• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வர்த்தக தீபம் 2023

கனடா

இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்-கனடா அமைப்பின் “வர்த்தக தீபம் 2023” நிகழ்வு மற்றும் இவ்வருடத்திற்கான “இலங்கை கனடா வர்த்தக வெற்றியாளர் விருதுகள் வழங்கும் விழா” கடந்த செவ்வாய்க்கிழமை 2023-12-26 அன்று மிகவும் சிறப்பாக Scarborough Convention Center மண்டபத்தில் நடைபெற்றது.

மண்டபம் நிறைந்த விழாவாக அமைந்த இந்த வர்த்தகதீபம் விருது வழங்கும் விழாவிற்கு கனடிய தமிழர் சமூகத்தில் பல்வேறு துறைகளில் பிரகாசிக்கும்முக்கியமான தமிழ் சமூகப் சமய பெரியார்கள் அந்த பிரமாண்டமான மண்டபத்தை அலங்கரித்து அழகு செய்தார்கள். கனேடிய சமுதாயத்தின் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்ட தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களை மென் மேலும் வளர்ச்சிப்பாதையில் முன்னோக்கி செல்லும் நோக்குடன் பதினோராவது ஆண்டு விருதுகள் வழங்கும் விழா சிறப்பான இராப்போசனத்துடன் பல்சுவை கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இனிதே நடந்தேறியது பாராட்டுதல்களுக்குரியதாகும். இந்த விழாவில் அனைத்துத் துறை சார்ந்த வர்த்தகர்களுக்கும், வளர்ந்து வரும் தொழில் முனைவோர்களுக்கும் விருதுகள் வழங்கி கெளரவம் செய்யப்பட்டதுடன் சமூகம் மற்றும் ஊடகத்துறை சார்ந்த விருதுகள் என ஒன்பது சிறப்பான விருதுகள் வழங்கியமை மண்டபத்தில் இருந்த அனைவரையும் அவர்களின் வளர்ச்சி கண்டு ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையாகாது.

கனடா இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்க தற்போதைய தலைவர் திரு சோம சச்சிதானந்தன் அவர்கள் தலைமையுரையாற்றினார். அவர்களின் தலைமை உரையில் சங்கத்தின் ஆரம்பமும் தாயக மக்களுக்கு ஆற்றிவரும் பணிகளையும் குறிப்பிட்டதோடு விழாவின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்து செயல்பட்ட முன்னாள் தலைவர்கள் திரு. கோபால், திரு.கேதா நடா மற்றும் அனைத்து நிர்வாகசபை உறுப்பினர்களுக்கும் நிறைந்த பாராட்டுக்களையும் ஆதரவு வழங்கிய. வர்த்தக பெருமக்களுக்கும் இதயம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்து கொண்டார். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் சமூக மட்டத்திலான தமிழர் தகவல் ஆசிரியர் திரு.எஸ். திருட்செல்வம் அவர்கள் கனடாவின் பிரபல மூத்த ஊடகவியாலாளர்களை அறிமும் செய்து சிறப்பான அறிமுக உரையினை வழங்கியிருந்தார். சங்கத்தின் பொருளாளர் திரு. க.கருணானந்தன் அவர்களின் வரவேற்புரையும் இடம்பெற்றன. இவ்வருடத்திற்குரிய விருதுகளைப் பெற்றவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்று கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களை கௌரவம் செய்தவர்கள் கூட எமது தமிழர் சமூகத்தின் முக்கிய ‘தூண்களாக’ கருதப்படுகின்றவர்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இலங்கை முன்னாள் வர்த்தகர்கள் சங்கம்-கனடா அமைப்பின் முன்னாள் தலைவர்கள் மேடைக்கு அழைக்கப்பெற்று சபையோருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றனர்.

இளைப்பாறிய முன்னாள் கனேடிய அரசாங்கத்தில் வருமானவரித்துணைக்களத்தில் உயர் பதவியை வகித்தவரும் தாயக மண்ணில் பிரபல்யமான பொருளியல் ஆசிரியராகவும் மற்றும் உதவி அரசாங்க அதிபராகவும் பதவி வகித்த உயர் திரு செந்தில் ஆறுமுகம் அவர்கள் இம்முறை விழாவின் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தமை விழாவின் வெற்றியினை பன்மடங்கு மெருகூட்டியது. செந்தில் அவர்களின் ஐந்து நிமிட பேச்சு எல்லோரையும் மௌனத்தில் ஆழ்த்தி ஆழமாக கிரகிக்க வைத்தது.

பரதநாட்டியக் கலையை அனைவருக்குமான கலையாக மாற்ற வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு பலரின் பாராட்டுகளை பெற்று மென் மேலும் பரதக்கலையினை கனடாவில் வளர்க்கும் நோக்குடன் தங்களது பிள்ளைகளையும் முழுமையாக உள்வாங்கி பரதக்கலையின் அரசி என எல்லோராலும் அழைக்கப்படும் சிதம்பர நடன பள்ளி அதிபர் கௌரி பாபு அவர்களின் இருபதுக்கும் மேலான மாணவிகள் பங்கெடுத்த நடனங்கள் மண்டபம் நிறைந்த அனைவரையும் மனம் குளிர வைத்தது. வயோதிபர்களுக்கு இன்ப அதிர்ச்சியை இதயங்களில் உருவெடுக்க வைத்தது. நிழ்வில் பங்கெடுத்த மாணவர்கள் மாணவிகள் அனைவருக்கும் சிறப்பான விருதுகளுடன் வீடு விற்பனை முகவர் சசி சன்முகநாதன் அவர்களின் அன்பளிப்பு பொதிகளும் வழங்கியமை பாராட்டுதல்களுக்குரியதாகும்.

விழாவின் சிறப்பம்சமாக மெகா tuners இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்ததோடு தாயகத்தில் இருந்து வந்த பிரபல தாயகப்பாடகர் சாந்தனின் புதல்வரும் மற்றும் வருமானவரி தனம் கனகரெட்ணம் அவர்களின் பாடல்களும் சபையோரின் நிறைந்த பாராட்டுக்களை பெற்றன மட்டுமின்றி நேயர்களின் பல விருப்பமான பாடல்களையும் எந்தவித ஒத்திகையும் இன்றி அரவிந்தனின் இசையில் வழங்கியமை எல்லோரையும் ஆச்சரியத்தில் உண்டு பண்ணியது. விஷேடமாக அமைப்பின் தலைவர் சோம சச்சிதானந்தன் அவர்கள் மிகவும் உச்சஸ்தாணியில் அமைந்த “மருதமலை மாமணியே” என்ற பாடல் அனைவரையும் கைத்தாளம் அசைத்து முணுமுணுக்கவும் வைத்தது.

வழமைபோல ஏலம் கூறும் நிகழ்வும் மனதை கவரும் வகையாக அமைந்தது. ஏலம் கூறும் நிகழ்வினை இலங்கேஸ் அவர்கள் தலைமை தாங்கி நிகழ்விற்கு பெருமை சேர்த்தார். ஏலத்தில் பெறுமதி வாய்ந்த தங்க நகையினை ஓம்மீரா நகைமாளிகை உரிமையாளர்கள் வழங்கியிருந்ததோடு தம்பதிகளாக வருகை தந்து விழாவை சிறப்பித்தனர். ஏலத்தில் இரண்டாயிரம் டாலர்கள் அதிகூடிய ஏலத்தின் கூறல் விலையினை வியாபார அதிபர்கள் அபி மற்றும் அமலன் ஆகியோர் தம்பதிகளாக ஏற்றுக்கொண்டது அவர்களின் பங்களிப்பினை இமய மலைக்கு உயர்த்தி சென்றது. இவ் ஏலத்தில் பெற்றுக்கொண்ட தொகையானது தாயகத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழாக வாழும் அல்லலுறும் மக்களுக்கு சென்றடைவது அமைப்பின் தாயக நோக்கிலான மனிதாபிமான உதவித்திட்டங்களின் ஓர் அலகு என்பதனை உறுதி செய்தது மட்டுமன்றி எல்லோரது பலத்த கை அசைவுகளுடன் பாராட்டு மழையினையும் ஊற்றெடுக்க வைத்தது.

விருது வழங்கும் நிகழ்வினை சிறப்பிக்க கனடாவின் முதன்மை பத்திரிகையான உதயன் பத்திரிகை ஆசிரியர் திரு ஆர் என் லோகேந்திரலிங்கம் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழாவின் இறுதியில் உதவும் பொற் கரங்களின் (Helping Golden Hands” ஸ்தாபகரும் தலைவருமான திரு விசு கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அவர்கள் ஆற்றிவரும் சமூகப்பணி மற்றும் அமைப்புக்கு வழங்கிவரும் பங்களிப்புக்கு மதிப்பளித்து சிறப்பான கௌரவ விருது வழங்கி கௌரவித்தது அமைப்பானது எவ்வித பாகுபாடுமின்றி கிழக்கிலங்கையையும் ஒன்றிணைத்து செயல்படுவதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதோடு சென்ற ஆண்டில் மட்டக்களப்பு மாநகரை சேர்த்த வர்த்தகரை சங்கம் விருது வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.

விழாவின் மற்றுமொரு சிறப்பம்சமாக வர்த்தக தீபம் என்ற சஞ்சிகை மிகவும் சிறப்பாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது. சஞ்சிகையினை மிகவும் சிறப்பான ஓர் மலராக வெளியிட்ட “Designs 2 Prints Ltd.” அதிபர் பிரபாகர் அவர்களுக்கும் மலரின் முகப்பினை சிறப்பாக வடிவமைத்த கென் கிருபா அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகுக. சஞ்சிகையின் வடிவமைப்புக்கு ஓர் பிள்ளையார் சுழி. 2023 வர்த்தகதீபம் நிகழ்வும் அருமையான விருந்தும் பார்வையாளர்கள் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திவிட்டதென்றே கூறலாம். இதற்காக உழைத்த சங்க தலைவர், அனைத்து நிர்வாகத்தினருக்கும் மற்றும் தொண்டர்களுக்கும் நிறைந்த பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகுக.
 

Leave a Reply