• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலைப்புக்காகவே ரஜினி நடித்த படம்!..

சினிமா

தலைப்புக்காகவே ரஜினி நடித்த படம்!.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு செண்டிமெண்ட்டா?!..

மக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும் சினிமா என்பது அதை சார்ந்திருப்பவர்களுக்கு அது ஒரு வியாபாரம்தான். ஒரு திரைப்படத்தின் முதலாளி தயாரிப்பாளர்தான். நடிகர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், இயக்குனருக்கும் அவர்தான் சம்பளம் கொடுப்பார். படத்தின் வெற்றிக்கு ஏற்ற நடிகர், இயக்குனர் ஆகியோரின் சம்பளங்கள் ஏறும். ஆயிரத்தில் சம்பளம் வாங்கி நடித்த ரஜினிதான் இப்போது 100 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்.

இது எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். அதேநேரம், சினிமா உலகத்தில் செண்டிமெண்டுக்கு பஞ்சமே இருக்காது. ஒரு படத்தில் ஒரு காட்சியில் ஒரு ஹீரோ ஒன்றை செய்து அந்த படம் ஹிட் அடித்துவிட்டால் அடுத்த படத்திலும் அதை செய்ய சொல்லுவார்கள். அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமான ரஜினி துவக்கத்தில் மிகவும் சொற்பமாகத்தான் சம்பளம் வாங்கினார்.

பாரதிராஜா இயக்கத்தில் அவர் நடித்த பதினாறு வயதினிலே படத்திற்கு கூட அவரின் வாங்கிய சம்பளம் 3 ஆயிரம்தான். அதிலும், பாரதிராஜா 500 பாக்கி வைத்தார் என்பது தனிக்கதை. துவக்கத்தில் கிடைக்கும் வேடங்களில், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் மட்டுமே ரஜினி நடித்தார். கமலுடன் நடிக்கும் படங்களில் அவருக்கு வில்லனாகவே நடித்தார்.

வில்லனாக நடித்தாலும் ரசிகர்களுக்கு அவரை பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் ஆடு புலி ஆட்டம் படத்தில் வில்லனாக நடித்த ரஜினியை மக்கள் ஹீரோவாகத்தான் பார்த்தனர். அதனால்தான், ரஜினியை ஹீரோவாக போடலாம் என்கிற நம்பிக்கை தயாரிப்பாளருக்கு வந்தது.

ரஜினியை அப்படி முதலில் பார்த்த தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் கலைஞானம்தான். அவர் எழுதி, தயாரித்த பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக அறிமுகம் செய்தார். படம் ஹிட். இந்த படத்தில் நடிப்பது பற்றி கலைஞானம் ரஜினியிடம் பேச சென்றபோது படத்தின் தலைப்பு ‘பைரவி’ என்றார். உடனே நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி. அதற்கு காரணம் அறிமுகமான அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி பேசும் முதல் வசனம் ‘பைரவி இருக்காளா’ என்பதுதான்.

தன்னை ஹீரோவாக்கி பார்த்த கலைஞானத்திற்கு பின்னாளில் சொந்தமாக வீடு ஒன்றையும் ரஜினி கட்டிகொடுத்து கவுரவித்தார். அதோடு, அவருக்கு பல வகைகளிலும் பண உதவியும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply