• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்.ஜி.ஆர் - பாகவதர்...

சினிமா

அண்ணாமலை படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஒரு படியில் மேலேறிக்கொண்டிருப்பார். மற்றொரு படியில் சரத் கீழே இறங்கி வருவார். சிம்பாலிக் ஷாட்டாக இதை வைத்தார் இயக்குனர். தந்தைகளை இலங்கையில் இழந்த இரண்டு கலைஞர்களில் எம்ஜிஆர் படியில் ஏறிக்கொண்டிருந்த போது பாகவதர் படியில் இறங்கிக்கொண்டிருந்தார். அந்த சிம்பாலிக் ஷாட் எஸ்கலேட்டர் காட்சி ஒரு வழியில் பாகவதர்-எம்ஜிஆர் இருவருக்கு பொருந்தும் ஷாட் தான்.
பாகவதர் படங்களில் நடிக்கத்தொடங்கிய போது பேசும்படக்காலம். அப்போது எம்.ஜி.ஆர் வாய்ப்புக்களுக்காக அலைந்து கொண்டிருந்த நேரம். பாகவதர் வசீகரிக்கும் குரலுடையவர். அவரைப்போல பாடக நடிகர்களுக்கே திரையில் வாய்ப்புகள் கிடைத்த நேரம். எம்.ஜி.ஆருக்கு பாட்டு வராது.
சதி லீலாவதிக்குப்பிறகு இரு சகோதரர்கள், தக்ஷயக்னம், வீர ஜெகதீஸ், மாயா மச்சீந்திரா, பிரகலாதா படங்களில் சிறிய பாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். 

