப்பாரா? 
சிவநேசன் கலைத்துறையில் முன்வைத்தகாலை பின்வைக்கவில்லை, தொடர்ந்தார்.
நாட்டில் சமாதானம் நிலவிய 2003-2004ம் ஆண்டுகளில் சென்னைக்குச் சென்று அனிமேசன் கிரபிக் கற்றுத்தேறினார். திரைப்படத்துறை பற்றிய பல்வேறு விடயங்களை நேரடியாகப் பார்த்தும் கேட்டும் அறிந்து திரைப்படத்துறைபற்றிய பல்வேறு விடயங்களில்
ஆழமான அறிவைப் பெற்றார்.
கற்கையை முடித்து நாடுதிரும்பினார். ஒளி ஊடகங்களின் கவனித்துக்குரியவரானார். 
2004ம் ஆண்டு முதல் 2007 வரை பிரான்ஸில் இயங்கிவந்த TTN தொலைக்காட்சிக்காக வன்னியில் இருந்து பணியாற்றியிருந்தார்.
2012 முதல்  நேத்திரா தொலைக்காட்சியில்  சிவநேசன்  வரைகலை நிபுணராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
சினிமாவை மட்டகரமாக எடை போடக்கூடாது. அதிலும், திரைப்படத் தொழில்நுட்பம் என்பது அதனைக் கையாள்பவர்களைக் கைவிடாது. 10 ஆண்டுகள் நேத்திரா தொலைக்காட்சியில் பணியாற்றியமை இதனை எடுத்தியம்புகிறது.
500க்கு மேற்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு வரைககைளை மேற்கொண்டுள்ளார்.
இப்பொழுது புஷ்பக27  என்ற முழுநீளத்திரைப்படத்தை தயாரித்து இயக்கி வெளிக்கொணர்ந்துள்ளார்.
2060ம் ஆண்டில் ஈழத்தமிழன் எப்படியிருப்பான் என்ற ஒரு கற்பனை வடிவம் திரைப்படமாகியுள்ளது.
சிவநேசனின் கைவண்ணம் இந்தத் திரைப்படத்தில் நிறைந்திருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சிறப்புக்காட்சிப்படுத்தல் நடத்தப்பட்டது. 
பார்த்தவர்கள் பாராட்டியுள்ளனர். புலம் பெயர்ந்த நாடுகளில் முதலில் சுவிற்சர்லாந்து நாட்டில் 25.02.24 அன்று காண்பிக்கப்படுகிறது.
2019ம் ஆண்டில் வரைகலைக்கான தேசியவிருதுபெற்ற முதல் தமிழன் என்ற பெருமைக்குரியவராகவும் காரை சிவனேசன் திகழ்கின்றார்.
S. K Rajan

Leave a Reply