• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை - ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றில் தெரிவிப்பு

இலங்கை

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை எனவும், பொருளாதார ரீதியான தீர்வே உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் ஐந்தாவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று வைபவ ரீதியாக காலை ஆரம்பமானது.

இதன்போது, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாட்டில் உள்ள அனைத்து பாதுகாப்பு வலையமைப்புக்களையும் நவீனமயப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புலனாய்வு அமைப்புகள், பாதுகாப்பு உபகரணங்கள், பயிற்சி முறைகள், படையினர், இராணுவ உபகரணங்கள், மூலோபாய நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும், நாட்டில் ஏற்படக்கூடிய பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்தி வருகிறோம்.

நமது வெளிநாட்டு உறவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் தேவையாகும்.

எனவே, அனைத்து நாடுகளுடனும் அணிசேராக் கொள்கையுடனும் நட்புறவு அடிப்படையிலும் வெளிநாட்டு உறவுகளைத் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கிகொள்ள புதிய முறையிலான வெளிநாட்டுக் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும்.

இதற்கமைய எமது வெளியுறவுக் கொள்கைகளை காலத்திற்கேற்ற வகையில் மறுசீரமைத்துக் கொள்வோம்.

பல நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட ஆரம்பித்துள்ளோம்.

எதிர்காலத்தில் சீனா, இந்தோனேசியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடனும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைக் கைசாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

மேலும், ஒன்பது மாகாணங்களினதும் பொருளாதாரத்தைப் பலப்படுத்த அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

யாழ்ப்பாணம், திருகோணமலை, பிங்கிரிய, ஹம்பாந்தோட்டை, கண்டி உள்ளிட்ட நகரங்களிலும் எமது பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கான வேலைத் திட்டத்தை நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம்.

தற்போதும் இந்தியாவுடன் இணைந்து திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

அரசியலமைப்பில் மாகாண சபை அதிகாரங்களின் மூன்றாவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு சில அதிகாரங்களை உரிய வகையில் வழங்குவோம்.

பொருளாதார நெருக்கடிக்கு அரசியல் தீர்வுகள் இல்லை. பொருளாதார ரீதியான தீர்வே உள்ளது. அறிவியல் தீர்வை தேட வேண்டும்.

அதனைவிடுத்து சில அரசியல் குழுக்கள் பழைய அரசியல் தீர்வுகளை கூறி பிரசித்தமடைய முயற்சிப்பது கவலைக்குரியதாகும்.

பொருளாதார மாற்றச் சட்டம் விரைவில் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படும். அதற்குரிய புதிய நிறுவனத்தையும் உருவாக்க வேண்டும்.

அரசியல் அபிலாஷைகளை மனத்தில் வைத்துக்கொண்டு, தேர்தலில் பெறும் வாக்குகளை இலக்காகக் கொண்டு, நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை வழங்கி அல்லது வீண்கதை பேசி எம்மால் முன்நோக்கிச் செல்ல முடியாது.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சவாலை ஒற்றுமையுடன் எதிர்கொண்டால் மட்டுமே நமது பயணத்தைத் துரிதப்படுத்த முடியும்.

பல தசாப்தங்களாக என்னை விமர்ச்சித்தவர்களே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது உள்ளார்கள்.

ஆனால், நாட்டின் நன்மைக்காக அவர்களில் பெரும்பாளானவர்கள் பழைய பகையை மறந்துவிட்டு ஒன்றுபட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பவர்கள் என்னுடன் பல காலமாக அரசியலில் ஈடுபட்டவர்கள்.
நான் அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர்களும் உள்ளனர்.

நாட்டுக்கான பொது பயணத்தில் இணைந்துகொள்ள பொதுஜன பெரமுனவால் முடியுமாக இருந்தால் ஐக்கிய மக்கள் சக்தியால் அதனை செய்ய முடியாதிருப்பது ஏன்?” எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியிருந்தார்.
 

Leave a Reply