சதி லீலாவதிக்குப் பிறகு நான்கு வருடங்களுக்குப்பின் எம்.ஜி.ஆருக்கு பாகவதருடன் நடிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பாகவதர் அப்போது மிகப்பெரிய வெற்றிகளை குவித்தவர். அவரோடு நடிப்பதென்பது பெரிய வரமாக கருதியிருந்த காலம்.  மக்களுக்கு எம்.ஜி.ஆரை தெரியவே தெரியாது. 'அசோக்குமார்' படத்தில் படைத்தளபதி மகேந்திரன் என்கிற வேடத்தில் தேர்வானார் எம்.ஜி.ஆர். இயக்கம் ராஜா சந்திரசேகர். பாகவதர் முதலில் எம்.ஜி.ஆர் நடிக்க சம்மதித்தாலும் பின் அவர் வேண்டாம் என சொன்னதாக தெரிகிறது. எம்.ஜி.ஆருக்கு இது பேரதிர்ச்சி. பாகவதர் வீட்டில் அவரைப் பார்த்துக்கேட்க பழியாக கிடந்தார் எம்.ஜி.ஆர். பாகவதரின் மனைவி பாகவதர் உள்ளே இருப்பதாக கூட பதில் சொல்ல மாட்டார். நிறைய அலைச்சலுக்குப்பிறகு ராஜா சந்திரசேகரின் சகோதரரும், உதவி இயக்குனரானுமாக இருந்த டி.ஆர்.ரகுநாத் விடாப்பிடியாக எம்.ஜி.ஆர் தான் நடிக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்.
அசோக்குமார் படத்தில் மாமன்னர் அசோகரின் இரண்டாவது மகன் குணாளன் (பாகவதர்).குணாளனின் தவறுக்கு தண்டனையாக மன்னர் மகேந்திரனிடம்(எம்.ஜி.ஆர்) அவரின் கண்களை எடுக்கச்சொல்வார். குணாளனின் கண்களை எடுக்க இரண்டு இரும்பு தடிகள் பழுக்கக்காய்ச்சப்படுகின்றன. ஆனால் மகேந்திரன் பாகவதருக்கு தண்டனை கொடுக்க முடியாமல் தடுமாறுவார். கதறி அழுவார். இறுதியில் பாகவதரே தன் கண்களில் பழுக்கக்காய்ச்சிய இரும்புத்தடிகளைக் கொண்டு குருடாக்கிக்கொள்வார். குருடனானதும் எம்.ஜி.ஆர் அவர் நடந்து போக ஒரு குச்சியை கையில் தருவார்.
படம் வெளியானதும் அதுவரை எம்.ஜி.ஆரை தெரியாதவர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். பாகவதருக்கு குச்சி எடுத்துக்கொடுத்தது நீங்க தானே எனக்கேட்டு பலரும் அவரை அறிந்திருந்தனர்.
காலம் என்பது ஒரு சக்கரம். சுற்றிக்கொண்டிருந்தால் தானே அது சக்கரம். ஒரு விழாவுக்காக எம்.ஜி.ஆர் போனபோது அதே விழாவில் பாகவதரும் கலந்து கொண்டார். பாகவதர் மேடையில்  எம்.ஜி.ஆர் இறங்கியதும் மக்கள் எம்ஜிஆரைப்பார்த்து ஆர்ப்பரிக்க பாகவதரே 'அமைதி..அமைதி..அமைதியாக இருங்கள்..அவர் மேடைக்கு வருவார்' எனச்சொன்னதும் நடந்தது. பாகவதர் கண் முன்னே எம்.ஜி.ஆர் வளர்ந்திருந்தார்.
வருடங்கள் கடந்தன. எம்.ஜி.ஆர் முதலமைச்சராக உட்கார்ந்திருக்கிறார். அவரது உதவியாளர் ரவீந்தர்(காஜா மொய்தீன்) தினமும் எம்.ஜி.ஆர் ஆற்காடு ரோடு அலுவலக வாசலில் ஒரு அம்மா நிற்பதை பார்க்கிறார். பொதுவாக எம்.ஜி.ஆர் அலுவலக வாசலில் பெண்களை மட்டுமல்ல யாரையும் காக்க வைக்க மாட்டார். ரவீந்தரைப்பார்த்ததும் அந்தப்பெண்மணி ரவீந்தரிடம் தெரிந்த பாவத்தோடு பேசத்தொடங்கினார். "யாரும்மா நீங்க?"
"தம்பி. நான் தான் பாகவதரின் மனைவி.  எம்.ஜி.ஆரை பார்த்து உதவி கேட்க வந்தேன். தினமும் வருகிறேன். பார்க்க முடியவில்லை.."
"சரிம்மா..நான் சொல்கிறேன்..."
எம்.ஜி.ஆரிடம் வந்த ரவீந்தர், 
"வெளியே ஒரு அம்மா காத்திருக்காங்க...தெரியுமா?" எனக்கேட்க, " பாகவதர் மனைவி தானே....தெரியும்...நீ உன் வேலையைப்பார்..." என்கிறார்.
எம்.ஜி.ஆரின் கடுகடுத்த முகத்தை பார்த்த ரவீந்தர் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. அடுத்த சில நாட்களில் செய்தித்தாளில் செய்தி வந்தது. பாகவதர் குடும்பத்துக்கு தனது சொந்தப்பணத்திலிருந்து நிதி உதவி, பாகவதர் வீடிருந்த தெருவுக்கு பாகவதரின் பெயர் வைப்பு, அரங்கத்துக்கு பாகவதரின் பெயர் சூடல்  என செய்தியோடு பாகவதர் குடும்பத்தோடு எம்.ஜி.ஆர் நிற்கும் படமும் வந்திருந்தது. ரவீந்தரே அதைப்படித்து தான் தெரிந்து கொண்டார். இப்படித்தான்...தான் செய்யும் உதவிகளை யாரிடமும் சொல்லமாட்டார் என ரவீந்தருக்கு தெரியும்.
"ரவீந்தர்...செய்தித்தாள் பார்த்தாயா?" என்கிறார் எம்.ஜி.ஆர். 
"ம்..பார்த்தேன்.."
"இப்போது உனக்கு திருப்தி தானே.."
"இதில் என் திருப்திக்கு என்ன வேலை?"
"ரவீந்தர்...காலம் எப்படியும் மாறும் என்பதை அந்த அம்மா உணர வேண்டும் என்பதற்காகவே காக்க வைத்தேன். வெறும் இரண்டு நாட்கள் காக்க வைத்ததே அந்த அம்மாவுக்கு கஷ்டமாக இருக்கிறது. எத்தனை நாள் நான் இவர்கள் வீட்டு வாசலில் காத்துக்கிடந்தேன். அசோக்குமார் பட வாய்ப்புக்காக. இந்தம்மாவும் என்னைப்பற்றி என்னென்னவோ ராஜா சந்திரசேகரிடம் சொல்லிப் பார்த்தார். கடைசியில் சந்திரசேகர், ரகுநாத் சகோதரர்களின்கருணையால் அந்த வாய்ப்பு எனக்குக்கிடைத்தது....எப்போதும் நாம்உயரத்திலிருக்கிறோம் என்பதற்காக கீழே உள்ளவர்களின் வாய்ப்பை பறிக்கக்கூடாது.."
இதை சொல்லக்காரணம் பாகவதரின் வீழ்ச்சிக்கு ஒரு விதத்தில் அவர் மனைவி கமலமும் காரணம் என எம்.ஜி.ஆர் நினைத்தது தான். 
எம்.ஜி.ஆர் பாகவதரின் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். பாகவதர் சிறையிலிருந்து வந்து சொந்தமாக தயாரித்த 'ராஜமுக்தி' படத்தில் எம்.ஜி.ஆர் நடித்தார்.
காலம் எதையும் புரட்டிப்போட வல்லது. மேலிருப்பவன் கீழேயும், கீழுள்ளவன் மேலேயும் போவது இயல்பானது. நாம் அந்த உண்மை உணர்ந்து நடப்பது நல்லதே....
இருவர் -9

 

Selvan Anbu
 

Leave a Reply