• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹீரோவை தேடி தெருதெருவாக அலைந்த பாரதிராஜா!.. பாண்டியன் உருவான கதை தெரியுமா?…

சினிமா

தமிழ் சினிமாவில் கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் இயல்பாக காட்டி படமெடுத்தவர் பாரதிராஜா. இவர் வந்தபின்னரே ஸ்டுடியோவுக்குள் மட்டுமே இயங்கி வந்த சினிமா வெளியே எட்டி பார்த்தது. இவருக்கு பின்னரே பல இயக்குனர்கள் கிராமபுறங்களில் சென்று திரைப்படங்களை இயக்கினார்கள்.

ராதா, ரேவதி, ராஜா, பாண்டியன், ராதிகா, ஸ்ரீதேவி என பல நடிகர், நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் இவர். கிராமபுற படங்களை மட்டும் எடுக்காமல் டிக் டிக் டிக், சிகப்பு ரோஜாக்கள், ஒரு கைதியின் டைரி, பொம்மலாட்டம், கேப்டன் மகள் என வித்தியாசமான திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.விஜயகுமார், ராதிகாவை வைத்து இவர் எடுத்த கிழக்கு சீமையிலே படம் இன்னொரு பாசமலராக வெளிவந்தது. கடந்த சில வருடங்களாக பாரதிராஜா திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

பாரதிராஜா படம் எடுக்க துவங்கிய காலம் முதலே புதுமுகங்களை அறிமுகப்படுத்துவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். ஏனெனில், பிரபல நடிகர்கள், நடிகைகள் தான் சொல்வதை கேட்கமாட்டார்கள், அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம்.

புதுமுகம் அறிமுகம் செய்வதில் அவரின் கணிப்பு எப்போதும் தப்பியதே இல்லை. அவர் படத்தில் அறிமுகமான பல நடிகர், நடிகைகள் பல திரைப்படங்களிலும் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தனர். பாரதிராஜா மண்வாசனை படத்தை எடுக்க நினைத்தபோது ஒரு புதுமுகத்தை நடிக்க வைக்க முடிவெடுத்தார்.

ஒரு புதிய முகத்தை தேடி ஊர் ஊராக போனார். பலரையும் பார்த்தார். அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. அப்போதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட போனார். கோவிலை விட்டு வெளியே வரும்போது அங்கே ஒரு இளைஞர் வளையல் கடை வைத்திருந்தார். அவரை பார்த்ததும் பாரதிராஜாவுக்கு எங்கோ பொறிதட்டியது. அந்த வாலிபருக்கும் பாரதிராஜாவை தெரிந்திருந்தது.

அவரை காரில் ஏற்றிக்கொண்டு அவர் தங்கியிருந்த விடுதிக்கு போனார். அவரை ‘சிரி’ என்றார்.. ‘கோபப்படு’ என்றார்.. உடனே, இவர்தான் மண்வாசனை ஹீரோ என முடிவு செய்தார். அந்த வாலிபர்தான் பாண்டியன். அதன்பின் 85க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாண்டியன் நடித்தார். இந்த தகவலை அப்போது பாரதிராஜாவுடன் இருந்த சித்ரா லட்சுமணன் ஊடகம் ஒன்றில் கூறியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply