• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுருளி ராஜன் - ஒரு நிருபரின் டைரியி லிருந்து 

சினிமா

சென்னை எல்டாம்ஸ் ரோடிலிருக்கும் ஒரு ஹோட்டலின் வாசலில் பத்துப் பதினைந்து நடிக நண்பர்கள் நின்று கொண்டு சிரித்து அரட்டையடித்துக் கொண்டிருப்பார்கள். அவர்களின் மத்தியில் நடிகர் சுருளிராஜனைப் பார்த்திருக்கிறேன். பிரபல நடிகரான பிறகும் கூட அவர் அங்கு அந்த நண்பர்கள் மத்தியில் காணப்பட்டார்.பழகுவதற்கு மிக இனிமையானவர்.

செட்டில் நடிக்க வந்துவிட்டால் தொழில்மீது அதிகக் கவனம் செலுத்துவார். காட்சிக்கான காமெடி எப்படி இருக்கவேண்டும் என்று விவாதிப்பார். யாராவது ஏதாவது ஜோக் சொன்னால்கூட எடுத்துக் கொள்வார். கூட நடிப்பவர்களையும் தாராளமாக ஜோக் அடிக்க விடுவார்.

சாப்பாடோ, டிபனோ பல நட்சத்திரங்கள், ``எனக்கு புகாரியிலிருந்து வாங்கி வா... எனக்கு உட்லண்ட்ஸிலிருந்து கொண்டு வா...'' என்று கட்டளையிடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

ஆனால் சுருளியிடம் அந்தக் குணம் கிடையாது. ஒரு பன், ஒரு டீயை வாங்கிக் கொடுத்து விட்டு நடிக்கச் சொன்னாலும் நடித்துக் கொண்டேயிருப்பார்!ஷூட்டிங் முடிந்ததும் கார் இல்லையென்றால் டாக்ஸியோ, ஆட்டோவோ எது கிடைத்து ஏற்றி விட்டாலும் சந்தோஷமாக வீட்டிற்குப் போய் விடுவார்.

நீண்ட நாட்கள் இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார். பின்னர்தான் கார் வாங்கினார்.

தரையில் கையைத் தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டுதான் அநேகமாகத் தூங்குவார். ஒரு முறை ஸ்டூடியோவில் அவரை இப்படிப் பார்த்ததும் ``ஏன், சோபாவில் படுத்துத் தூங்கலாமே!" என்று கேட்டதற்குச் சுருளி சொன்னார்: ``இப்படித் தரையில் தூங்கற செளகரியம் வேறே எதிலேயும் இல்லீங்க, இது பழகிப் போச்சு!"அவரது `சிம்ப்ளிஸிடி' வியப்புக்குரியதாக இருக்கும்.

அவர் அப்படி அசந்து தூங்கிக் கொண்டிருக்கும்போதுகூட எழுப்பி என் கேள்விகளைக் கேட்டிருக்கிறேன். முகம் சுளிக்காமல் பதில் சொல்லியிருக்கிறார்.இனி அவரை எப்படி எழுப்புவேன்? 

- பாலா

(14.12.1980 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

Leave a Reply