• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சங்கராபரணம்!-ரிலீஸ் ஆகி 43 வருடங்கள் ஆகிவிட்டது.

சினிமா

சென்னை மகாராணி தியேட்டரில் பால்ய வயதில் பார்த்த பிறகு விவரம் தெரிந்து தூர்தர்ஷன் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன்.கடந்த வருடம் தொலைக்காட்சியில் காலை 7 மணி அளவில் ஒளிபரப்பினார்கள்.அப்பொழுதும் பார்த்தேன்.

இந்த திரைப்படம் தமிழில் டப் செய்யாமலேயே சென்னையில் மட்டும் 200 நாட்கள் ஓடியதை நினைத்து  இப்பொழுது வரையில் ஆச்சர்யப்படுகிறேன்.

அன்றைய நாயக வழிபாட்டு சினிமாக் காலத்திலேயே சோமையாஜூலு போன்ற நடிகரை முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து  வெற்றி பெற்றதெல்லாம் மிகப் பெரும் சாதனைதான்.

பெரும்பாலான நடிகர்களை எல்லாம் அவன்,இவன் என்றே சொல்லியே  பழக்கப்பட்ட மக்கள் சோமையாஜீலுவை மட்டும் 'அவர்' என்றே அன்றைய பொழுதில் குறிப்பிடுவார்கள்.அந்தக் கதாபாத்திரம்தான்அப்படியொரு மரியாதையை அவருக்கு பெற்று தந்தது  என்று உறுதியாக சொல்லலாம்.

'சலங்கை ஒலி',திரைப்படத்தில் நடனக்கலையினூடே காதலின் புனிதத்தையும் வெகு சிறப்பாக சொல்லியிருப்பார்.இந்தப் படத்தை என்னுடைய சிறுவயதில் ஊரிலிருந்து வந்திருந்த எனது அத்தையையும் அழைத்துக் கொண்டு சென்னை சங்கம் தியேட்டரில் பார்த்ததும்,அப்பொழுது எனது அத்தை கமல் அவர்களைப் பற்றி சொன்னதும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கு.

'இவன் என்ன மாவு ஆட்டும் போதும் ஆடறியான், கிணத்து மேலேயும் ஆடறியான், ஆட்டத்துக்கு பொறந்த பயலா இருப்பியான் போலிருக்கு',என்று சொன்னவுடன் எனது அம்மா முதற்க் கொண்டு எல்லோரும் சிரித்து மகிழ்ந்ததும் நினைவில் இருக்கு.

'சிப்பிக்குள் முத்து',திரைப்படத்தை முதல்வராக இருந்த எம்ஜிஆர் அவர்களுக்கு சிறப்புக் காட்சி போட்டு காண்பிக்கப்படுகிறது.படத்தைப் பார்த்து முடித்தவுடன்  அவர் கமலைப் பார்த்து சொன்னது,'இந்தப் படத்துலே நீ ரொம்ப நல்லா டான்ஸ் ஆடியிருக்கே ',என்று சொன்னவுடன் கமல் சார் உட்பட எல்லோரும் முழிக்க அவரும் விளக்கமாக, 'நல்லா டான்ஸ் ஆடத் தெரிஞ்ச நீ, இந்தக் கேரக்டருக்காக ஆடத் தெரியாத மாதிரி ஆடியிருக்கே பாரு இதுதான் கஷ்டம்',என்று சொன்னவுடன் எல்லோருமே ஆச்சர்யப்பட்டு அவருடைய நுண்ணிய ரசனையை வியந்திருக்கிறார்கள்.

அந்தக் கேரக்டர் இப்படித்தான் ஆடவேண்டும் எனும் எண்ணத்தை விதைத்த இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்கள் எவ்வளவு பெரிய கலாரசிகர் என நினைத்துப் பார்க்கிறேன்.

இவர்,தெலுங்கு மொழி வாடையுடன் பேசும் தமிழை,நான் மிகவும் ரசிப்பதுண்டு.

குருதிப்புனலில் தீவிரவாதிகளின் சூழல் கைதியாக மாட்டிக் கொண்ட காவல்துறை அதிகாரி எனும் கதாபாத்திரத்தை மிக சிறப்பாக செய்திருப்பார்.

யாரடி நீ மோகினி திரைப்படத்தில் கண்டிப்பான தாத்தா கதாபாத்திரத்திலும் நடித்து அக் கதாபாத்திரத்திற்கு பெருமை சேர்த்திருப்பார்.

'சிரி சிரி முவ்வா', எனும் திரைப்படத்தைப் பற்றி சொல்லிக் கொண்டேயிருப்பார்கள் என்னுடைய சிறுவயதில்.இதுநாள் வரையில் அந்தப் படத்தைப் பார்க்கவேயில்லை.இனி,பார்க்கத்தான் வேண்டும்.

சில வேற்றுமொழிக் கலைஞர்களை மட்டும்தான் நம்ம ஊர்க் கலைஞர்களை மாதிரி நினைக்கத் தோன்றும்.அந்த வரிசையில் கே.விஸ்வநாத் அவர்களுக்கும்  இடம் உண்டு.

தேசிய விருதுகள்,மாநில விருதுகள் என பல பெற்று அந்த விருதுகளுக்கே பெருமை சேர்த்தவர் கே.விஸ்வநாத் அவர்கள்.

 கலையுலகில் பெரும் புகழை பெற்று,நிறைவான வாழ்க்கை வாழ்ந்தே 93 வயதில் மறைந்திருக்கிறார்.

அவருடைய படங்களின் வழியே என்றென்றும் நம் மனதில் நிற்பார் என்பது மட்டும் உறுதி.

சே மணிசேகரன்

Leave a Reply