• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தலையில் இறங்கிய 9 MM புல்லட் - 4 நாள்களாக தெரியாமல் இருந்த இளைஞர்

கனடா

பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio-21). மருத்துவம் பயின்றுவரும் இவர், புத்தாண்டு தினத்தன்று, தன் நண்பர்களுடன் கடற்கரையில் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருந்தார்.

அப்போது, தலையில் யாரோ சிறு கல்லால் அடித்ததுபோல உணர்ந்திருக்கிறார். சிறிதளவு ரத்தமும் வந்திருக்கிறது.

யாரோ விளையாடியிருக்கிறார்கள் என நினைத்த மேடியஸ் ஃபேசியோ, தன் நண்பரின் உதவியுடன் ரத்தம் வந்த இடத்தில் சில ஐஸ் கட்டிகளை மட்டும் வைத்துவிட்டு, புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குச் சென்றிருக்கிறார்.

நான்கு நாள்களுக்குப் பிறகு, அவர் தனது வீட்டுக்குத் திரும்பும்போது, அவருடைய ஒரு கையில் மிகக் கடுமையான வலியை உணர்ந்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து, உடனே மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்திருக்கிறார். அப்போதுதான், அவருடைய தலையில், துப்பாக்கிக் குண்டு இருப்பது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக உள்ளூர் ஊடகங்களுக்கு அவர் அளித்த பேட்டியில், ``என் வலதுக் கை திடீரென வேலைசெய்யவில்லை. அதனால்தான் மருத்துவமனை வந்தேன். அன்று சிறு கல்லால் யாரோ விளையாட்டுக்காக அடித்திருக்கிறார்கள் என்றுதான் உணர்ந்தேன்.

ஆனால், தலையில் துப்பாக்கிக் குண்டு இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை. அன்று துப்பாக்கிச்சுடும் சத்தம்கூட கேட்கவில்லை.

மருத்துவர்கள் சுமார் 2 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 9 மி.மீ துப்பாக்கிக் குண்டை அகற்றியிருக்கிறார்கள். மூளையில் குண்டு இருந்ததால்தான் என்னால் கைகளை அசைக்க முடியாமல் போயிருக்கிறது. தற்போது உடல் நிலை சீரடைந்து வருகிறது.

எடுக்கப்பட்ட துப்பாக்கிக் குண்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், ``துப்பாக்கிச்சூடு நடந்த இடத்தில் ராணுவப் பயிற்சியோ, காவல்துறைப் பயிற்சியோ நடக்கவில்லை. துப்பாக்கிக் குண்டை ஆய்வு செய்து வருகிறோம். இது விபத்தா, கொலை முயற்சியா என்பதையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.  
 

Leave a Reply