• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பெரிய நடிகையாக இல்லாத போதே சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி

சினிமா

காலில் பட்ட ரத்தம்… பெரிய நடிகையாக இல்லாத போதே சரோஜாதேவிக்கு எம்.ஜி.ஆர் செய்த உதவி

சினிமாவுக்கு வரும்போதே எங்க அம்மா காதலிக்க கூடாது என சொன்னதால், யாரையும் காதலிக்கவில்லை; மலரும் நினைவுகளை பகிர்ந்த சரோஜா தேவி.

1960 மற்றும் 70 களில் தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர் சரோஜா தேவி. அன்றைய முன்னணி நட்சத்திரங்களான எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், என்.டி.ஆர், நாகேஸ்வரராவ் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் சரோஜா தேவி.

இந்தநிலையில், நடிகை சரோஜா தேவி தனியார் யூடியூப் சேனலில் சினிமாவில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துக் கொண்டார். அந்த வீடியோவில், தமிழில் ஒரே நேரத்தில் 30 படங்களில் நடித்து வந்ததால், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடிக்க முடியாமல் போனது. கச்ச தேவயானி படத்தில் நடித்தப்போது தான் முதன்முறையாக எம்.ஜி.ஆரை பார்த்தேன். அப்போது முதன்முறை எம்.ஜி.ஆர் என்னிடம் பேசியபோது கன்னடத்தில் உரையாடினார்.

எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்தப்போது கண்ணாடி என் காலில் குத்தி ரத்தம் வந்தது. அப்போது எம்.ஜி.ஆர் அவரது தொடை மேல் என் காலை எடுத்து வைத்து, அவரது கர்ச்சீப்பால் ரத்தத்தை துடைத்து விட்டார். நான் அப்போது பெரிய நடிகையாக இல்லாதப்போதும் எம்.ஜி.ஆர் இதைச் செய்தார். பின்னர் நாடோடி மன்னன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்தேன். அந்தப்படம் வெற்றிகரமாக ஓடியது. திருடாதே படத்தில் நடித்தப்போது எம்.ஜி.ஆர் எனக்காக காத்திருப்பார். எனக்கு சங்கடமாக இருக்கும் ஆனால், எம்.ஜி.ஆர் பெருந்தன்மையாக இருப்பார். எம்.ஜி.ஆருடன் 26 படங்களில் ஜோடியாக நடித்துள்ளேன். எம்.ஜி.ஆர் என்னுடைய அன்பு தெய்வம்.

சபாஷ் மீனா படம் தான் சிவாஜியுடன் நடித்த முதல் படம். அதில் சந்திரபாபுக்கு ஜோடி. சிவாஜிக்கு ஜோடியாக நடித்த முதல் படம் பாக பிரிவினை. சிவாஜி நடிப்பு வேறு ஸ்டைல். மலையாளத்தில் அப்போது மேலே துண்டு போடமாட்டாங்க, அதனால் நான் மலையாளப் படங்களில் நடிக்கவில்லை. கதைக்கு காட்சிக்கு ஏற்றவாறு நடித்து வந்தேன்.

சினிமாவுக்கு வரும்போதே எங்க அம்மா காதலிக்க கூடாது என சொன்னதால், யாரையும் காதலிக்கவில்லை. கல்யாணத்திற்கு பிறகு என் கணவர் நடிக்க அனுமதி அளித்தார், ஆனால் எங்க அம்மா அனுமதிக்கவில்லை.

எம்.ஜி.ஆருடன் நானே தொடர்ந்து நடித்து வந்ததால், பிற நட்சத்திரங்கள் அதைப் பற்றி பேசத் தொடங்கினார். அதனால் தான் வேட்டைக்காரன் படத்தில் எம்.ஜி.ஆருடன் நடிக்கவில்லை. சின்னப்பத் தேவர், எம்.ஜி.ஆர் எல்லாம் எனது கால்சீட்டுக்கு ஏற்ப எனக்கு ஒத்துழைத்தனர். கால்சீட் இல்லாததால் ஜெய்சங்கருடன் மட்டும் ஜோடியாக நடிக்கவில்லை.

பெண் நடிகைகள் பத்மினி, கே.ஆர் விஜயா போன்ற நடிகைகளுடன் நட்புடன் இருந்தேன். ராஜீவ் காந்தி அரசியலுக்கு அழைத்தார், எனக்கு விருப்பமில்லாததால் வரவில்லை. கமல்ஹாசன் என்னை அம்மா என்றுதான் அழைப்பார். ரஜினியும் நன்றாக பேசுவார். இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.
 

Leave a Reply