• Welcome to TamilsGuide
செய்திகள் 1

30 வருடங்கள் முன் தொலைந்த கைப்பை - உரிமையாளரிடம் சேர்த்த சிறுமி

வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).

அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.

ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.

திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.

கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.

அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.

தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.

இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.

"சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.

மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply