• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அருண் மாதேஸ்வரனை பார்த்த போது வெற்றிமாறன் ஞாபகம் வந்தது- தனுஷ்

சினிமா

தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம் 'கேப்டன் மில்லர்'. அருண் மாதேஸ்வரன் இயக்கி இருக்கும் இந்த படம் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வரலாற்று பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில், 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் பேசியதாவது, நான் 2002-ல் சிறுக சிறுக சேர்த்த துளி என்னால் இன்று பெரு வெள்ளமாக வந்துள்ளது. இது நான்சேர்த்த சொத்து. கில்லர் கில்லர் கேப்டன் மில்லர். இப்படத்தை பற்றி யோசித்தால் என் மனதிற்கு முதலில் வருவது உழைப்பு. எல்லோரும் வேர்வை, ரத்தம் சிந்தி நிஜமாக உயிரை பணயம் வைத்து எடுத்த படம் இது. அருண் மாதேஸ்வரன் உண்மையில் டெவில். மிகவும் மிருகத்தனமாக உழைப்புக்கு சொந்தக்காரர். அவரது மற்றும் இந்த டீமின் உழைப்பில் 50 சதவீதம் கூட நான் பண்ணவில்லை.

என்னை பூ போல பார்த்துக்கொண்டனர். நான் நிறைய புதுமுக இயக்குனர்களுடன் படம் பண்ணியுள்ளேன். சுப்பிரமணிய சிவா, பூபதி பாண்டியன், ஜவகர், பரத்பாலா ,வெற்றிமாறன். அருண் மாதேஸ்வரனை பார்த்த போது எனக்கு வெற்றிமாறன் ஞாபகம் வந்தது. தன்னம்பிக்கை, திறமை, அரகன்ஸ் எல்லாம் இவரிடமும் உள்ளது. கரோனா நேரத்தில் எனக்கு கதை சொன்னார். 15 நிமிடங்கள் இப்படத்தின் லைன் சொன்னார். நான் படம் பார்த்தேன் அப்படி இருக்கு. அப்படி பண்ணிட்டீங்க. நான் அவரை சந்திக்கும் போது ராக்கி வெளியாகவில்லை. என்னிடம் இந்த கதையும் சொல்லல. ஆனால் இது தெரிந்தது இது சம்பவம் பண்ற கை அப்படினு. நல்லவேளையாக நான் முதலில் பண்ணிட்டேன்.

நேரம் நல்லா இருந்தா நீங்கள் மிகப் பெரிய இடத்துக்கு செல்வீர்கள். ஜிவி எப்போ எது கேட்டாலும் உடனே ஓடிவருவார். சிவராஜ் குமார் நீங்கள் பல மேடைகளில் எனது ரசிகன் என்று சொல்லியுள்ளீர்கள் அதற்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. நீங்கள் சிரிக்கும் போது உங்கள் முகத்தில் உங்கள் அப்பா, தம்பி தெரிகிறார்கள் மூன்று பேரும் சிரிப்பது போலதான் உள்ளது. அப்பா பெயரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்று உங்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். கேப்டன் மில்லர் படத்துக்கு அருண் மாதேஸ்வரன் வைத்துள்ள டேக் லைன் மரியாதை தான் சுதந்திரம். இப்போ எதுக்கு இங்க மரியாதை இருக்கு யாருக்கு சுதந்திரம் இருக்கு. எது செய்தாலும் அதில் குறை சொல்ல ஒரு கூட்டம் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறது.

சின்ன கூட்டம் தான் ஆனால் இருக்கிறது. அது உனக்கு இது எனக்கு என்பது எதற்கு ... அவன் (இறைவன்) முடிவு செய்யட்டும் அப்போது பாத்துக்கலாம். எது எதற்கோ ஓடுகிறோம் செய்கிறோம் ஆட்டம் எல்லாம் ஆடுகிறோம். நமது குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனால் அந்த ஆட்டம் நின்றுவிடும் நமது முக்கியத்துவம் எது என்று தெரிந்துவிடும். இந்த படம் ரொம்ப புதுசாக இருக்கும் என்று நம்புகிறேன். முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வடசென்னை 2 வரும். கண்டிப்பா வரும். அதுக்கு என்று ஒரு நேரம் இருக்கு. இத்தனை உள்ளங்கள் வேண்டும் வேண்டும் என்று சொல்லும்போது வராமலா போய்டும் அது வரும் போது அது பத்தி பேசலாம். மாரி செல்வராஜ் மீது மரியாதை கூடிக்கொண்டே போகிறது. நம்ம படத்தை பத்தி நிறைய பேச வேண்டும். அதை பிறகு பேசலாம். எண்ணம் போல் வாழ்க்கை.. எண்ணம் போல்தான் வாழ்க்கை என்று பேசினார்.
 

Leave a Reply