• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அன்றே அலப்பறை கிளப்பிய சத்யராஜ் - மணிவண்ணன் காம்போ..!

சினிமா

அமைதிப்படை: சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ - அன்றே அலப்பறை கிளப்பிய சத்யராஜ் - மணிவண்ணன் காம்போ..!

தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று கூட பாக்கியில்லாமல், தமிழக அரசியல் கலாசாரத்தின் அபத்தங்கள் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சத்யராஜ் பாத்திரத்தின் மூலம் அனைத்தையும் ரகளையாகக் கிண்டலடித்திருக்கிறார் மணிவண்ணன்.

இயக்குநர் மணிவண்ணன் இயக்கியதில் மிகவும் பிடித்த திரைப்படம் எது என்று கேட்டால் பலரும் சட்டென்று நினைவுகூரும் திரைப்படமாக ‘அமைதிப் படை’ இருக்கக்கூடும்.

தமிழ் சினிமா இருக்கும் வரையில் 'அமாவாசை என்கிற நாகராஜசோழன் MLA' பாத்திரத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது. அந்த அளவிற்கு அரசியல் அலப்பறை அட்டகாசம் செய்த கேரக்ட்டர் அது. அமாவாசை இல்லாமல் அமைதிப்படை இத்தனை பெரிய வெற்றியை அடைந்திருக்காது.

அரசியல் நையாண்டி படைப்புகளுக்காக ஒரு காலத்தில் புகழ்பெற்றவர் ‘சோ’. அவரது ‘முகமது பின் துக்ளக்’ திரைப்படத்தில் தமிழக அரசியல் கலாசாரத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் தனக்கே உரித்தான முறையில் ரகளையாகக் கிண்டலடித்திருப்பார். இதற்குப் பிறகு ‘பொலிட்டிக்கல் சட்டையர்’ பாணி தூக்கலாக இருந்த படம் என்று ‘அமைதிப் படையை’ சொல்லலாம். பொதுவாக மணிவண்ணனின் படங்களில் ‘நையாண்டித்தனம்’ அதிகமாக இருக்கும்.

நாகராஜசோழன் கேரக்ட்டரை அதன் உச்சம் எனலாம். மணிவண்ணன் என்கிற லொள்ளு மன்னரும், சத்யராஜ் என்கிற நக்கல் நாயகனும் இணைந்து நடத்திய அரசியல் லூட்டிதான் ‘அமைதிப்படை’. இதே மணிவண்ணன் ‘இனி ஒரு சுதந்திரம்’ போன்ற சீரியஸான அரசியல் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார்.

ரஜினிகாந்த்திற்கும் சத்யராஜிற்கும் பொதுவான சில ஒற்றுமைகள் உண்டு. ஒருவர் ஆன்மிகம், இன்னொருவர் நாத்திகம் என்கிற அடிப்படையான வேற்றுமையைத் தவிரப் பல ஒற்றுமைகள். இருவருமே வில்லன் நடிப்பில் பிரகாசித்து பிறகு கதாநாயகர்களாக உயர்ந்தவர்கள். கதாநாயகனாகக் கொடி கட்டிப் பறக்கும் காலத்திலும் கூட, ஸ்கிரிப்ட் நன்றாக இருந்தது என்றால் வில்லன், வயதான வேடம் போன்றவற்றை ஏற்கத் தயங்காதவர்கள். திரைக்கு உள்ளேயும் சரி, திரைக்கு வெளியேயும் சரி, ‘இமேஜ்’ என்கிற விஷயத்தை அதிகம் பார்க்காதவர்கள். தங்களின் இயல்பான தோற்றத்திலேயே பொதுவெளிகளில் காட்சியளிப்பார்கள்.

தமிழ் சினிமாவில் ஏராளமான வில்லன்கள் வந்து பார்வையாளர்களை எரிச்சல் படுத்தினார்கள். ஆனால் வில்லன் பாத்திரத்தையும் ரசிக்க வைத்தது என்றால் அதன் சிறந்த முன்னுதாரணம் எம்.ஆர்.ராதாதான். அந்த வரிசையில் சத்யராஜும் இணைந்து பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தார். ‘காக்கி சட்டை’ திரைப்படத்தில் ‘தகடு... தகடு’ என்று அவர் வித்தியாசமாக உச்சரித்த போது ஹீரோவுக்கு இணையான கைத்தட்டல் கிடைத்தது.

மணிவண்ணனும் சத்யராஜும் ஆரம்பக் காலகட்டத்திலிருந்தே நண்பர்கள். சத்யராஜின் வளர்ச்சிக்கு மணிவண்ணனின் திரைப்படங்கள் காரணமாக இருந்தன. என்றாலும் 'அமைதிப்படை' திரைப்படத்தில் நடிப்பதற்காக மணிவண்ணன் அணுகிய போது சத்யராஜ் தயக்கத்துடன் மறுத்துவிட்டார். காரணம் அப்போதுதான் அவர் முன்னணி ஹீரோவாக கால் ஊன்றி நிற்கத் துவங்கியிருந்தார். ‘வால்டர் வெற்றிவேல்’ படத்தின் வெற்றி அவருக்கு உற்சாகம் அளித்தது. அதே சமயத்தில் ‘ஏர்போர்ட்’ படத்தின் தோல்வி வருத்தத்தை அளித்தது.

இத்தகைய குழப்பத்திலிருந்த சத்யராஜ், எதிர்மறைத்தன்மை கொண்ட பாத்திரத்தில் நடிக்க வேண்டுமா என்று தயங்கினார். ஆனால் மணிவண்ணன் திரைக்கதையை விவரித்தவுடன் அவருக்குள் இருந்த அமாவாசை விழித்திருக்க வேண்டும். உடனே ஒப்புக் கொண்டு விட்டார். மணிவண்ணனின் நம்பிக்கையும் சத்யராஜின் துணிச்சலும் வீண் போகவில்லை. நாகராஜ சோழன் பார்வையாளர்களின் மனதில் கம்பீரமாக வந்து அமர்ந்து விட்டார்.

அமாவாசை என்கிற நாகராஜசோழன் ரிசர்வ் போலீஸில் கான்ஸ்டபிளாக பணிபுரிபவர் தங்கவேல். திருமண நிச்சயத்தின் போது தங்கவேலின் தகப்பன் யார் என்கிற கேள்வி எழுகிறது. திருமணம் தடைப்படுகிறது. பல வருடங்களாக தன் மேல் அவமானச் சுமையாக இருக்கும் இந்தக் கேள்வியால் ஆத்திரம் கொள்ளும் தங்கவேல், தன்னுடைய தாத்தா, பாட்டியிடம் அதைப் பற்றி ஆத்திரத்துடன் விசாரிக்கிறார். அவருடைய பிறப்பின் பின்னணியும் தாயம்மா என்கிற அப்பாவியான பெண்ணைப் பற்றிய கதையும் விரிகிறது.

கோயிலில் தேங்காய் பொறுக்கி வாழ்கிறவன் அமாவாசை. குசும்புத்தனமும் புத்திசாலித்தனமும் கொண்டவன். அவனைத் தன்னுடைய அரசியல் உதவியாளராகச் சேர்த்துக் கொள்கிறார் மணிமாறன். எம்.எல்.ஏ சீட்டு தகராற்றில் கட்சியிலிருந்து வெளியேறும் மணிமாறன், அமாவாசையைத் தேர்தலில் வீம்பாக நிற்க வைக்கிறார். எதிர்பாராதவிதமாக அமாவாசை வெற்றி பெற்று ‘நாகராஜ சோழனாக’ உருமாறுகிறார். இதற்கு இடையில் தாயம்மா என்கிற பெண்ணைக் காதலிப்பதாகச் சொல்லி ஏமாற்றுகிறார். தன்னுடைய அந்தஸ்து உயர்ந்தவுடன் தாயம்மாவைத் திருமணம் செய்ய மறுத்து ஒரு மகாராஜாவின் பெண்ணை மணந்து அரண்மனைக்குச் சொந்தக்காரராகிறார். மனமுடைந்து போகும் தாயம்மா பிரசவத்தின் போது இறந்துவிடுகிறார்.

அப்பாவிப் பெண்ணான தாயம்மாதான் தன்னுடைய தாய் என்பதையும் அவளுடைய வாழ்க்கையைச் சீரழித்த அமாவாசைதான் தற்போதைய எம்.எல்.ஏ., நாகராஜசோழன் என்பதையும் அறியும் தங்கவேலு, பழிவாங்குவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறான். நாகராஜசோழனின் அரசியல் அட்டூழியங்கள் பெருகிக் கொண்டே போகின்றன. தங்கவேலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் கடத்திக் கொண்டு திருமணம் செய்ய முற்படுகிறார். பொங்கியெழும் தங்கவேலு, நாகராஜசோழனைக் கொல்வதோடு படம் நிறைகிறது.

சோழர் பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ...மகன் தங்கவேலுவாகவும் அப்பா நாகராஜசோழனாகவும் இரண்டு வேடங்களில் சத்யராஜ். மகனை விடுங்கள். வழக்கமான விஷயம். அமாவாசையைத்தான் இந்தப் படத்தின் பௌர்ணமி எனலாம். சிவாஜி கணேசனுக்குப் பிறகு எந்த கெட்டப் போட்டாலும் பொருந்துவது போல் முகம் அமைந்திருப்பது சத்யராஜிற்குத்தான். தேங்காய் மூடியைக் கவிழ்த்துப் போட்டது போன்ற தலை மற்றும் பிறாண்டி வைத்த பனியனுடன் அமாவாசையாக வரும் போதும் சரி, கிராப்பு வைத்துக் கொண்டு அல்வா கொடுத்து தாயம்மாவை கரெக்ட் செய்யும் போதும் சரி, நெற்றிக்குப் பின்னால் ஒட்டத் தூக்கி வாரிய நரைமுடியுடனும் கூலிங்கிளாஸூடனும் எம்.எல்.ஏவாக வரும்போதும் சரி, கடைசியில் மொட்டையடித்துக் காவி உடையில் சாமியாராக வரும் போதும் சரி, அனைத்து ஒப்பனைகளும் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்துகின்றன.

ஒப்பனை மட்டுமல்ல, அமாவாசையாக நான்கு தோற்றங்கள், ரிசர்வ் போலீஸ் கான்ஸ்டபிள் தங்கவேலுவாக இளைஞன் தோற்றம் என்று அனைத்திலும் வெவ்வேறு உடல்மொழி, வசன உச்சரிப்பு, நடிப்பு என்று அசத்தியிருக்கிறார் சத்யராஜ். நாயிடம் சண்டை போட்டு தேங்காய் பொறுக்கும் அமாவாசையிடம் “ஏம்ப்பா... அரண்மனையைச் சுத்திப் பார்க்கணும்னு ஆசைப்பட்டா பரவாயில்ல. அரண்மனைக்கே ஆசைப்பட்டா எப்படிப்பா?” என்று மணிவண்ணன் கேட்க, “ஆசைப்பட்டதாலதாங்க மனுசன் நிலாவுல கால் வெச்சான்..." என்று ஆரம்பித்து சாதனையாளர்களின் பெயராக சத்யராஜ் அடுக்க, வாயைப் பிளப்பது மணிவண்ணன் மட்டுமல்ல, நாமும்தான். இங்கு ஆரம்பிக்கும் அமாவாசையின் லொள்ளு கடைசிக் காட்சி வரைக்கும் நான்-ஸ்டாப்பாக பயணிக்கிறது.

தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று கூட பாக்கியில்லாமல், தமிழக அரசியல் கலாசாரத்தின் அபத்தங்கள் ஒன்று கூட மிச்சம் வைக்காமல் சத்யராஜ் பாத்திரத்தின் மூலம் அனைத்தையும் ரகளையாகக் கிண்டலடித்திருக்கிறார் மணிவண்ணன்.

மைக்கைப் பிடித்த அடுத்த கணமே அடுக்குத் தமிழில் தமிழனின் பழம்பெருமைகளை ஒரு முழ நீளத்திற்குப் பேசுவது, கூட்டம் கலைய ஆரம்பித்தவுடன் மிமிக்ரி செய்து அமர வைப்பது, வெற்றியின் போதை தலைக்கு ஏறத் தொடங்கியவுடன் "கால் முட்டுதுங்களா... அப்ப தள்ளி நிக்க வேண்டியதுதானே?” என்று சிகரெட் புகையை சைடு வாக்கில் விட்டபடி ஏற்றிவிட்ட ஏணியையே எகத்தாளமாகக் கையாள்வது, ‘ஏண்டா... என்னைப் புகழ்ந்து கத்தறீங்க?’ என்று பொதுமக்கள் முன்னிலையில் கைத்தடிகளிடம் சொல்லி விட்டு ‘அப்படித்தான் நான் சொல்லுவேன். நீங்க கத்துங்க’ என்று ரகசியமாகக் கட்டளையிடுவது என்று அரசியல்வாதிகள் செய்யும் அத்தனை அபத்தங்களும் தந்திரங்களும் ஊழல்களும் ரகளையாகக் கிண்டலடிக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டேட் முதல் சென்ட்ரல் வரை, கும்பகோண மகாமகம் முதல் ஆந்திரா சி.எம். அட்ராசிட்டி வரை அனைத்துமே நக்கல் வசனங்களின் மூலம் அம்பலப்படுத்தப்படுகின்றன.

ஒருபக்கம் நக்கல் நாகராஜசோழினின் ராஜாங்கம் என்றால் இன்னொரு பக்கம் சீரியஸான இளைஞன் தங்கவேலு. சிடுசிடுவென்ற முகபாவத்துடன் இவர் செய்யும் ரொமான்ஸ் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. தன்னுடைய பிறப்பு மற்றும் தாய் குறித்து கேள்வி எழும் போது ஆவேசப்படுவதும் சுஜாதாவின் பாசத்தைக் கண்டு நெகிழ்வதும் என்று இன்னொரு சத்யராஜூம் தன்னுடைய பங்களிப்பைச் சரியாகத் தந்திருக்கிறார். ஸ்கூல் யூனிபார்மில் வெள்ளந்தியாக மிரளும் பாத்திரத்திற்கு ரஞ்சிதா பொருத்தமாக இருக்கிறார். தாமதமாகப் பிறந்த மகளை, மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் ‘பேத்தி’ என்று பொய் சொல்லும் சிறு காட்சியில் மலேசியா வாசுதேவனின் சங்கடமான சிரிப்பும் சமாளிப்பும் ரசிக்கும்படியாக இருக்கிறது.

‘அல்வா’ சாப்பிட்டு ஏமாந்து போகும் அப்பாவிப் பெண் ‘தாயம்மா’வாக கஸ்தூரி. தந்திரமாக தன்னை கை விட்டு விடும் நாகராஜ சோழனைக் கண்டு கண்ணீர் விடும் காட்சிகளில் பரிதாபத்தை அள்ளுகிறார். எம்.எல்.ஏ.வின் மனைவியாக நடித்திருக்கும் சுஜாதாவின் கேரக்ட்டர் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது. சுஜாதாவும் இதைச் சரியாக உள்வாங்கி அருமையாக நடித்திருக்கிறார். ஓர் இளம்பெண்ணை ஏமாற்றி காவு வாங்கி விட்டு அதன் மீது தன் வெற்றிப்படிக்கட்டை கட்டியிருக்கும் நாகராஜசோழனின் மனச்சாட்சியாக கூடவே இருந்து எச்சரித்துக் கொண்டேயிருப்பதும் தன்னுடைய சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக செயல்படுவதும் என சிறந்த நடிப்பு.

எம்.எல்.ஏ.வின் அல்லக்கையாக வந்து அசத்திய மணிவண்ணன்..! வரம் தந்தவனின் தலையிலேயே கைவைத்த கதையாக, அமாவாசையை அரசியல் பாதைக்கு இழுத்து வந்தவரையே தனது அல்லக்கையாக மாற்றிக் கொள்வார் சத்யராஜ். இந்தப் பாத்திரத்தில் மணிவண்ணனின் ‘லொள்ளு’ நடிப்பு சிறப்பானது. ‘அப்ப ஊட்டிக்குத் தனியாத்தான் போகணும் போல’ என்று முனகும் இடம் முதல், ‘கட்சில இப்ப வந்து சேர்ந்துட்டு என்னை முந்திக்கலாம்ன்னு பார்க்கறியா?’ என்று எம்.எல்.ஏ.வின் உள்ளாடையைத் துவைப்பதற்கு ஆவேசப்படும் காட்சி வரை ஒரு அரசியல் கைத்தடியின் அலப்பறைகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். நாகராஜசோழனின் அட்டூழியங்கள் அதிகரிக்கும் போது “வேணாம் அமாவாசை" என்று எச்சரிப்பவராகவும் மாறுகிறார்.

‘அல்வா’ வாங்கித் தரும் சிறிய காட்சியில் வந்ததாலேயே ‘அல்வா வாசு’ என்று ஒரு துணைநடிகர் அடைமொழியைப் பெற்றார். தன்னுடைய அசட்டுத்தனமான காமெடி இல்லாமல் எஸ்.எஸ்.சந்திரன் சீரியஸாக நடித்த படங்களில் இதுவும் ஒன்று. தரகராக வரும் ஆர்.சுந்தர்ராஜனின் ‘லொள்ளு’ நடிப்பு சுவாரஸ்யம். நாகராஜசோழன் சொல்லும் அத்தனை தீயகாரியங்களையும் சிறப்பாகச் செய்து முடிக்கும் ‘மொட்டை’ நடிகர் தனியாகக் கவனத்தைக் கவர்ந்தார். ‘அக்காளையா சாகடிக்கச் சொல்றீங்க?’ என்று இவர் அதிர்ச்சியுடன் கேட்க “உங்கொக்காளையா சாகடிக்கச் சொன்னேன். கொன்னு போட்டுரு" என்று சத்யராஜ் நக்கலுடன் சொல்வது ரகளையான காட்சி.

இளையராஜாவின் பாடல்கள் இந்தப் படத்திற்குப் பெரிய பலமாக இருந்தன. ‘சொல்லி விடு வெள்ளி நிலவே’ என்கிற பாடல் மிக இனிமையானது. இந்த மெட்டு காட்சிகளின் பின்னணியிலும் வந்து கவர்ந்தது. பொதுவாகப் பின்னணி இசையைக் கவனிக்காதவர்கள் கூட வியந்து ரசிக்குமளவிற்கு ஒரு இடம் வருகிறது. மொட்டை நடிகர் ரஞ்சிதாவைத் துரத்தும் காட்சியின் பரபரப்பை, புல்லாங்குழல் இசையின் மூலம் வித்தியாசமாகத் தந்திருந்தார் ராஜா. சத்யராஜிற்கு சுஜாதா விபூதி வைத்து விடும் இடமும், அதன் பின்னணியில் ஒலிக்கும் ராஜாவின் குரலும் நெகிழ்ச்சியைத் தருகின்றன. கஸ்தூரியை சத்யராஜ் ஏமாற்றி மயக்கும் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும் இசை, அமாவாசை பாத்திரத்தின் நயவஞ்சகத்தைக் கச்சிதமாக எதிரொலிக்கிறது.

படப்பிடிப்புத் தளத்திற்குள் வந்த பிறகுதான் அன்றைய காட்சிகளையும் வசனங்களையும் உருவாக்குவது மணிவண்ணனின் பாணி. ஒரே சமயத்தில் பல திரைப்படங்களையும் இயக்கிக் கொண்டிருப்பார். இதை அவரது பலமாகவும் பலவீனமாகவும் சொல்லலாம். இதையும் மீறி `அமைதிப்படை' படத்தின் காட்சிகள் ஒரு தற்செயல் ஒழுங்குடன் அமைந்திருந்தன. தங்கவேலுவின் திருமண ஏற்பாடு நின்று விடுவதைப் பூக்கோலம் கலைந்து கொண்டிருப்பதாய் இன்டர்கட்டில் காட்டி ரசிக்க வைத்திருந்தார். அரசியல் குறித்த தன்னுடைய விமர்சனங்களையெல்லாம் நக்கலான வசனங்களாகவும் காட்சிகளாகவும் சித்திரித்தது அருமை.

1994-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையன்று இந்தப் படம் வெளியானது. 'மகாநதி', 'சேதுபதி ஐபிஎஸ்', 'வீட்ல விசேஷங்க' போன்ற திரைப்படங்கள் அன்று வெளியாகி கடுமையான போட்டியைத் தந்தாலும் 25 வாரங்களுக்கு மேலாக ஓடி பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது ‘அமைதிப்படை’. சத்யராஜின் நடிப்புப் பயணத்திலும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. ஒரு அரசியல் நகைச்சுவை திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாகவும் அமைந்தது. இதன் இரண்டாம் பாகம் 2013-ல் வெளியானாலும் பார்வையாளர்களை அவ்வளவாகக் கவரவில்லை.

‘அமைதிப் படை’ படத்தை இன்றும் காண்பதற்கு அதிக காரணங்களைத் தேட வேண்டியதில்லை. ஒரேயொரு காரணம் மட்டும் போதும். அது அமாவாசை என்கிற நாகராஜசோழனின் நக்கலும் லொள்ளும் கலந்த நடிப்புதான். மனிதர் படம் பூராவும் அப்படியொரு ரகளையான அலப்பறையைச் செய்து வைத்திருக்கிறார்.

Thiyaghu Ktr

Leave a Reply