• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோ சொன்ன சந்திரபாபு; ஹிட் ஆக்கிய சிவாஜி-  இந்த பாடலில் இவ்வளவு பின்னணியா?

சினிமா

தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் முத்திரை பதித்த ஸ்ரீராமலு நாயுடு இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 1959-ம் ஆண்டு வெளியான படம் தான் மரகதம்.

தமிழ் சினிமாவில் க்ளாசிக் காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சந்திரபாபு. 1927-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பிறந்த இவர், நடிகர் இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் இருந்த நிலையில், சந்திரபாபு நிராகரித்த ஒரு பாடல் சிவாஜி படத்தில் இடம்பெற்று சூப்பர் ஹிட்டான வரலாறு தற்போது தெரியவந்துள்ளது.

கடந்த 1945-ம் ஆண்டு எஸ்.எம் ஸ்ரீராமலு நாயுடு தொடங்கிய பக்ஷிராஜா ஸ்டியோஸ் நிறுவனம் தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை தயாரித்துள்ளது. இதில் ஸ்ரீராமலு நாயுடு பல படங்களை தயாரித்ததோடு மட்டுமல்லாமல் பல படங்களை எழுதி இயக்கியுள்ளார். இதில் 1947-ம் ஆண்டு வந்த கன்னிகா, 1949-ல் பவளக்கொடி, 1952-ல் காஞ்சனா, உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

அதேபோல் 1954-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில் வெளியான மலைக்கள்ளன் திரைப்படத்தை தயாரித்த எஸ்.எம் ஸ்ரீராமலு நாயுடு பெரிய வெற்றியை பெற்றிருந்தார். அதேபோல் 1955-ம் ஆண்டு இந்தியில் வெளியான ஆசாத் திரைப்படம் அந்த ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்தது. இந்த படத்தை எஸ்.எம்.ஸ்ரீராமலு நாயுடு தயாரித்த நிலையில், திலீப் குமார் நாயகனாக நடித்திருந்தார்.

தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் முத்திரை பதித்த ஸ்ரீராமலு நாயுடு இயக்கம் மற்றும் தயாரிப்பில் கடந்த 1959-ம் ஆண்டு வெளியான படம் தான் மரகதம். கருங்குயில் குன்றத்து கொலை என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் கருங்கயில் குன்றத்து ஜமீன்தார் கொலை செய்யப்பட இந்த கொலைப்பழி அவரின் தம்பி மர மார்த்தாண்டன் மீது விழுகிறது.

இதனால் தனது மகள் மரகதத்துடன் இலக்கைக்கு தப்பிச்செல்லும் மர மார்த்தாண்டன். அங்கு கொள்ளைக்கூட்டத்தில் சிக்கிக்கொள்கிறார். அப்போது கருங்குயில் குன்றத்து இளைய ஜமீன் வரேந்திரனை சந்திக்கும் மரகதம் அவர் மீது காதல் கொள்கிறார். ஆனால் கொலைப்பழியுடன் இருக்கும் மர மார்த்தாண்டன் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் மரகதம் தனது தாயுடன் சென்று சேர்ந்து விடுகிறாள்.

வேலைக்காரனாக ஜமீனுக்குள் வரும் வரேந்திரன் கொலை செய்தது யார் என்று கண்டுபிடிக்கிறார். இந்த படத்தில் வரேந்திரனாக சிவாஜியும், மரகதமாக பத்மினியும் நடித்திருந்தனர். மர மார்த்தாண்டன் கேரக்டரில் இயக்குனர் எஸ்.பாலச்சந்தர் நடித்திருப்பார். சிவாஜியின் நண்பனாக சந்திரபாபு நடித்திருப்பார். எஸ்.எம் சுப்பையா நாயுடுவின் இசையில் கு,ம.சுப்பரமணியன் எழுத்தில் வந்த குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே என்ற பாடல் பட்டிதொட்டி எங்கிலும் பட்டையை கிளப்பியது.

மரகதம் படம் வெளியான ஒருவருடத்திற்கு முன்பு சந்திரபாபு நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சபாஷ் மீனா திரைப்படம், சந்திரபாவுக்கு பாராட்டுக்களையும் அழியா புகழையும் பெற்று தந்தது. இந்த படத்திற்காக டி.ஜி. லிங்கப்பா சந்திரபாபுக்காக போட்ட டியூன் தான் கும்குமப்பூவே பாடல். ஆனால் இந்த பாடலை விரும்பாத சந்திரபாபு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.

அதன்பிறகு டி.ஜி. லிங்கப்பாவிடம் இந்த டியூனை கேட்டு வாங்கிய எஸ்.எம் சுப்பையா நாயுடு மரகதம் படத்தில் சிவாஜிக்காக அந்த டியூனை பயன்படுத்தினார். இந்த பாடல் சிவாஜிக்கு கச்சிதமாக பொருந்திய நிலையில், பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சந்திரபாபு நிராகரித்த ஒரு பாடல் சிவாஜிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் மரகதம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த படத்திற்கு முரசொலி மாறன் வசனம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply