• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோய் காரணமாக சார்லஸ் மன்னர் பதவி விலகினால் அடுத்து என்ன நடக்கும்?

புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னர் சார்லஸ் பதவி விலக நேர்ந்தால், வேல்ஸ் இளவரசர் மன்னராக முடிசூடுவார் என்றே கூறப்படுகிறது. அப்படியான ஒரு நடவடிக்கை மிக மிக அரிதாகவே பார்க்கப்படுகிறது. 1936ல் தான் கடைசியாக பிரித்தானிய மன்னர் ஒருவர் பதவி விலகியுள்ளார். மன்னர் எட்டாவது எட்வர்ட் என்பவர் அமெரிக்க நடிகையும் விவாகரத்து பெற்றவருமான Wallis Simpson என்பவரை திருமணம் செய்துகொள்ளும் பொருட்டு, முடி துறந்தார்.
  
விவாகரத்து பெற்ற ஒருவரை திருமணம் செய்து கொள்வது என்பது பல நூறு ஆண்டுகளாக விலக்கப்பட்டதாகவே பிரித்தானிய அரச குடும்பத்தில் கருதப்பட்டு வந்தது.

2022 செப்டம்பர் 8ம் திகதி முதல் ஆட்சியில் இருந்துவரும் மன்னர் மூன்றாம் சார்லஸ் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

இந்த நிலையில் சிகிச்சையின் ஒருபகுதியாக அவர் பதவி விலக நேர்ந்தால், அடுத்த பட்டத்து இளவரசருக்கு முடி சூட்டப்படும். புத்தாண்டுக்கு முந்தைய நாள் டென்மார்க்கின் ராணியார் Margrethe II தாம் முடி துறக்க இருப்பதாக அறிவித்தார்.

முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை உள்ளிட்ட காரணங்களை அவர் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து டென்மார்க்கின் பட்டத்து இளவரசர் Frederik மன்னராக முடி சூட்டிக்கொண்டார்.

அதேப்போன்று, மன்னர் சார்லஸ் சிகிச்சை காரணமாக பதவி விலக நேர்ந்தால், அவரது மகன், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மன்னராக முடி சூட்டப்படுவார். அவரது மகன் இளவரசர் ஜார்ஜ் அடுத்த மன்னருக்கான இடத்திற்கு முன்னேறுவார்.

தற்போது மன்னர் சார்லஸால் சிகிச்சை காரணமாக அலுவல்களை முன்னெடுக்க முடியாமல் போனால் பட்டத்து இளவரசர் வில்லியம் அந்த கடமைகளை ஏற்கலாம், அத்துடன் அவருக்கு உதவியாக அரச குடும்பத்தில் இருந்து 4 பேர்கள் செயல்படலாம்.

அதில் இளவரசர் ஹரி, இளவரசர் ஆண்ட்ரூ ஆகியோர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது. இதனிடையே, மன்னர் சார்லஸுடன் தொலைபேசியில் உரையாடியுள்ள இளவரசர் ஹரி, அமெரிக்காவில் இருந்து லண்டன் திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply