• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாலி எழுதிய பாடல்... குற்றம் சொன்ன எம்.ஜி.ஆர் : மோதலில் வென்றது யார்?

சினிமா

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி என இருவருடனும் ஒன்றாக பயணித்த இருவர் யார் என்றால் கவியரசர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி.

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் உச்சம் தொட்டவர் சிவாஜி என்றால், தனது படங்களின் சமூக கருத்துக்கள் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் எம்.ஜி.ஆர். சிவாஜிக்கு முன்பே எம்.ஜி.ஆர் திரைத்துறைக்கு வந்துவிட்டாலும், இருவரும் சமகாலத்தில் தான் சினிமாவில் நாயகனாக உருவெடுத்தார்கள்.

1960- காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் பிரிவு, சிவாஜி பிரிவு என இரு பிரிவுகள் இருந்தது. இதில் சிவாஜியை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எம்.ஜி.ஆரை வைத்து படம் தயாரித்ததில்லை. அதேபோல் எம்.ஜி.ஆர் படத்தின் தயாரிப்பாளர்கள் சிவாஜியை வைத்து படம் தயாரிப்பதில்லை. அதேபோல் தான் டெக்கினிக்கல் டீம், மற்றும் இயக்குனர்களும் இருந்துள்ளனர்.

இந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி என இருவருடனும் ஒன்றாக பயணித்த இருவர் யார் என்றால் கவியரசர் கண்ணதாசன் மற்றும் கவிஞர் வாலி. எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவருக்குமே இவர்கள் இருவரும் பெரிய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளனர். இதில் சிவாஜி படத்திற்கு குறைவாக எழுதியிருந்தாலும். வாலியை சிவாஜி படக்குழுவினர் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அதே சமயம் வாலியின் பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்ட எம்.ஜி.ஆர், இனி எனது படங்களில் வாலி தான் பாடல்கள் எழுதுவார் என்று வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதன்பிறகு தொடர்ந்து எம்.ஜி.ஆா படங்களுக்கு பாடல்கள் எழுதி வந்த வாலி, எம்.ஜி.ஆருடன் நெருக்கமாக இருந்தாலும், இருவருக்கும் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடு மோதல்கள் வந்துள்ளது. ஆனால் இந்த மோதல்கள் இவர்களுக்கு இடையில் இருக்கும் நட்பை பாதிக்கவில்லை.

அப்படி ஒருமுறை, எம்.ஜி.ஆர் வாலியை பார்க்க வேண்டும் என்று சொல்ல, உடனடியாக வாலி கிளம்பி ஏ.வி.எம்.ஸ்டூடியோவுக்கு சென்றுள்ளார். அங்கு வாலி எழுதிய பாடலுக்கு நடித்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர் வாலியை பார்த்தவுடன், அவரது தோல் மீது கைப்போட்டு செட்டுக்கு வெளியில் அழைத்து வந்து, இந்த பாடலில் எந்த பொருளும் இல்லை என்று கூறியள்ளார். இதை கேட்ட வாலி என்ன சொல்றீ்ங்க, அந்த பாடலில் பொருள் தெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.

ஆனாலும் எம்.ஜி.ஆர் தனது கருத்தில் உறுதியாக பாடலில் பிழை இருக்கிறது என்று சொல்ல, வாலிக்கு கோபம் வந்துவிட்டது. அதன்பிறகு வாலியின் தவறை நிரூபிக்கும் வகையில், தமிழ் பண்டிதர் ஒருவரை அழைத்த எம்.ஜி.ஆர், இந்த பாடலில் பொருள் உள்ளதா? பார்த்து சொல்லுங்கள் என்று சொல்ல, அவரும் பாடலில் பொருள் கொஞ்சம் குறைவாகத்தான் உள்ளது என்று கூறியுள்ளார். இதை கேட்ட, எம்.ஜி.ஆர் அப்புறம் என்ன வாலி தமிழ் பண்டிதரே சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார்.

எம்.ஜி.ஆர் சென்றவுடன், தமிழ் பண்டிதரிடம் வாலி, விசாரித்துள்ளார். அப்போது அவர், நீங்கள் எழுதிய பாடலில் எந்த பொருள் குற்றமும் இல்லை. ஆனால் எம்.ஜி.ஆர் முன் இதை நான் சொல்ல முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட, வாலி உடனடியாக செட்டுக்குள் சென்று, அண்ணே, உங்களுக்கு பாடல் பிடிக்கவில்லை என்று சொல்லுங்கள் வேறு பாடல் எழுதி தருகிறேன். ஆனால் இந்த பாடலில் பொருள் இல்லை என்று சொல்லதீங்க அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட எம்.ஜி.ஆர், நீங்கள் கிளம்புங்க நாளைக்கு பேசிக்கலாம் என்று எம்.ஜி.ஆர் சொல்ல வாலி அங்கிருந்து கிளம்பியுள்ளார். அன்று இரவு படத்தின் தயாரிப்பாளர் வாலியிடம் போன் செய்து, என்னயா இப்படி பண்ணீட்டீங்க, கொஞ்சம் அனுசரித்து போக கூடாதா? இப்போது நீங்க இனி சின்னவர் படத்திற்கு பட்டே எழுத முடியாது என்று சொல்ல, எனக்கு இருப்பதை யாராலும் எடுத்துக்கொள்ள முடியாது. அதேபோல் எனக்கு கிடைக்காததை யாராலும் தர முடியாது என்று வாலி கூறியுள்ளார்.

அடுத்து ஒரு வாரம் கழித்து மீண்டும் வாலியை தொடர்புகொண்ட அந்த தயாரிப்பாளர், சின்னவர் உங்க பாடலை ஏற்றுக்கொண்டார். படத்தில் மீதமுள்ள 4 பாடல்களையும் உங்களையே எழுத சொல்லியுள்ளார். நீங்கள் தோட்டத்திற்கு சென்று அவரை பார்த்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். அதன்பிறகு எம்.ஜி.ஆரை பார்க்க தோட்டத்திற்கு சென்ற, வாலிக்கு, உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளார் எம்.ஜி.ஆர். நான் அன்றைக்கு பேசியது உங்களுக்கு கோபமா அண்ணே என்று வாலி கேட்க, உனக்கு முகமூடி போட்டுக்கொள்ளாமல் என்னை நேருக்கு நேராக பேசியது மிகவும் பிடித்திருந்தது என்று எம்.ஜி.ஆர் பாராட்டியுள்ளார்.

தமிழச்சி கயல்விழி

Leave a Reply