• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சினிமா பைத்தியம் - காமராஜர் பார்த்த கடைசி படம்

சினிமா

குல்சார் எழுதிய இந்தி கதையை தமிழுக்கேற்ப மாற்றி, ஏ.எஸ்.பிரகாசம் திரைக்கதை, வசனம் எழுதினார். தங்களுக்குப் பிடித்த கதாநாயகர்களை சூப்பர் ஹீரோக்களாகக் கருதும் சினிமா ரசிகர்களுக்கு உண்மையை உணர்த்திய படம் இது.

கதைப்படி, பிரபல ஹீரோ ஜெய்-யாக நடித்திருப்பார் ஜெய்சங்கர். அவரின் தீவிர ரசிகையான ஜெயசித்ரா, அவர் திரையில் செய்வதை நிஜமென நம்பி, அவர் மீது பைத்தியமாகி விடுகிறார். அவர் பெயரை கையில் பச்சைக் குத்திக் கொள்கிறார். சமூக சீர்கேட்டுக்கு சினிமாதான் காரணம் என நினைக்கும் அவளின் அண்ணன், போலீஸ் அதிகாரி மேஜர் சுந்தரராஜன். ஆனால், ஜெயசித்ராவுக்கு ஓவர் செல்லம் கொடுத்து வளர்க்கிறார் அண்ணி சவுகார் ஜானகி. தங்கை ஜெயசித்ராவை சவுகாரின் தம்பி கமல்ஹாசனுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார், மேஜர். மறுக்கிறார் ஜெயசித்ரா. சினிமா என்பது மாயை என்பதை அவர் எப்படி புரிந்து, நிஜ வாழ்க்கைக்கு வருகிறார் என்பது கதை.

இந்தக் கதை எம்.ஜி.ஆரை குறிப்பிடுவதாகக் கூறி, இதை இயக்கவும் நடிக்கவும் முதலில் யாரும் முன் வரவில்லை. ஆனால், இது சொல்ல வேண்டிய கதை என்பதால் இயக்க முன் வந்தாராம் முக்தா சீனிவாசன்.

பள்ளியில் படிக்கும் ஜெயசித்ராவும் அவள் தோழியாக பி.ஆர்.விஜயலட்சுமியும் ஜெய்சங்கரை ஒருதலையாகக் காதலிப்பார்கள். இவர்களுடன் சச்சுவும் சேர்ந்துகொள்வார். ஒரு கட்டத்தில் ஜெய்சங்கர் யாருக்கு என்கிற மோதல் இருவருக்கும் வந்துவிடுகிறது. இருவரையும் சமாதானப்படுத்த சச்சு படும்பாடு சுவாரஸ்யம்.

இதில், இடது கை பழக்கம் கொண்டவராக நடித்திருப்பார் கமல். ஏ.எல்.எஸ்.புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசை அமைத்தனர். கண்ணதாசன் பாடல்கள் எழுதினார். ‘என் உள்ளம் அழகான வெள்ளித்திரை’ பாடல் எவர்கிரீன் ஹிட். இப்போது கேட்டாலும் சுகமான ரசனையை தரும் பாடல் இது.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் முடிந்ததும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை, திரைப்படங்களின் மையக் கருத்து சமுதாய நலனுக்காக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்வதோடு படம் முடியும்.

1975-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான இந்தப் படம்தான், முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான காமராஜர் பார்த்த கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது

நன்றி: இந்து தமிழ் திசை.

Leave a Reply