• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வீரர்களின் மனைவிகளால் புதிய சிக்கலில் புதின்

2022 பிப்ரவரி மாதம், ரஷியா உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.

இரண்டாம் வருடத்தை நெருங்கும் இப்போரில் இரு தரப்பிலும் பலத்த உயிர்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

ரஷிய தரப்பில் பல்லாயிரக்கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

2022ல் சுமார் 3 லட்சம் உபரி ராணுவ வீரர்களை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் படையில் சேர்த்தார்.

நீடிக்கும் போரினால் ராணுவ வீரர்கள் உயிரிழப்பதும், நீண்ட நாட்கள் குடும்பங்களை விட்டு பிரிந்திருப்பதும், படுகாயங்களால் உடல் உறுப்புகளை இழப்பதும் நடப்பதால், இந்த ராணுவ வீரர்களின் மனைவிகள் பொறுமை இழந்து வருகின்றனர்.

இது குறித்து சமூக வலைதளங்கள் வழியாக அவர்கள் உரையாடி, ஒருங்கிணைந்து "தி வே ஹோம்" (The Way Home) எனும் ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

நாட்டிற்காக ஆற்ற வேண்டிய கடமையில் தங்கள் கணவர்கள் அவர்களது பங்கை சரிவர செய்து விட்டதாகவும், இனி அவர்கள் திருப்பி அனுப்பப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போரிஸ் நடெஸ்டின் (Boris Nadezhdin) எனும் முக்கிய அரசியல் தலைவரிடம் இது குறித்து முறையிட்ட வீரர்களின் மனைவிகள், " இரண்டாம் உலகப் போரின் போது ரஷியாவில் இருந்த நிலை வேறு. அப்போது நாங்கள் தாக்கப்பட்டோம். இப்போது நிலைமை அப்படி இல்லையே; நேரெதிரான நிலைதான் உள்ளது. எங்கள் கணவர்களை திருப்பி அனுப்ப எப்போது அரசாங்கம் முடிவெடுக்கும்? அவர்கள் கைகள் அல்லது கால்களை இழந்த பிறகா? படுகாயங்களினால் வெறும் காய்கறிகளை போல் அவர்கள் மாறியதும்தான் அவர்களை திருப்பி அனுப்புவீர்களா? இல்லை, அவர்களது உடல்கள் பிரேத பெட்டியில் அடைக்கப்பட்டு அனுப்பப்படும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டுமா?" என கோபத்துடன் கேட்டனர்.

போர் குறித்து பொதுவெளியில் எந்த விமர்சனம் செய்தாலும் ரஷியாவில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply