• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களாக சேரவே பெரும் முயற்சி செய்ய வேண்டும்

சினிமா

தமிழ் சினிமாவில் உதவி இயக்குனர்களாக சேரவே பெரும் முயற்சி செய்ய வேண்டும். வடிவேலு சொல்வது போல் கஷடப்பட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, வேதனைப்பட்டு எல்லாம் பட்டாலும் இயக்குனர் வாய்ப்பு கிடைப்பதெல்லாம் குதிரைக்கொம்பு. எவ்வளவு தான் திறமை இருந்தாலும், வாய்ப்பு கிடைத்தாலும் எல்லாம் சரியாக அமைந்தால் மட்டுமே வெற்றி வரும். முதல் படம் சுமார் என்றால் கூட அடுத்த வாய்ப்பு கிடைப்பது கடினம். ஆனாலும் இவர்களால் சினிமாவை விட்டு போக முடியாது. சினிமாவும் இவர்களை விடாது. 90 களில் ஒரு இயக்குனருக்கு வாய்ப்பு கிடைத்தவுடன் டிஸ்கஷன் நடக்கும். கதையை மெருகேற்றுவார்கள். திரைக்கதை சீன்களை கூடிப் பேசுவார்கள். முதல் படம் சுமாராக எடுத்தவர்கள் அல்லது தோல்விப் படம் கொடுத்தவர்கள் பெரும்பாலும் இந்த டிஸ்கஷனில் கலந்து கொள்வார்கள். இவர்கள் திறமையானவர்கள் என்பதை இண்டஸ்ட்ரியே ஒத்துக் கொள்ளும். ஆனால் வாய்ப்பு மட்டும் கிடைக்காது. 

அப்படியான இயக்குனர்களில் ஒருவர் தான் இயக்குனர் மணிபாரதி. இயக்குனர் வசந்த் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குனராக இருந்தவர், சரண் உள்ளிட்டவர்களுடன் அசோசியேட் டைரக்டராகவும் பணிபுரிந்திருக்கிறார். ஏ வி எம் நிறுவனத்திற்காக சரண் ஜெமினி படத்தை இயக்கும் போது, இவரது திறமையைப் பார்த்து ஏ வி எம் நிறுவனமே இவருக்கு படம் இயக்க வாய்ப்பு தருகிறது. ஆனால் முதல் படத்தை இவரது கதையில் இயக்காமல், ரீமேக் படமாக இயக்குகிறார். அந்தப் படம் தான் "அன்பே அன்பே". படம் மோசம் என்று சொல்ல முடியாது. பெரிய பெரிய நட்சத்திரப் பட்டாளம் நடித்தாலும் படம் சுமார் தான். 
மணிபாரதி அவர்கள் உதவி இயக்குனராக இருந்த போது அவருக்கு " வள்ளி" படத்தில் பணிபுரியும் வாய்ப்பு வருகிறது. மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறார். அவர் சேரும் போது ஷூட்டிங் ஆரம்பிக்கும் கட்டம். உதவி இயக்குனராக அவரது சம்பளம் 5000 ரூபாய். அன்றைய காலகட்டத்தில் அது பெரிய சம்பளம் தான். வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. டிஸ்கஷன் நடக்கிறது. அதில் கலந்து கொண்ட ரஜினி, இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக சொல்லுங்கள் என்று முழு சுதந்திரம் கொடுக்கிறார். 
பிறகு படத்தின் இயக்குனர் நட்ராஜை அழைத்த ரஜினி, உதவி இயக்குனர்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று கேட்டிருக்கிறார். 5000 ரூபாய் தான் சம்பளம் என்றவுடன், உடனடியாக அதை மறுத்து, நம்ம கம்பெனி படம், எல்லாருக்கும் பெஸ்ட் சம்பளம் கொடுக்கனும் என்று சொன்னதோடு அல்லாமல், அனைவருக்கும் 15000 சம்பளம் என்று பிக்ஸ் செய்து, 5000 அட்வான்ஸாகவும் கொடுத்திருக்கிறார். அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி. 1992-1993-ல் 15000 சம்பளம் என்பதை கற்பனை செய்து பாருங்கள். 
பின்னர் பொள்ளாச்சி அவுட்டோர் ஷூட்டிங் சென்ற போது இரவு பகலாக ஷூட்டிங் நடந்திருக்கிறது. அந்தப்படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும் பெருங்கூட்டமிருக்கும். தொடர்ச்சியான ஷூட்டிங்கால் அனைவருமே சோர்வாக இருந்திருக்கிறார்கள். ரஜினியின் ஷெட்யூலுக்கு வந்தவர் யூனிட்டில் அனைவருமே சோர்வாக இருப்பதை பார்த்தவர், அனைவருக்கும் இரண்டு நாட்கள் விடுமுறை கொடுத்திருக்கிறார். அவுட்டோர் யூனிட்டில் லீவ் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. எவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வேலையை முடிக்க வேண்டும். லீவ் கொடுத்தது மட்டும் இல்லாமல் அனைவருக்கும் 2000 ரூபாய் செலவுக்கு கொடுத்திருக்கிறார் ரஜினி. 
பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் தன்னுடன் படித்த 18 பேருக்காக எடுக்கப்பட்ட படம் தான் வள்ளி. அவருடைய பால்ய நண்பர் ராஜ்பகதூரும் அந்தப் படத்தில் நடித்திருப்பார். அவருடைய நண்பர்கள் அனைவருக்கும் சம்பளம் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட தொகையை பிக்சட் டெப்பாசிட் செய்தும் கொடுத்திருக்கிறார் ரஜினி.  
மேன்மக்கள் மேன்மக்களே. 
சாய் வித் சித்ராவில் இயக்குனர் மணிபாரதியின் பேட்டியில் இருந்து. 
 

 

Leave a Reply