• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகாகவிதை - இப்போதுதான் வாசித்து முடித்தேன்.

சினிமா

காலநீட்சியில் நீர்த்துப் போய்விடுகிற படைப்பாளிகளுக்கிடையே, தன்னை மேலும் புதுப்பித்துக் காட்டுகிற மாயத்தை நிகழ்த்தியிருக்கிறார் வைரமுத்து.
உண்மையில் நவீனத்துவம் என்பது என்ன?
படைப்பின் புறத்தே செய்யப்படும் பூச்சு வேலையா? இல்லை, உள்ளடக்கத்தில் செய்யப்படும் புதிய மாற்றமா? எனில், இரண்டாவதுதான் எனது தேர்வு.
ஆனால், அந்தப் புரிதலில் நிகழ்கால இலக்கிய உலகம் இயங்குகிறதா எனில், நிச்சயம் இல்லை என்பதே எனது பதில். உள்ளடக்கத்தில் புதியதைத் தொட்டிருப்பதன் மூலமும், அது வெளிப்பட்டிருக்கும் தன்மையின் மூலமும் ’மகாகவிதை’ தமிழின் மிக முக்கியமான நவீன இலக்கியமாகிறது எனக்கு.
இதுவரைக்குமான வைரமுத்துவின் கவிதை மொழியில் இருந்து விடுபட்டு, ஒரு புதிய மொழி வடிவத்திற்கு அவரது கவிதை நகர்ந்திருக்கிறது. தேர்ந்து கொள்ளும் உள்ளடக்கம் அதற்கான வடிவத்தை அதுவாகவே கோரிப் பெறும் என்பது என் நம்பிக்கை. இங்கேயும் அதுவே நிகழ்ந்திருக்கலாம். வாசிப்பின் ஊடாக, ’தண்ணீர்’ குறித்த அத்தியாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில், திடீரென்று கவிதை மொழி அவரது பழைய வடிவத்திற்குத் தாவி விட்டது போல் உணர்ந்தேன். கடைசியில் அந்தப்பகுதி, தண்ணீர் குறித்து அவர் எப்போதோ எழுதி வாசித்ததை பொருத்தமாக இங்கே இடைச்செருகி விட்டார் என மூளை எடுத்துக்கொடுத்த போது, பழைய வடிவத்திற்கும் புதிய வடிவத்திற்கும் உள்ள வேறுபாட்டின் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொண்டு என்னை நானே பாராட்டிக் கொண்டேன். அவரது பழைய கவிதைகளில், முதல் வரிக்கு உங்களை நீங்கள் ஒப்புக்கொடுத்துவிட்டால் போதுமானது. பிறகு, அதுவாகவே உங்களை கடைசி வரிக்குக் கொண்டுவந்து விட்டுவிடும். இடையில் விலகிக்கொள்ள முடியாத ஒரு சறுக்கல் விளையாட்டைப் போன்றது அது. ’மகாகவிதை’ அப்படியல்ல. நின்று நிதானித்து நாம் ஒவ்வொரு படியாய் ஏற வேண்டியிருக்கிறது. ஒருபுறம் கவிதையை இரசித்துக்கொண்டே, இன்னொரு புறம் செய்திகளையும் சேகரித்துக்கொள்ள வேண்டும். எனவே, இரண்டையும் பகுத்துப் பிரித்தபடியே வாசிப்பை நிகழ்த்திப் போக வேண்டிய கட்டாயத்தை படைப்பு உண்டு பண்ணுகிறது. எவ்வளவு உழைப்பையும் தேடலையும் கோரியிருக்கும் இப்படைப்பு? என்பது வாசிக்கும் போதே உடன் எழுகிற கேள்வியாக இருக்கிறது.

தமிழின் அதிதீவிர இலக்கியவாதிகளே, ’வைரமுத்து நன்றாக எழுதியிருக்கிறார்’ என்று சொல்லிவிட்டால் உங்கள் நாற்காலி பறிக்கப்பட்டுவிடுமோ என்று அஞ்சுவீர்கள்தான். பரவாயில்லை, இரகசியமாகவாவது வாங்கிப் படித்து விடுங்கள். ஏனெனில் - இது ஒரு அனுபவம்.

பழ புகழேந்தி

Leave a Reply