• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிளிநொச்சியில் பொதுமக்களின் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்!

இலங்கை

இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த, கரிநாள் பேரணியில் பொதுமக்கள் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் மோற்கொண்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பொது முடக்கத்துக்கும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு விடுத்திருந்தனர்.

இந்த நிலையில், இன்று கொழும்பில் இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அடக்க முற்பட்டனர்.

தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமித்தேசிய அரசியல் ஆதரவாளர்களும் போராட்டத்தில் பங்குபற்றினர். அத்துடன் பொது மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர தினத்திற்கு எதிராக வடக்கு கிழக்கில் தமிழர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். பேரணிகளை தடுப்பதற்காக கலகம் அடக்கும் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

நீர்த்தாரை, கண்ணீர் புகை குண்டுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தசாப்த்தங்களாக தொடரும் இன பிரச்சினை தீர்க்கப்படாத நிலையில் இலங்கையில் 76ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இலங்கை தீவில் வாழும் தமிழர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்கும் வகையில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியுள்ளனர்.

தமிழர் பிரதேசங்களில் பல இடங்களில் சுதந்திர தின நிகழ்வுக்கு எதிராக பேரணிகள் இடம்பெறுகின்றன.

கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற எதிர்கட்சி உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ளவில்லை. பொருளாதார நெருக்கடியின்போது இவ்வாறான நிகழ்வுகள் அவசியமற்றவை என எதிர்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் இந்நிகழ்வை முற்றாக புறக்கணித்துள்ளன. மலையக தமிழ் கட்சிகள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றின் சில பிரதிநிதிகள் இந்நிகழ்வில் பற்குபற்றியுள்ளனர்.

இதேவேளை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெறவிருந்த சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக்கொள்ளும் 5 பேருக்கு எதிராக பொலிஸாரினால் தடை உத்தரவு பெறப்பட்டது.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் செயற்பாட்டாளர்களான லீலாதேவி, கலாரஞ்சினி, கோகிலவாணி மற்றும் சிவில் செயற்பாட்டாளர் ஒருவர் அடங்கலாக ஐவருக்கு எதிராகவே தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
 

Leave a Reply