• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிகே பட்டம்மா முதல் சின்மயி வரை.. பாடகிகளின் முதல் தமிழ்ப்பாடல் பட்டியல்..!

சினிமா

தமிழ் திரை உலகில் பல முன்னணி பாடகிகள் பல ஆண்டுகளாக இருந்து வரும் நிலையில் அவர்களின் ஒரு சிலரைப் பற்றியும், அவர்கள் பாடிய முதல் தமிழ்ப்பாடல் குறித்தும் தற்போது பார்ப்போம்.

டி.கே பட்டம்மாள்: 
தமிழ் திரை உலகில் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய பாடகியாக கடந்த பல ஆண்டுகளாக இருந்தவர். தியாக பூமி என்ற 1939ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தேச சேவை செய்ய வாரீர்’ என்ற சுதந்திர பாடலை பாடினார். இதுதான் அவர் பாடிய முதல் பாடல்.

பி சுசீலா: 
தமிழ் திரை உலகின் எவர்கிரீன் பாடகி என்றால் அவர் பி சுசிலா தான். இவர் ‘பெற்ற தாய்’ என்ற திரைப்படத்தில் ‘எதற்கு அழைத்தாய்’ என்ற பாடலைதான் முதலில் தமிழ் திரைப்படத்திற்காக பாடினார். இந்த பாடலை அவருடன் பாடியவர் ஏ.எம்.ராஜா.

வாணி ஜெயராம்: 
தமிழ் திரை உலகின் வெண்கல குரலுக்கு சொந்தக்காரரான வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் ‘தாயும் சேயும்’ என்ற படத்திற்காக பாடப்பட்டது. ஆனால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை என்பதால் வாணி ஜெயராம் பாடிய முதல் பாடல் ‘வீட்டுக்கு வந்த மருமகள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஓர் இடம் உன்னிடம்’ என்ற பாடல் தான். இந்த பாடலை அவருடன் இணைந்து பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.

எஸ் ஜானகி: 
தமிழ் திரை உலகில் பல ஆண்டுகளாக தனது இனிமையான குரலால் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டிருக்கும் பாடகி என்றால் அவர் ஜானகி தான். ‘கொஞ்சும் சலங்கை’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சிங்காரவேலனே தேவா’ என்ற பாடலை தான் முதலில் பாடினார். 1962ஆம் ஆண்டு வெளியான இந்த படம் சாவித்திரியின் நூறாவது படம். இந்த படத்தில் இடம்பெற்ற பத்து பாடல்களில் இரண்டு பாடல்களை ஜானகி பாடினார். இந்த பாடலுக்கு முன்பே ஜானகி ஒரு பாடலை பாடியதாகவும் ஆனால் இந்த பாடல்தான் முதலில் வெளியான பாடல் என்றும் கூறப்படுகிறது.

சித்ரா: 
சின்னக்குயில் சித்ரா பாடிய முதல் பாடல் ‘நீதானா அந்த குயில்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘பூஜைக்கேத்த பூவிது’ என்ற பாடல். இளையராஜாதான் சித்ராவை அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொர்ணலதா: 
தமிழ் திரை உலகின் மிகச்சிறந்த பாடகிகளில் ஒருவரான சொர்ணலதா பாடிய முதல் பாடல் ‘நீதிக்கு தண்டனை’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ என்ற பாடல்தான். எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் கலைஞர் கருணாநிதி வசனத்தில் உருவான இந்த படத்தில் இடம்பெற்ற பாடலை சொர்ணலதா பாடிய போது அவருக்கு வெறும் 14 வயதுதான்.

சின்மயி: 
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அறிமுகம் செய்த சின்மயி பாடிய முதல் பாடல் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல்தான்.

உஷா உதுப்: 
இவர் மேற்கத்திய இசையில் பாடுவதில் வல்லவர். இவர் பல ஹிந்தி மற்றும் பல மொழிப் பாடல்களை பாடினாலும் தமிழில் இவர் பாடிய முதல் பாடல் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘லவ் இஸ் பியூட்டிஃபுல்’ என்ற பாடல்தான். இந்த படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்திருப்பார்.

ஸ்ரேயா கோஷல்: 
தமிழ் திரை உலகின் திறமையான பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல் பாடிய முதல் பாடல் ‘சொல்ல மறந்த கதை’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘செல்லமே செல்லம்’ என்ற பாடல்.

பாம்பே ஜெயஸ்ரீ: 
அதேபோல் இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான பாம்பே ஜெயஸ்ரீ பாடிய முதல் தமிழ் பாடல் ‘தம்பதிகள்’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘வாடா கண்ணா’ என்ற பாடல்தான்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply