• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கிராமிய கலைஞர் விஜய் லட்சுமி அவர்கள் பற்றி ஓர் சிறு பார்வை!

சினிமா

தமிழில் 'இரட்டைக்கிளவி' எப்படியோ, அப்படித்தான் மூத்த கிராமியக் கலைஞர்கள் விஜயலட்சுமி - நவநீதகிருஷ்ணன் தம்பதியர். இரண்டு பெயரில் ஒரு பெயரை நீக்கினாலும் இன்னொரு பெயருக்கு தனித்த அடையாளம் தெரியாத அளவுக்கு 'செம்புலப் பெயல் நீர்போல' கலந்த இல்வாழ்க்கை இவர்களுடையது. மதுரையில் பரவை என்ற கிராமத்தில் இயற்கை சூழ வாழ்ந்து வருபவர்களிடம், `கிராமியக் கலைகளைத் தாண்டி, உங்கள் ரிலேஷன்ஷிப் பற்றி இன்றைய தலைமுறைக்குக் கொஞ்சம் சொல்லுங்களேன்' என்றோம்.
"'வியட்நாம் வீடு' படத்தில் சிவாஜி, பத்மினியைப் பார்த்து 'உன்னைக் கரம் பிடித்தேன்; வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி'ன்னு பாடுவாரு பாருங்க. என் விஜியைப் பார்த்தால் எனக்கு அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வரும்.''
நவநீதகிருஷ்ணன்
''என்னோட அம்மா வழி ஆச்சியும் விஜியோட அப்பாவைப் பெத்த ஆச்சியும் தூரத்து சொந்தம். எங்க திருமணம் பாட்டிகள் நிச்சயம் பண்ணின திருமணம். அப்போ, விஜி மதுரை மீனாட்சி கல்லூரியில தமிழ்ப் பேராசிரியர். நான் மதுரை தியாகராஜர் கல்லூரியில தமிழ்ப் பேராசிரியர்.

எனக்கு தமிழ் மட்டும்தான் தெரியும். விஜிக்கு பாட்டு, நடனம், ஓவியம், சிறுகதை, நாவல் என எல்லா கலைகளும் நன்கு கை வரும். 'வியட்நாம் வீடு' படத்தில் சிவாஜி, பத்மினியைப் பார்த்து 'உன்னைக் கரம் பிடித்தேன்; வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி'ன்னு பாடுவாரு பாருங்க. என் விஜியைப் பார்த்தால் எனக்கு அந்தப் பாட்டுதான் நினைவுக்கு வரும்'' - கணவர் நவநீதகிருஷ்ணன் தன்னைப் பற்றி உருகிப் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்த விஜயலட்சுமி அடுத்துப் பேச ஆரம்பித்தார்.
''இவருக்கு முன்னாடி ஒரு அமெரிக்க மாப்பிள்ளை என்னைப் பெண் பார்த்துட்டுப் போனாரு. 'ஆஃப்டர் ஆல் தமிழ்'னு ஒரு வார்த்தை சொன்னதுக்காகவே அவரை வேண்டாம்னு சொல்லிட்டேன். அந்த மாப்பிள்ளை கிளம்பினதுக்கப்புறம், எங்கப்பாகிட்டே 'தமிழை மதிக்கிற, தமிழில் எம்.ஏ முடித்த, ஒரு தமிழ்ப் பேராசிரியரைத்தான் திருமணம் செய்துக்குவேன்'னு உறுதியா சொல்லிட்டேன். இவர் படிச்ச தமிழ்தான் எங்களை ஒண்ணு சேர்த்துச்சு.''
''அவர் என்னைப் பெண் பார்க்க வந்திருந்தப்போ நான் அவரோட பாதங்களைத்தான் முதல்ல பார்த்தேன். 'குறிஞ்சி மலர்' நாவலில் வரும் கதாநாயகன் அரவிந்தனின் பாதம்போல வெள்ளை வெளேர்ன்னு இருந்துச்சு. நானோ கறுப்பு நிறம். அவருக்கு என்னைப் பிடிக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. சரி, அவருக்கு நம்மைப் பிடிச்சதுன்னா கிளம்பிப்போகும்போது திரும்பிப் பார்ப்பார்னு மனசுக்குள்ள நானே முடிவு பண்ணிக்கிட்டேன். ஆனா, இவர் என்னைத் திரும்பியே பார்க்கலை'' என்று லைட்டாகக் கணவர் மீது பொய்க்கோபம் காட்டுகிறார் விஜயலட்சுமி.
"விஜி, ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடல்களைப்பத்தி 7 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தப்போ எங்களுக்குள்ள இல்வாழ்க்கையே கிடையாது.''
நவநீதகிருஷ்ணன்
''நான் அன்னிக்கு விஜியோட முகத்தைப் பார்க்கவேயில்ல. அவங்க தலைமுடியை மட்டும்தான் பார்த்துக்கிட்டிருந்தேன். அவ்ளோ அழகா இருந்துச்சு'' வெட்கச்சிரிப்புடன், திருமணத்துக்கு முன்னதான தன் முதல் ரொமான்டிக் தருணத்தை ஓப்பன் செய்கிறார் நவநீதகிருஷ்ணன். அதே வெட்கச்சிரிப்புடன் கணவரைப் பிரியம் பொங்கப் பார்க்கிறார் விஜயலட்சுமி.
தன்னுடைய வருங்காலத் துணை இதோ பக்கத்தில்தான் இருக்கிறது என்பது தெரியாமலே இருவரும் அருகருகே இருந்த தருணங்களும் இவர்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது.
''உலகத் தமிழ் மாநாடு ஒன்றில் நான் முதல் வரிசையில் உட்கார்ந்துக்கிட்டிருந்தப்போ இவர் இரண்டாம் வரிசையில உட்கார்ந்துட்டு இருந்திருக்கார். ஆனா, ரெண்டு பேருமே ஒருவரையொருவர் பார்த்துக்கலை. இதைக் கல்யாணத்துக்குப் பிறகு பேசிக்கிட்டோம்'' என்கிறார் விஜயலட்சுமி.
''கிராமியக் கலைகளை சேகரிக்க வேண்டும் என்கிற ஒத்தக்கருத்து இருந்ததாலதான், எங்களுக்குத் திருமணமான மறு வருடத்திலிருந்தே கிராமம் கிராமமாகச் செல்ல ஆரம்பித்தோம். விஜி, ஆழ்வார் பாடல்களில் ஆண்டாள் பாடல்களைப் பற்றி 7 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தப்போ எங்களுக்குள்ள இல்வாழ்க்கையே கிடையாது.

நாங்க கணவன் - மனைவிங்கிறதைத் தாண்டி அறிவுத் தோழர்களாக இருந்தோம், இருக்கிறோம். விஜியோட குரல், என்னோட கால்கள், பேராசிரியர் பணி, குழந்தைகள், வீடுன்னு எங்களோட இத்தனை வருஷக் குடும்ப வாழ்க்கையில தாளம் தப்பினதே இல்லை. எங்கம்மாகூட 'பொண்டாட்டிப் பேச்சுக்கு ஆடுறான்'னு என்னைக் கிண்டல் பண்ணுவாங்க'' என்று சிரிப்புடன் முடிக்கிறார் நவநீதகிருஷ்ணன்.

Prashantha Kumar
 

Leave a Reply