• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் ரசித்துப் பாராட்டிய சிவாஜியின் நடிப்பு

சினிமா

சேஷ் ஆன்கே என்ற வங்காளப் படத்தின் உரிமையை வாங்கி தமிழிலே தயாரிக்கப்பட்ட படம்தான் ‘புதிய பறவை’. சிவாஜி பிலிம்ஸ் சார்பிலே தயாரிக்கப்பட்ட முதல் படம் அது.
அந்தப் படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் எழுதிய ஆரூர்தாஸை அன்னை இல்லத்துக்கு வரவழைத்து மொத்த வசனங்களையும் அவரைப் படிக்கச் சொல்லி கேட்டார் சிவாஜி.
அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த இரண்டாவது கதாநாயகியின் வேடத்திற்கு யார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று சிவாஜி ஆரூர்தாசைக் கேட்டபோது, “என்னைப் பொருத்தவரைக்கும் அந்த பாத்திரத்துக்கு என்னுடைய ஒரே சாய்ஸ் சவுகார் ஜானகிதான்”என்றார் ஆரூர்தாஸ்.
“அந்த அம்மாவின் முகம் மற்ற கதாநாயகிகளை விட ரொம்பவும் வித்தியாசமானது. அது தவிர அந்தம்மா நல்ல கலரும் கூட. அது மட்டுமில்லாமல் நன்கு படித்தவர்.
ஆதலால் அவங்களுடைய நடை, உடை எல்லாவற்றிலும் ஒரு கல்ச்சரும், ஸ்டைலும் இருக்கும்.” என்று ஆரூர்தாஸ் சொன்னவுடன் அவர் சொன்னதை அப்படியே ஒப்புக் கொண்ட சிவாஜி,
“உண்மைதான். அந்த வேஷம் ஜானகியைத் தவிர வேறு யாருக்கும் சரியா வராது. நீ எழுதியிருக்கிற வசனத்தை அந்த அம்மா பிய்ச்சி உதறிடும்” என்றார்.
ஆனால், அந்த நவநாகரீகப் பெண்ணின் பாத்திரத்தில் சவுகார் ஜானகியை ஏற்க முதலில் மறுத்த படத்தின் இயக்குனரான தாதா மிராசி,
“பார்த்த ஞாபகம் இல்லையோ“ பாடல் படப்பிடிப்பின்போது சவுகாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு மிரண்டுபோனது மட்டுமின்றி படத்தின் பிற்பகுதியில் அவரது பாத்திரத்திற்கு அதிகமான முக்கியத்துவத்தையும் கொடுத்தார்.
அந்த படத்திற்கான உடைகள் சிங்கப்பூர், லண்டன் ஆகிய நாடுகளில் தைக்கப்பட்டன. அப்படி இருந்தும் திருப்தி அளிக்காததால் தனக்கான உடையை ஹாங்காங்கிலிருந்து வரவழைத்தார் அவர்.
‘புதிய பறவை’ படத்தின் உச்ச கட்டக் காட்சி இன்றுவரை ரசிகர்கள் மனதிலிருந்து நீங்காத ஒரு காட்சியாக இருக்கிறது என்றால் அதற்குக் காரணம் அந்தக் காட்சியின் வசனங்களும் தங்களது அபாரமான நடிப்பாற்றலால் அந்த வசனங்களுக்கு உயிர் கொடுத்த நட்சத்திரங்களும்தான்.
“என்னோட நீ ஆடிப் பாடினது, ஆசை மரத்துல கல்லைக் கட்டினது எல்லாம் நடிப்பா?” என்று சிவாஜி சரோஜதேவியைப் பார்த்து கதறுகின்ற அந்தக் உச்ச கட்டக் காட்சியில் கண்கலங்காத ரசிகர்களே இருக்க முடியாது.
சிவாஜி அப்படிச் சொன்னவுடன் “இல்லை, உங்களைக் கைது செய்யத்தான் நான் இங்கே வந்தேன். ஆரம்பத்திலே உங்களைக் காதலிக்கிற மாதிரி நான் நடிச்சது உண்மைதான்.
ஆனால், போகப்போக உங்க மேலே என்னையும் அறியாமல் ஒரு அன்பு ஏற்பட்டு உங்களை உண்மையாகவே நான் காதலிச்சேன். என்னை நம்புங்க கோபால் நம்புங்க“ என்று சிவாஜியின் காலடியில் விழுந்து அந்தக் காட்சியில் சரோஜாதேவி கதறி அழுவார்.
அந்தக் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட்டபோது முதல் டேக்கிலேயே சிவாஜி, சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, சவுகார் ஜானகி ஆகிய எல்லா நட்சத்திரங்களும் மிகச் சிறப்பாக நடித்துவிடவே உற்சாகத்தோடு “டேக் ஓகே,பேக் அப்” என்றார் படத்தின் இயக்குனரான தாதா மிராசி.
கிளைமாக்ஸ் காட்சி மிகச் சிறப்பாக அமைந்துவிட்ட மகிழ்ச்சியில் எல்லோரும் படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியே செல்லத் தொடங்கிய நேரத்தில் அந்த கிளைமாக்ஸ் காட்சியில் சிவாஜி பேசுவது போல இன்னும் ஒரு வசனத்தை சேர்த்தால் மட்டுமே அந்தக் காட்சி நிறைவு பெரும் என்று கதாசிரியர் ஆரூர்தாசுக்கு தோன்றியது.
ஆகவே படப்பிடிப்பு தளத்தை வீட்டு வெளியே போய்க் கொண்டிருந்த சிவாஜியை அவசரம் அவசரமாக அவர் தடுத்து நிறுத்தினார்
“ஒரு போலிஸ் அதிகாரி என்பதை மறந்து அந்தப் பெண் உங்களது காலடியில் விழுந்து
கதறுகிறாள். ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ளாமல் நடந்து சென்று விடுகிறீர்கள். நீங்கள் அப்படிப் போவது அந்தப் பெண் கதறி அழுவதையும் நடிப்பு என்று எண்ணிக்கொண்டு நீங்கள் போவது போல இருக்கிறது.
அதற்குப் பதிலாக அவளை நீங்கள் ஏற்றுக்கொண்டது மாதிரி அன்போடும், அனுதாபத் தோடும் “பெண்மையே நீ வாழ்க, உள்ளமே உனக்கு என் நன்றி” என்று சொல்லி விட்டுச் சென்றால் படத்தின் கிளைமாக்ஸ் நிறைவாக இருக்கும்” என்று ஆரூர்தாஸ் சொன்னபோது,
“இதையெல்லாம் மொத்த கிளைமாக்சையும் எடுத்து முடித்தவுடனா சொல்வது?முன்னாலேயே சொல்லியிருக்க வேண்டாமா?” என்று லேசான கோபத்துடன் ஆரூர்தாசைப் பார்த்து கேட்டாலும், அவர் சொன்ன திருத்தம் மிகவும் சரியானது என்பதை உணர்ந்துகொண்ட சிவாஜி,
செட்டுக்கு வெளியே நடந்து போய்க் கொண்டிருந்த இயக்குனர் தாதாமிராசி, சரோஜாதேவி, சவுகார் ஜானகி, எம்.ஆர்.ராதா ஆகிய எல்லோரையும் மீண்டும் செட்டிற்கு வருமாறு அழைத்தார்.

அதன் பின்னர் ஆரூர்தாஸ் புதிதாக சேர்க்க விரும்பிய அந்த வசனத்தைப் பேசி சிவாஜி நடிக்க, அந்தக் காட்சி மீண்டும் படமாக்கப்பட்டது.
இப்போது புதிய பறவை படத்திலே இடம் பெற்றுள்ளது அப்படி திரும்பப் படமாக்கப்பட்ட அந்தக் காட்சிதான்.
1964, செப்டம்பர் மாதம் 12-ம் தேதியன்று வெளியான புதிய பறவையை தனது சொந்த தியேட்டரான சாந்தியில் வெளியிட வேண்டும் என்று சிவாஜி விரும்பினார். அப்போது ராஜ்கபூரின் இந்திப் படமான ‘சங்கம்’ சாந்தி தியேட்டரில் ஓடிக் கொண்டிருந்தது.
அந்தப் படம் நூறு நாட்களை நிறைவு செய்ய உதவ வேண்டும் என்று ராஜ்கபூர் கேட்டுக் கொண்டதால் புதிய பறவை படத்தை பாரகன் தியேட்டரில் வெளியிட்டார் சிவாஜி.
மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த புதிய பறவை வெளியான போது, எம்.ஜி.ஆர் தேவர் பிலிம்சின் தொழிலாளி படத்திலே நடித்துக் கொண்டிருந்தார்.
புதிய பறவையை எல்லாரும் பாராட்டிப் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட அவர் தியேட்டருக்குப் போய் அந்தப் படத்தைப் பார்க்க அவர் முடிவு செய்தார்.
எம்.ஜி.ஆர் புதிய பறவை படத்தைப் பார்க்கப் போகிறார் என்ற தகவல் தெரிந்ததும் செட்டிலே இருந்த கதாசிரியர் ஆரூர்தாசை அழைத்த தேவர்,
”இன்று எம்.ஜி.ஆர் நீ வசனம் எழுதியிருக்கிற புதிய பறவை படத்தை பார்க்கப் போகிறார். நீ இங்கேயிருந்தால் உன்னைக் கூட வைச்சிக்கிட்டு எப்படிப் படம் பார்க்கறதுன்னு அவர் யோசிப்பாரு. அதனாலே படப்பிடிப்பு முடிவதற்கு முன்னாலேயே நீ கிளம்பிவிடு” என்று சொல்ல,
“நீங்கள் சொல்வது சரிதான். நான் உங்கள் கூட இருந்தால் உங்களால் படத்தைப் பற்றி மனம் திறந்து பேச முடியாது. அதனால் நான் இப்போதே கிளம்புகிறேன்” என்று அன்று மதியமே படப்பிடிப்பு தளத்திலிருந்து ஆரூர்தாஸ் கிளம்பிவிட்டார் .
மறுநாள் காலை படப்பிடிப்பிலே ஆரூர்தாஸ் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது வாழ்த்துகள் என்று சொல்லியபடியே அவரை எம்.ஜி.ஆர் வரவேற்றார். அவர் எதற்காக வாழ்த்துகிறார் என்று தெரிந்த போதிலும்,
‘எதுக்காக அண்ணே வாழ்த்து?” என்று ஆரூர்தாஸ் கேட்டபோது,
‘நேத்து ராத்திரி நானும் அம்மாவும் புதிய பறவை படம் பார்த்தோம். தம்பி சிவாஜி ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்.
விசுவோட இசை, கண்ணதாசனோட பாட்டு எல்லாமே நல்லாயிருக்கு” என்று சொன்ன எம்.ஜி.ஆர், படத்தில் உங்க ஹீரோயின் ரொம்ப அழகாக இருக்கிறார்” என்றார்.
சரோஜாதேவி நடித்த பல படங்களுக்கு ஆரூர்தாஸ் தான் வசனம் என்பதால் சரோஜாதேவியைப் பற்றி அவரிடம் குறிப்பிடும் போதெல்லாம் ‘உங்க ஹீரோயின்’ என்று சொல்வது எம்.ஜி.ஆரின் வழக்கம்.
அதற்குப் பிறகு சவுகார் ஜானகியின் நடிப்பைப் பாராட்டிய அவர்,
“அவங்க நடிப்பிலே ஒரு ஸ்டைல் இருக்கு. அவங்களுடைய அறிமுகப் பாடலும், பின்னர் அதே பாடலை அவர்கள் திரும்பப் பாடும் கட்டமும் நன்றாக அமைந்திருக்கு” என்று கூறியிருக்கிறார்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை வெகுவாக பாராட்டிய எம்.ஜி.ஆர்,
“படத்தின் கிளைமாக்ஸ் இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி ரொம்ப வித்தியாசமாக இருந்தது.
கிளைமாக்சில் அந்த சஸ்பென்ஸ் உடைகின்ற காட்சியில் உங்களது வசனம் ரொம்பவும் பிரமாதமாக இருந்தது“ என்று எம்.ஜி.ஆர் சொன்னவுடன்,
அவரது காலில் விழுந்து வணங்கிய ஆரூர்தாஸ் அப்போது மானசீகமாக சிவாஜிக்கு தன்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஒரு கதாசிரியரின் சொல்லுக்காக மீண்டும் அத்தனை நட்சத்திரங்களையும் செட்டுக்கு வரச்சொல்லி அழைத்து அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து கொடுத்த சிவாஜியின் பெருந்தன்மையை நினைத்துப் பார்த்தபோது ஆரூர்தாசின் கண்களில் அவரையும் அறியாமல் ஈரம் கசிந்தது.

Leave a Reply